கல்வி மறுக்கப்படுகிறதா ? ?? ( பாகம் - 3)
(இன்று தமிழ் இந்து நாளிதழ் திசை இணைப்பில் வெற்றிக் கொடி பகுதியில் ஒரு கட்டுரை கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் பற்றி வந்துள்ளது. இது சார்ந்து தேர்வு பற்றிய களப்பிரச்சனை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்கிறேன் )
மிஸ் ..உங்களுக்கு எங்கே எக்ஸாம் டியூட்டி ?
எனக்கு Scribe டியூட்டிங்க மிஸ் , பயமா இருக்கு ..... நானோ இடைநிலை ஆசிரியர் , எனக்கு 10 ஆம் வகுப்பு பாடம் எதுவுமே தெரியாது. அந்தக் குழந்தை சொல்லுமா ? என்ன எதுக்கு போட்டாங்க என ஒரு புலம்பல்.
பட்டதாரி ஆசிரியர்களுக்குள்ளான ஒரு உரையாடல் ...
நான் தமிழ் டீச்சர் , என்னை +2 கணக்கு குரூப்க்கு ஸ்க்ரைப் பா போட்டா நான் எப்படிப் பா பரீட்சை எழுதுவது ? நானே சைன்ஸ் , என்னப் போய் காமர்ஸ் எக்ஸாம் எழுதச் சொல்றாங்களே ...
இப்படியான தொடர் புலம்பல்கள் பொதுத் தேர்வு சமயங்களில் பள்ளி வளாகங்களில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
சரி , இந்த Scribe எழுதும் ஆசிரியர்கள் எதற்கு ?
நமது கல்வி முறையில் உள்ளடங்கிய கல்வி (Inclusive Education ) என்ற முறைதான் பள்ளிக் கல்வியில் பின்பற்றப்படுகிறது. இதில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களும் இணைந்து சாதாரண குழந்தைகளுடன் கல்வி கற்பது.
முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உடல் ஊனமுற்ற குழந்தைகள் ,பார்வைத் திறன் அற்ற குழந்தைகள் , காது கேட்கும் திறன் இல்லாதவர் இப்படி 21 ( As per rights of disability act 2016) வகையான குறைபாடுள்ள குழந்தைகள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 20,000 பேர் நடப்புக் கல்வியாண்டில் படிப்பதாகத் தகவல் ,
இவர்களுள் கண் பார்வையற்றவர் , மன நலம் குன்றியவர்கள் , டிஸலக்ஷியா ஆகிய மூன்று பிரிவுக் குழந்தைகளுக்கு அரசு தேர்வுகள் துறை வழியே Scribe ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றது. கல்லூரி மாணவர்களுக்கும் இந்த நடைமுறைகள் உண்டு. ஆனால் நாம் இங்கு பள்ளிக் குழந்தைகளை மட்டும் மையப்படுத்துகிறோம்.
இக்குழந்தைகள் சொல்வதை எழுதுவதற்கு நியமிக்கப் படும் ஆசிரியர்கள் எழுத வேண்டும் என்பது ஆசிரியர்களுக்கு சொல்லப்படும் வாய் வழி கட்டளைகள்.
ஆனால் , குழந்தைகள் சொல்வார்களா என்றால் , 90% சொல்ல மாட்டார்கள் , ஏனெனில் நாம் நன்கறிவோம். இது போன்ற குழந்தைகள் பள்ளிக்கு வருவது மிக உளவியல் சார்ந்த சிக்கல் , அதன் பிறகு அவர்களுக்குத் தனிக் கவனம் செலுத்துவது என்பது ஆசிரியர்களுக்கு மிகப் பெரிய சவால். அதையும் தாண்டி ஓரளவிற்கு 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் ஆசிரியர்கள் உண்டு. ஆனால் தேர்வறைக்கு வந்த உடன் மனப்பிறழ்வால் அவற்றை மறந்து போகும் குழந்தைகள். விளைவு , அவர்கள் மீது அனுதாபம் கொண்டு தங்களுக்குத் தெரிந்ததை எழுதி வரும் ஆசிரியர்களால் எப்படியாச்சும் அந் கக்குழந்தைகளை தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று சம்மந்தமே இல்லாத பாடங்களை ஒரே நாளில் படித்துச் செல்லும் ஆசிரியர்கள் உண்டு. ( உதாரணம் என்னையே கூறுகிறேன் )
நான் ஒரு கணக்கு ஆசிரியர் , தேர்வுப் பணிக்கு என்னை நியமனம் செய்த பள்ளியில் கண்காணிப்புப் பணி தான் போட்டிருந்தனர். அதற்காக 10 ஆம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு கண்காணிப்பு பணிக்கான அறை எண்ணும் தரப்பட்டது . தயாராகிக் கொண்டு இருக்கிறேன். Chief officer ஒரு ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு இருக்க , அவர் மறுக்க சற்றே வருத்தமான சூழல் , உடனே நான் யோசிக்காது நான் எழுதறேன் (scribe Duty) மேடம் என்றதற்கு அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி , ரொம்ப தேங்க்ஸ் மா என்று கூறி , பிறகு என் தேர்வறைக் கண்காணிப்பு பணி மாற்றப்பட்டு தேர்வு எழுதினேன். இந்த இடத்தில் அந்த மாணவன் வாழ்வு குறித்து தான் இப்பணியை ஏற்றுக் கொண்டேன்.
