Thursday, 18 March 2021

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி காணாமல் போன நிலை ஏன் ?

அரசுப் பள்ளிகளில்  தமிழ் வழிக் கல்வி காணாமல் போன நிலை ஏன் ?


நம் தமிழகத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட  அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவதும் அதனால் பள்ளிகள் இணைப்பு குறித்தான அரசின் நடவடிக்கைகள் பற்றியும் செய்திகளை அறிவோம். ஆனால் இந்தக் கல்வியாண்டின் திருப்பு முனையாக கோவிட் - 19 வைரசின் தொடர் ஊரடங்கால் எல்லாத் துறைகளிலும் பல மாற்றங்கள் இயற்கையாக நிகழ்ந்து வருகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க வகையில் கல்வித் துறையிலும்  மாற்றங்கள்  ஏற்பட்டுள்ளன. ஆம்.. லட்சக்கணக்கான 

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். வழக்கமான மாணவர் சேர்க்கையைக் காட்டிலும் பல லட்சம் மாணவர்கள் நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளுக்கு வருகை புரிந்துள்ளனர். 


அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ள பெற்றோர்கள் 


கடுமையான பொருளாதார நெருக்கடி மக்களை வாட்டிக் கொண்டு இருக்கும் வேளையில்,  மக்கள் வேலை வாய்ப்பு அற்று , கையில் வருமானமின்றி தவித்துக் கொண்டு இருக்கின்றனர். தொடர்ச்சியாக 6 மாதங்களாக மக்களுக்கு ஊதியம் இல்லை. அல்லது வெகுவாகக் குறைந்து போய்விட்டது. அன்றாட உணவு , இருப்பிட வாடகை இவற்றை சமாளிப்பதே பெரும் சவாலாக மாறிய தருணத்தில் தான் தலை தூக்கியது, தங்கள் குழந்தைகளின் கல்விப் பிரச்சனை. இந்தத் தருணத்தில் மக்களின் நம்பிக்கை தங்கள் ஊர் அரசுப் பள்ளிகளின் மீது திரும்பியுள்ளது என்பது சற்றே மகிழ்ச்சி கொள்ள வேண்டிய செய்தி தான். அதனால் தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பத்து லட்சத்தையும் தாண்டி உள்ளது. 


பொருளாதாரக் காரணங்கள் ஒரு புறம் இருந்தாலும் சமீப காலங்களில் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது என்பதும் கண்கூடு. கூடுதலாக பல பெற்றோர்கள் தங்கள் ஊர் அரசுப் பள்ளியை மூடிவிடும் சூழலுக்கு அனுமதிக்கக் கூடாது என்கின்ற சமூக அக்கறையும் கொள்கின்றனர். அது மட்டுமல்ல ,பெரும்பாலான அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இதில் அடங்குவர் ..

இவற்றைக்  காண்கையில் மாற்றங்களை நோக்கி நமது சமூகம் நகர்கிறது என்ற எண்ணம் நமக்குள் உருவாகிறது . 


பயிற்று மொழி - ஆங்கில வழியைத் தேர்வு செய்யும் அவலம் 


அதே வேளையில் இங்கு சேர்ந்துள்ள குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் எந்த பயிற்று மொழியைத் தேர்வு செய்துள்ளனர் என்று ஆராய்ந்தால் வேதனை தான் மிஞ்சும். அவர்கள் 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக விரும்பி சேர்ந்திருப்பது ஆங்கில வழிக் கல்வியைத் தான். தமிழ் வழிக் கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்கள் மிக மிக சொற்பமான விழுக்காடு  என்பது தான் யதார்த்தம். 


இந்த நிலை திடீரென நிகழ்ந்ததல்ல. தமிழகக் கல்வி வரலாற்றில் தமிழ் மொழி திட்டமிட்டே அழித்து வரப்படுகிறது என்றால் அது மிகையாகாது. பொதுமக்களுக்கு ஆங்கில மொழியின் மீது மோகம் என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டை வைத்து விட்டு எல்லாத் தரப்பினரும் தப்பித்துக் கொள்கின்றனர். 


