#கல்வி_மறுக்கப்படுகிறதா_??? ( பாகம் - 5)
#டிஜிட்டல்_இந்தியாவா ?
#கற்கால_இந்தியாவா ?
தேர்வு விடைத் தாள் திருத்தும் பணியில் ஆரம்பமே அபத்தங்கள் ..
நேற்றிலிருந்து 6-9 வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் பள்ளிகளில் நடந்து வருகின்றன .
இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் ஆரம்பம். பள்ளியில் உள்ள மொத்த பட்டதாரி ஆசிரியர்களும் நேற்று மாலை பணி விடுவிப்பு செய்யப்பட்டு விட்டனர் , ( துறையின் ஆணை)
அப்போ அத்தனைக் குழந்தைகளுக்கும் தேர்வு நடத்த ஆசிரியர்கள் இருக்கின்றனரா ? கேள்விக் குறி தான் , அது தலைமை ஆசிரியரின் தலைவலி .
சரி , காலை 8.15க்கே AE க்கள்( திருத்தும் ஆசிரியர்களுக்கான பெயர் - Assistant Evaluators) சம்மந்தப்பட்ட மையத்திற்கு சென்று விட வேண்டும் என்பது தலைமையாசிரியர்களின் உத்தரவு .
இதில் பயப்பட்டு 8 மணிக்கு மையத்தை அடைபவரும் , அடித்து பிடித்து சென்னையின் போக்குவரத்து நெரிசலில் ஷேர் ஆட்டோ , பேருந்து , ரயில் என பலவாறு பிரயாணம் செய்து ஓடி வந்து அட்டென்டன்ஸ் போடுபவரும் உண்டு. எந்த ராஜா ஆட்சி செய்தா நமக்கென்ன ? நமக்கு அங்கு சிபாரிசு செய்ய ஆட்கள் இருக்காங்க என்று மெத்தனமாக 11 மணிக்கு வரும் புத்திசாலி ஆசிரியர்களும் அடங்குவர். அது ஒரு புறம் ..
சரி ... இதில் வீட்டு வேலையெல்லாம் முடிச்சு , சர்க்கரை , பிரஷர் , இத்யாதி உடல் நலக் குறைபாடுடன் பயந்து ஒடி வரும் பெண்ணாசிரியர்கள் தான் 80% க்கு மேலே.
8.15 (மு.ப )அவங்க கணக்கிலேயே வருவோம் , இப்போ நான் எழுதறப்போ 11.15 ( மு.ப ) வரை இன்னும் அவர்களுக்கு சரியான அறை ஒதுக்கப்படவில்லை , வெய்யில்ல தான் அலைந்து கொண்டு உள்ளனர். இதுவல்ல இப்போ பிரச்சனை ,
டிஜிட்டல் இந்தியா ன்னு பெருமை பேசும் நாம் , கல்வித் துறையில் பெயருக்காக மட்டுமே ... ஏன் பள்ளிகள் பெயர் , ஆசிரியர் பெயர் , பாடங்களின் பெயர் என எல்லாமே அப்டேட் இருக்கும் தானே. இதற்கான குழுவும் போடறீங்க , முன்னாடியே குறிப்பிட்ட பள்ளியில் இருந்து சம்மந்தப்பட்ட பாட ஆசிரியருக்கு இந்த மையத்தில் இந்த CE (Chief Evaluator) க்கு கீழ் பணி என்று குறிப்பிட்டு பள்ளிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டியது தானே ?
ஏன் ஆட்டு மந்தைகள் போல ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தாலும் அத்துனை பேரையும் மொத்தமாக பணி விடுப்பு செய்து , மையம் வந்து சந்தைக் கூட்டமாக அலைய வைக்கும் நிலை ஏன் ?
ஒரு மாவட்டத்திற்கு அல்லது மையத்திற்கு இத்தனை விடைத்தாள்கள் கட்டுகள் வந்துள்ளன என உரிய அதிகாரிகளுக்குத் தெரியும் , அப்போ அதற்கு தேவையான ஆசிரியர்கள் எண்ணிக்கையை பணிக் கால அனுபவப் படி தேர்வு செய்து பட்டியல் அனுப்புவதில் என்ன குழப்பம் ?
ரேஷன் கடைகளில் கூட வரிசைக் கிரமம் இருக்க , இந்த மையங்களில் மட்டும் ஏன் தள்ளு முள்ளு ? உ. ம் கணிதப் பாடத்திற்கு 15 CE தேவை என இருந்தால் 150 AEs போதுமே , 150 ஆசிரியர்களை மட்டும் தேர்வு செய்து பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டியது தானே , அதை விடுத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஏன் மொத்தமாகப் பள்ளிகளிலிருந்து அனுப்பி , திருப்பி அனுப்புவதோ , தள்ளு முள்ளுவில் சிக்க வைப்பதோ எதற்கு ?
திட்டமிடாத பணியால் பாதிப்படைவது பள்ளிக் குழந்தைகளே , ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்தாலும் தேர்வு நடத்துவார்களே ,
ஒவ்வொரு ஆசிரியரும் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் புலம்புவது எங்கு திரும்பினாலும் காதில் விழுகிறது. பலரும் பேசும் போது இது போல மிகக் கேவலமான நாட்களை இதுவரை நாங்கள் பார்த்ததில்லை என்றனர்.
மற்றும் சிலர் எதுக்கு இவ்வளவு குளறுபடிகள் .... வருத்தமாக இருக்கிறது என்று வேதனைப்படுகின்றனர் .இவ்வளவு வேகாத வெயிலில் நிற்க வைத்து அலைய வைத்து , பேப்பர் வேறு திருத்த வேண்டுமே என்று அமைதியான முறையில் புலம்புகின்றனர்.
இது பற்றி சங்கப் பொறுப்பாளர்களிடம் நான் கேட்டபோது , இந்த நவீன டிஜிட்டல் காலத்தில் இவற்றை எல்லாம் முறைப்படுத்தக் கூடாத என்றதற்கு , தலைமை ஆசிரியர்கள் தரப்பிலிருந்து நேர்மையான முறையில் பணி விடுப்பு செய்ய மாட்டார்கள் என்றும் , DE0 அலுவலகத்தில் தங்களுக்குத் தேவையான நபர்களுக்கு மட்டும் டியூட்டி போட்டு வாங்கிக் கொள்வார்கள் , நியாயம் , நேர்மை கடைபிடிக்கப்பட மாட்டாது என்கிறதோடு ,
இது திறந்த வெளி சாளர முறை , என்றும் கூறுகிறார். தகுதியானவர்களை தரம் பிரித்து எடுப்போம் என்பவரிடம் அதை பள்ளியிலேயே செயல்படுத்த முடியாதா என்றேன். மற்றொரு அடுத்த நிலை சங்கப் பொறுப்பாளர் என்னைப் பார்த்து , அய்யோ இவர் மிக அட்வான்ஸாக இருக்கிறார் , நம்ம சிஸ்டம் அப்படியில்லை என்பவருக்கு எனது கேள்வி , அப்படித்தான் சிஸ்டத்த மாத்துங்களே என்பது.
பொது மக்களே , பெற்றோரே , சமூக செயல்பாட்டாளர்களே ... இங்கும் மக்களது வரிப்பணம் கல்விக்காகத் தான் செலவழிக்கப்படுகிறது.
பிரயோஜனமாக அதை செலவழிக்காமல் போவதும் கல்வி மறுக்கப்படுவதாகவே அர்த்தம் .
கவனமாக இருங்கள்
தொடரும்
உமா
No comments:
Post a Comment