இது ஓர் உதாரணம் தான். எனக்கான கேள்விகள் நிறைய உள்ளன. இப்படியா திட்ட மிடா பணி , பாடம் தெரியாத ஆசிரியர்களை இப்பணிக்கு நியமிப்பது ? இது பற்றி எந்தக் கேள்வியும் முன்வைக்காமல் சொன்னதைச் செய்யுமாம் கிளிப்பிள்ளை என பணியை ஏற்றுக் கொள்ளும் ஆசிரியர்கள் எதை மாணவரிடம் பயிற்றுவிப்பர் ?
இது போன்ற 9 , 10 வகுப்பு குழந்தைகள் மட்டும் தமிழகம் முழுக்க 8000 இருப்பதாகத் தகவல் (நடப்பு ஆண்டில் ) , அவர்களுக்கு 146 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர் , அப்படியே இருந்தாலும் எல்லாக் குழந்தைகளுக்கும் முழுமையான கற்றல் நடைபெறுகிறதா ?
சில ஆசிரியர்களிடம் பேசினால் மிக வருத்தப் படுகின்றனர். எங்கிங்க டீச்சிங் பண்றோம் , சர்வே எடுத்து அவங்களுக்கு ஐடி வாங்கித் தந்து வெளி வேலைகள் மட்டும் தான் செய்கிறோம் . கற்பித்தல் எதுவும் நடைபெறுவதில்லை என்கிறார்கள்.
மேலும் இது போன்ற Scribe க்காக குழந்தைகளுக்கு அனுமதி வாங்கி முழுமை அடைய வைக்கும் நடைமுறையில் கூலிக்கு வேலை செல்லும் பெற்றோர் அவதிப்படுவர். துறை என்னவோ அதை எளிமைப் படுத்தி இருந்தாலும் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் , வகுப்பு ஆசிரியர் , பெற்றோர் இவர்களின் கூட்டு முயற்சி தேவைப்படும்.
தனியார் பள்ளிகளில் வேண்டுமென்றே Scribe வாங்கி தேர்ச்சி சதவீதம் பெறுபவர் தனிக்கதை .
இந்தக் குழந்தைகளது கல்வி எங்கே ? சாதாரணக் குழந்தைகளே பல வித ஏற்றுத் தாழ்வு மிக்க கல்வி நிலை இருக்கும் போது , மிகக் குறைந்த சதவீதம் உள்ள இவர்களுக்கான கல்வியை எங்கு தேடுவது ?
இவர்களுக்கெல்லாம் கனவுகள் இருக்காதா ? இவர்களது பெற்றோருக்கும் இவர்களது கல்வி குறித்த கனவு இருக்கும் தானே ...
இது பற்றிய புரிதல் , சிந்தனைகளை ஊடகங்கள் எப்போதாவது கையில் எடுத்துள்ளதா ?
ஆசிரியர் போராட்டங்கள் இவர்களுக்கான பரிந்துரைகள் வைத்துள்ளனவா ?
கல்வியாளர்கள் இவர்களுக்காக துறையை நிர்ப்பந்தம் செய்கிறன்றனரா ?
இவர்களது பெற்றோரும் தானே வரி செலுத்துகின்றனர்?
இவர்களுக்கான கேள்வி எங்குமே எழுப்பப்படாத சூழலே நிலவுகிறது.
அரசு சாராத தனியார் அமைப்புகளில் தங்களது குழந்தைகளை அனுப்பி கல்வி தரும் குடும்பங்கள் கதை தனி.
இப்படியான குழந்தைகளுக்கு தேர்வுகள் ஏன் கட்டாயப்படுத்தப்படுகின்றன ? மாற்று வழி ஏதாவது அரசு யோசித்தால் என்ன ?
எனில் ஏற்கனவே குரலற்ற ஏழை மக்களின் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில்
இவர்களும் சேர்ந்து ஊமையாகிப் போகும் சூழல் எனில் கல்வி மறுக்கப்படுகிறது தானே ?
தொடரும்
உமா
No comments:
Post a Comment