ஆதிகாலம் முதல் தாய் மொழிவழிக் கல்வியே 


ஆங்கிலேயர் காலத்திலேயே மெக்காலே கல்விக் கொள்கை குறிப்புகளில் கூட , தொடக்கக் கல்வியானது  அந்தந்த வட்டார மொழியில்  கற்போரது  தாய் மொழியில் இருப்பது தான் கட்டாயம் என்ற கருத்துகள் இடம் பெற்றுள்ளன. 1970 களின் பிந்தைய வருடங்களுக்குப்  பிறகு தான் நம் தமிழகத்தில்  ஆங்கில வழிக் கல்வி அறிமுகமாகி தனியார் பள்ளிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. பெரு நகரங்களில் மட்டுமே முதலில் ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. தொண்ணூறுகளுக்குப்  பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சிறு நகரங்கள் கிராமங்கள் என வேரூன்ற ஆரம்பித்த தனியார் பள்ளிகள் 2000 ஆண்டுகளில் புற்றீசல் போல கிராமங்கள் , குக்கிராமங்கள் என எல்லா இடங்களிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டன. அவற்றின்  பயங்கரமான விளைவு தான்  இன்றைய தமிழ் மொழி வழிப் பள்ளிகளே மருகி அரசுப் பள்ளிகளும் ஆங்கில வழிக் கற்றலுக்கு முன்னுரிமை தருவதாக மாறிப் போனது. 


தனியார் மயத்திற்கு வழிகோலிய நடைமுறை


கல்வி ஒரு வியாபாரப் பொருளாக மாறியதன் விளைவு , செல்வந்தர்கள் தங்கள் பணத்தைப் பெருக்க ஒரே வழியாக  தனியார் பள்ளிகளை ஆரம்பிக்க முதலீடு செய்தது 2000 க்குப் பிறகு வெகுவாகப் பெருகிப் போனது. ஆங்கில வழிப் பள்ளிகளாகவே அனைத்தும் உருவாக்கப் படுவதும் மக்களிடம் தங்கள் பள்ளிகள் குறித்த  விளம்பரத்தையும் தொடர்ந்து எடுத்துச் சென்றனர். பொதுமக்களும் தனியார் பள்ளிகளில் பணத்தைக் கட்டி கல்வி தருவதால் தங்கள் குழந்தைகள் வாழ்க்கையின் உன்னத நிலையை அடைந்து விடுவதாகவே எண்ணி பொறியில் மாட்டிய எலியாயினர். 


அரசுப் பணியில் இருப்போர் மட்டுமன்றி அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளை அவரவர் வருமானத்திற்கு ஏற்ப கல்விக் கட்டணம் கட்டிப் படிக்க வைக்கும் பள்ளிகளை தங்கள்  தரத்திற்கேற்ப நாடினர்.  விளைவு எல்லாத் தரப்பு மக்களும் கல்விக் கட்டணம் கட்டி படிக்க வைக்க அவரவர்க்கு ஏற்ற பள்ளிகளை நாடினர். அதனால் கல்விக் கட்டணத்தை  அடிப்படையாகக் கொண்ட பள்ளிகள் காளான்கள் போல முளைத்தன . தாங்கள் அணுகும் பள்ளிகளில் கற்பித்தல் எவ்வாறு நடைபெறுகிறது ? தகுதி வாய்ந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருக்கின்றனரா என்ற ஆய்வு மனப்பான்மை பெற்றோர்களுக்கு துளியும் இல்லை. அதனால் தான் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகள் அனுமதி பெறாமலேயே இயங்கி , தாமதமாக பெற்றோருக்குத் தெரிய வருவதும் போராட்டங்கள் வெடிப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது. 


மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கொடிகட்டிப் பறந்தன. பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து பள்ளியில் முதல் , இரண்டாம் இடம் வகிக்கும் மாணவர்களை தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் கொத்திச் சென்று விடுவார்கள். இலவசக் கல்வி தருவதாகக் கூறி மேல்நிலைக் கல்வியில் அக்குழந்தைகளை சேர்த்துக் கொள்வர்.  மதிப்பெண்கள் பெற்ற பிறகு அவர்களைத்  தங்கள் பள்ளிக்கு  விளம்பரத் தூதர்களாக மாற்றி கட் அவுட் வைத்து மாணவர் சேர்க்கை நடத்தியது கண்கூடு. 


தமிழே  படிக்காத குழந்தைகள் 


சமச்சீர் கல்வி தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட பிறகு , மெட்ரிகுலேசன் பள்ளிகள் பெரும்பாலும் (CBSE )மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு தங்களை மாற்றிக் கொண்டது பரவலாக உருவானது. இன்றைய காலகட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் ஏறக்குறைய 900 CBSE பள்ளிகளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்துள்ளதாக ஒரு தகவல் காணப்படுகிறது. எனில் வருடத்திற்கு சராசரியாக நூறு பள்ளிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தமிழ் மொழியே பாடமாகக் கிடையாது. தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களது தாய் மொழி தமிழாகத் தானே இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு மருந்துக்கும் கூட தமிழ் மொழி கற்பித்தல் நடைபெறுவதில்லை.  இவை ஒரு புறம் இருக்கட்டும். 


வருமானம் மிகக் குறைவாக இருக்கும் அடித்தட்டு மக்களும் கூட ,மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தான் பெரும்பாலும் மழலையர் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். அங்கு ஏறத்தாழ 7 வருடங்கள் ஆங்கில வழியில் தான் குழந்தைகள் படிக்கின்றனர். 6 ஆம் வகுப்பு வரும் பொழுது அரசு பள்ளிகளுக்கு வந்தாலும் ஆங்கில வழிக் கல்வியைத்  தான் அவர்களால் தேர்வு செய்ய இயலுகிறது. மாணவர்களே விரும்பினாலும் தமிழ் வழிக் கல்வியை நாட முடிவதில்லை .இந்தக் குழந்தைகளுக்கு தாய் மொழிவழிக் கல்வியான தமிழ் வழிக் கல்வி கிடைப்பதில்லை. 


ஆங்கில வழிக் கல்வியாக மாற்றம் பெற்ற அரசுப் பள்ளிகள் 


அதே போல தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடுநிலைப் பள்ளிகளிலும் 90 விழுக்காடு Uள்ளிகள் ஆங்கில வழியாக மாற்றப் பட்டு விட்டன. ஏனெனில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழியில் தான் படிக்க வைக்க விருப்பப் படுகின்றனர். அதனால் தான் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என்ற கருத்தின் அடிப்படையில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தாய் மொழிவழிக் கல்வியான தமிழ் வழிக் கல்வியை ஆங்கில வழிக் கல்வியாக மாற்றி விட்டது அரசு. 


ஆயிரத்தில் ஒரு பெற்றோர் நூற்றில் ஒரு Uள்ளி என தமிழ் வழிக் கல்வியை பற்றிக் கொண்டுள்ளனர். ஆனால் எல்லாப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கற்பித்தல் பணியை செய்பவரும் தமிழ் நாட்டு ஆசிரியர்கள் தான் என்பதை ஏனோ பெற்றோர் புரிந்து கொள்ள முன்வருவதில்லை.  தாய் மொழி வழிக் கல்வி தான் அறிவியல் பூர்வமாக சிறந்த கல்வி முறை என்பதை அரசும் மக்களுக்குப் புரிய வைக்க இதுவரை முயற்சி எடுக்கவில்லை.  பேரிடர் காலம் போல இந்த நாட்கள் நம் கண் முன்னே விரிகின்றன. ஏனெனில் எந்தப் பள்ளியில் படித்தாலும் தனது 14 வருடப் பள்ளிக் கல்வியை (மழலையர் வகுப்புகள் மற்றும் 12 ஆம் வகுப்பு வரை ) நிறைவு செய்த குழந்தைகள் ஆங்கிலத்திலும் புலமையில்லை , தமிழிலும் தெளிவில்லை என்பது தான் உண்மையான  நடைமுறையாக உள்ளது. 


