#கல்வி_அரசியலை_மாற்றுவோம்
#வகுப்பறை_உளவியல் 20
எனது மாணவர்களின் அன்றாட வகுப்பறை அணுகுமுறை உளவியல் பற்றி தொடர்ந்து பதிவிட்டதைப் படித்திருப்பீர்கள். எல்லாப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுமே ஒன்னு தானுங்க, அவர்கள் பாடங்களை விட பரிவும் , அன்பும் , சிரிப்பும் , சிந்தனையும் நிறைய எதிர்பார்ப்பவர்கள் , இவற்றை எல்லாம் கொடுத்து விட்டாலே பாட நூலை அவர்களே கையில் எடுத்துக் கொள்வார்கள்.
இந்தக் கல்வியாண்டின் தொடக்கத்தில் ஜூன் முதல் வாரமே எழுதியிருந்தேன். அதில் 45 குழந்தைகள் 23 பலதரப்பட்ட பள்ளிகளிலிருந்தும் வந்து ஒரே வகுப்பறையில் எனக்கு மாணவிகளாக வந்தனர்.
அரசுப் பள்ளி இல்லையா ? அக்டோபர் வரை சேர்க்கை வந்தது அவர்கள் 49 பேர் ஆனார்கள் , முதல் ஒன்றரை மாதம் அறிவியல் பாடம் எடுத்தேன் அவர்களுக்கு , அதன் பிறகு கணினி வழி கணித வகுப்பறைகள் வந்ததால் கணக்குப் பாடம் எடுக்கப் பணிக்கப்பட்டேன். (அறிவியல் பாட வகுப்பை நானும் குழந்தைகளும் நிறைய மிஸ் பன்றோம்ங்கறத தனிக் கதை )
அதனால் ஆகஸ்ட்டிலிருந்து தான் என் குழந்தைகளுக்கு கணக்கு ஆசிரியராக மாறிய பிறகு , Lab பற்றிய விபரங்கள் கூட இங்கு கூறியிருந்தேன். இப்போ சொல்ல வருவது என்னன்னா ,
இறுதிப் பருவ விடைத்தாள்கள் திருத்திய பிறகு மனதின் சிறகுகள் விரிந்தன. 8 மாதமாக கணிதப் பாடம் கணினி வழி கற்றனர். இந்த குறிப்பிட்ட மூன்றாம் பருவ பாட நூல் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2 மாதங்கள் மட்டுமே பயிற்சி , அதுவும் வகுப்பறை கற்பித்தல் கிடையாது. Lab ல தான் ..
ஆரம்பத்தில் 49 குழந்தைகளில் 25 மாணவிகள் கணக்கில் அடிப்படை செயல்களான கூட்டல் , கழித்தல் ,பெருக்கல் , வகுத்தல் இவற்றில் பயங்கர குளறுபடி , முழுவதும் தெரியாமல் , பாதித் தெரிந்து தெரியாமல் இருந்தனர். அத்தனைக்கும் அந்த 20க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளே காரணம் , இலட்சக்கணக்கில் 8 வருடங்கள் (Pre_kg , LKG , UKG , 1, 2 , 3 , 4 , 5 ) பணத்தை வாங்கிட்டு ஒரு திறனும் வெளிக் கொணராம குழந்தைகளையும் பெற்றோர்களையும் ஏமாற்றிய கூட்டங்கள்.
அவர்களை சபித்துத் தான் இவர்களுக்கான விமோச்சன்ததை ஆரம்பிக்க வேண்டியிருக்கு , அப்படி அடிப்படைச் செயல்பாடுகளில் இருந்து ஆரம்பித்த கணினி வகுப்புப் பயிற்சி தான் இன்றைய இறுதித் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் போது நிறைவாக இருந்தது.
10 ஆம் வகுப்பு மாணவிகளை எண்ணி ஒரு புறம் மிக வருத்தமாக இருந்தாலும் 6 ஆம் வகுப்பு மாணவிகள் தேர்ந்த திறன் படைத்த குழந்தைகளாக என் பார்வையில் மகிழ்ச்சியைத் தருகின்றனர் ,
இவர்களும் அதே சூழலில் இருந்து வரும் பலதரப்பட்ட குழந்தைகளே. ஆனால் அணுகுமுறையும் பயிற்சியும் இவர்களுக்கான இடத்தை தக்க வைத்த மிக முக்கிய உளவியல் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். அதே போல புதிய தொழில் நுட்பமும் சிறு பங்களிப்பைச் செய்தது என்றால் மிகையாகாது.