கல்வி அரசியல் 


உலகின் கல்வியில் சிறந்த அனைத்து நாடுகளும் தாய்மொழிவழிக் கல்வியைத்  தானே வழங்கி வருகின்றனர். நமது தமிழகத்தில் மட்டும் இந்த உண்மையை ஏன் நாம் நடைமுறைப் படுத்த மறுக்கிறோம்? ஏனெனில் தாய் மொழி வழிக் கல்வியை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப் படுத்த ஆரம்பித்து விட்டால் கல்விக் கட்டணம் தந்து தனது குழந்தையை தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் ஒவ்வொரு பெற்றோரும் அரசுப் பள்ளியை நோக்கி வரத்தொடங்குவர். மகிழ்ச்சியான கற்றலை குழந்தைகள் அனுபவிப்பர் .


 தனியார் மயம் அழிந்து விடும். எல்லோருக்கும் தரமான இலவசக் கல்வி அரசுப் பள்ளிகளிலேயே கிடைக்கும் பட்சத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் இழுத்து மூடப்படும். தமிழ் மொழியின் செறிவு மாணவரிடையே பரவலாகும் .குழந்தைகள் நன்கு புரிந்து படிப்பர் - சிந்திக்கத் துவங்கி கேள்விக்குட்படுத்துவர். நம் நாடு , நம் மொழி என்ற உணர்வு வந்து விடும் .ஆங்கிலம் ஒரு மொழி மட்டுமே என்பதை மாணவர் புரிந்து அதற்கான முக்கியத்துவம் அளவுக்கதிகமாக தரப்படுவதை நிறுத்த தனது பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவர் - இவை எல்லாம் நடந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆங்கில வழிக் கல்வியை இங்கு அனைவரும் ஊக்கப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் கல்வி அரசியலின் ஒரு பகுதிதான் . தனியார் மயப் போக்கை வலுப்படுத்தும் அரசியலாகவேப் பார்க்க முடிகிறது. 


என்ன செய்யலாம் ?


தற்போது மருத்துவப் படிப்பிற்கு 7.5% இடங்களை அரசுப் பள்ளி தமிழ் வழியில் படிக்கும் மாணவர்க்கு ஒதுக்கப்படும்  என்பதை கூடுதலாக உயர்த்தலாம். தமிழ் வழிக் கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பதை சட்டமாக்கலாம். கல்லூரி சேர்க்கைக்கு அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிக்கும் மாணவருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். பொறியியல் , மருத்துவம் , விவசாயம் , சட்டம் என  நம் தமிழகக் கல்லூரிகள் அனைத்திலும் அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் படிப்பவருக்கே முன்னுரிமை என்பதுடன் முழுமையாகவே எல்லா இடங்களையும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கலாம். 


பெற்றோர்களிடம் தாய்மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை அரசும் ஆசிரியர்களும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு பெற வைக்கலாம். தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உருவாக்க வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தரலாம் . தாய்  மொழிப் பாடம் அதாவது தமிழ் மொழி  பயிற்று மொழியைக் கட்டாயமாக்குவதைக் கூட முன்மொழியலாம் .


இவ்வாறான முயற்சிகள் எடுப்பின் வரும் காலங்களில் நமது அரசுப் பள்ளிகளில்  தமிழ் வழிப் பள்ளிகள் உயிர்ப்பிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்வது தான் சிறந்தது. 


சு.உமாமகேசுவரி








No comments:

Post a Comment