கணக்கு என்றால் எங்கள் வகுப்பறை ரொம்ப ரிஜிட் ஆக எல்லாம் இருக்காது. வீட்டுக்
கதை பேசுவோம் , உரையாடுவோம் , வாசிப்போம் , விளையாடுவோம் , அன்பைப் பரிமாறிக் கொள்ளுவோம் , நாட்டு நடப்பு பேசுவோம் , கதை எழுதுவோம் , நிறைய கலாட்டாக்கள் நடக்கும் ...
என்றுமே சிலபஸ் பற்றிய பயத்தைக் குழந்தைகளிடம் காண்பித்ததே இல்லை. ஆனால் மீத்திறன் குழந்தைகளது ஆர்வத்திற்கும் தீனி போடாமல் இல்லை ...
இதன் விளைவு அவர்கள் சுதந்திரமாகக் கற்றனர். மார்ச் மாதம் முழுவதும் நிறைய விடுமுறை நாட்கள் பொதுத் தேர்வு காரணமாக இருந்தாலும் 6 ஆம் வகுப்புக் குழந்தைகள் அவர்களது தேர்வு விடைத் தாள்களில் தங்கள் உழைப்பையும் சிரத்தையையும் காட்டியிருந்தனர். அதற்கு சாட்சி நான் தான். அது பற்றிய ஒரு சிறிய ஆய்வை இங்குத் தருகிறேன் ,
வினாத்தாள் கிரியேட்டிவிட்டி கலந்து தான் இருந்தது. கணினி வழிக் கணிதத்தில் பாட நூலைப் பின்பற்ற மாட்டோம். ஆனால் பாடத்திட்டம் அவர்களுக்கானது. அதே கலைத் திட்டத்தின் (Curriculam) பிரிவின் பாடத்திட்டக் (syllabus) குறிப்புகள் அவர்களுக்கானதே .
விடைத்தாள்களில் 90 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 7 பேர் (12% மாணவிகள் ) , 80 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 10 பேர் (20% மாணவிகள் ) , 65 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 10 பேர் (20% மாணவிகள் ) , 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 15 பேர் (31% மாணவிகள் ) , 30 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 4 பேர் (8% மாணவிகள் ) , 16% சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தனர் 3 பேர் (6% மாணவிகள் ) , எனில் ......
சராசரியாக 50% மதிப்பெண்களும் அவற்றிற்கு அதிகமான மதிப்பெண்களும் பெற்றவர் 42 பேர் அதாவது 80% , எனில் கற்றலில் குறைபாடு உள்ளவர்கள் வெறும் 7 பேர் தான் , இவர்களையும் வரும் காலங்களில் இன்னும் சற்றே அடுத்த நிலைக்கு நிச்சயமாக அழைத்துச் செல்ல இயலும் , இப்படியான திறனுள்ள
குழந்தைகள் தான் எல்லாப் பள்ளிகளிலும் அது அரசுப் பள்ளி என்றாலும் சரி , தனியார் பள்ளி என்றாலும் சரி .
தேர்வு வினாத்தாள் வினாக்கள் பாடநூலை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்க , அதனையும் அழகாக எதிர்கொண்டனர் எனது அசாத்தியத் திறமை கொண்ட குழந்தைகள் .
ஆனால் 6 ஆம் வகுப்பில் இப்படி வரும் குழந்தைகள் தங்களது பள்ளி வாழ்க்கை முடியும் போது எதற்குமே லாயக்கற்றவர்களாக முத்திரை குத்தப்பட்டு தேர்ச்சி மதிப்பெண் அட்டைகள் வழியே அடையாளப்படுத்துவது ஏனோ ?
கல்வித்துறையும் ஆசிரியர்களுமே இதற்கான பொறுப்பாளர்கள் . கற்பித்தல் முறைகளை குதிரைக்கடி வாளமாகப் பின்பற்றாமல் சுதந்திரமான ஜனநாயக
வகுப்பறைகளை அமைத்துக் கொள்ள ஆசிரியர்கள் முன் வர வேண்டும்.
#கல்வி_அரசியலை_மாற்றுவோம் வாரீர்
தொடரும்
உமா
No comments:
Post a Comment