Thursday, 18 March 2021

இன்றைய சூழலில் கல்வி - 4 


கல்வி வாழ்வின் அனுபவமாகப் பெற வேண்டும் .கல்வியை இயற்கையிலிருந்தும் மனிதனிடமிருந்தும் பொருள்களிடமிருந்தும் பெறலாம் என ரூசோ சொல்கிறார் . இந்தக் கூற்று , இன்றைய சூழலில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாமல் இருக்கும் காலகட்டத்தில் மிகப்  பொருத்தமாக இருக்கிறது. 


பள்ளிக் கல்வியின் நிலையும் சரி  , உயர் கல்வி பெறுவதற்கான கல்லூரிக் கல்வியும் சரி இன்றைய நாட்களில்  கேள்விக்குரியதாகி நம்முன் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 


ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் வந்து விட்டது. , பள்ளிகளில் வேலை நாட்கள் அதிகம் கொண்ட நீண்ட பருவம்  இந்த முதல் பருவம் தான். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்  வரையுள்ள  இந்த காலகட்டத்தில் தான் பள்ளியில் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகள்  வேகமாக நிகழும். ஆனால் கொரோனா  நோய்த் தொற்று , இயல்பு வாழ்க்கையை  முற்றிலும் புரட்டிப் போட்டதால் ஏற்பட்டுள்ள அன்றாட விபரீதங்கள்  குழந்தைகளின் இந்த பள்ளிக்குள்ளான கற்றலை பாதித்துள்ளது .


ஆன்லைன் வகுப்பறைகள் 


கடந்த இதழில் ,  இன்று நடைமுறையுள்ள  ஆன்லைன் கல்வியும் வகுப்பறைக் கல்வியும் பற்றி விரிவாகப் பார்த்தோம். இன்றும் , தனியார் பள்ளிக் குழந்தைகள் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகளால்  ஏதோ ஒரு வகையில் கல்வியுடன் தொடர்புள்ளவர்களாக இருந்து வருகின்றனர். இந்த ஆன்லைன் வகுப்புகளால் பல்வேறு துன்பங்கள் இருந்தாலும் சகித்துக் கொண்டு தங்கள் குழந்தைகளை அந்தக் கல்வி முறைக்குள் உட்படுத்தி வருகின்றனர் பெற்றோர்கள் . கல்விக் கட்டணம் பெறுவது  குறித்து வழக்கு நடந்து பெற்றோருக்கும் பள்ளிக் கும் இடையே சமாதானமாக, கட்டணத்தைப்  பிரித்துக் கட்டக் கூறி தீர்ப்பு வந்தது உட்பட  அனைத்தும் அறிவோம் .இது  தான் தனியார்ப் பள்ளிகளின் யதார்த்தம். 


தொலைக்காட்சி வழிக் கற்றல் முயற்சி 


மற்றொரு புறம் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு தொலைக்காட்சி சேனல்கள் வழியே  நிகழ்வுகள் ஒளிபரப்பப்படும் என்று செய்திகள் பரவின என்பதையும் கடந்த இதழில் குறிப்பிட்டு இருந்தோம் . இதுவரையில் 15 நாட்களில் என்ன நடந்தது என்று கவனிப்போம். 


பொதுவாக மாணவர்கள் பெரும்பாலான இடங்களில் கல்வி நிகழ்வுகளைப் பார்க்கவில்லை என்பது கண்கூடு. ஏனெனில் கல்வி ஒளிபரப்புகளுக்காக கூறப்பட்டிருந்த குறிப்பிட்ட சேனல்கள் தொலைக்காட்சி சேனலுக்கான இணைப்புகளில் மாணவர்கள் அறியாத ஒன்று . 10% க்கும் குறைவான மாணவர்களே வகுப்புகளைப் பார்த்து கவனித்து வந்துள்ளனர். வழக்கமாக வீடுகளில் தொலைக்காட்சி பார்க்கும் பெரும்பாலான குழந்தைகள் கூட கல்விக்கான பாட வகுப்புகளைப் பார்க்கவில்லை. அறிவிக்கப்பட்டிருந்தபடி கால அட்டவணைப்படி வகுப்புகள் ஒளிபரப்பப்படவுமில்லை. 


மற்றொருபுறம்  தொலைக்காட்சி இணைப்புகள் , மின்சார வசதி அற்ற குடும்பங்களில் வாழும் குழந்தைகள் . மலைப் பகுதி பள்ளிகளில் எந்த வித வசதியுமற்ற குடும்பங்களில் வாழும் குழந்தைகள். வறுமையின் பிடியில் வாழும் குழந்தைகள் . உணவுக்கே வழியற்ற குடும்பக் குழந்தைகள் . பெற்றோருடன் வேலைக்குச் சென்று தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் குழந்தைகள் . இப்படியான சூழலில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த தொலைக்காட்சி வழிக் கல்வி கற்றல் என்பது இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது. 


மாணவர் சேர்க்கை ஆரம்பிக்காத அரசுப் பள்ளிகள் 


இந்த 2020-2021 ஆம் கல்வியாண்டில்  அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறாதது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும் . நகர்ப்புற பகுதியில் அமைந்திருக்கும் பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சேர்க்கைக்காக நடையாய் நடந்து கேட்டு தவிக்கின்றனர். தலைமை ஆசிரியரோ , உயர் அலுவலர்களிடமிருந்து இன்னும் வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை என்கிறார். ஒரு இடத்தில் மட்டுமல்ல , தமிழகம் முழுவதிலும் பரவலாக இதே நிலை தான் நீடிக்கிறது . 


வேலையில்லாத காரணத்தால் 

பொருளாதாரத்தில் நலிவடைந்த சூழலில் 

 பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் மனம் மாறியுள்ளனர்.இந்த வருடம் அரசுப் பள்ளிகளை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். ஆனால் நமது அரசுப் பள்ளிகளிலோ சேர்க்கை இன்னும் ஆரம்பிக்கப்பட வில்லை. அதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு என்ன ஆகுமோ என்ற பயத்தில் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பெற்றோரது சூழல் கவனிக்கத்தக்கது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களைத் தக்க வைத்தும் , மாணவர் சேர்க்கையை செயல்படுத்தியும் நிறைவு செய்துள்ளனர் என்பதும் உண்மை. இந்த முரண்பாடுகளை எப்படிக் களையப் போகிறோம் ?


அரசின் பொதுப் பள்ளி முறையைக் கொண்டு வருதல் 


இந்தக் காலக்கட்டத்தில் தான் மக்களும் அரசும் பொதுப் பள்ளிகளை மீட்டெடுக்க சிந்திக்க வேண்டும் .தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் , ஆன் லைன் கல்வி , இந்த சூழலிலும் தொடர் அழுத்த மனநிலை என துன்பப்படும் குழந்தைகளை ஏன் அரசுப் பள்ளிகளுக்கு மாற்றிட பெற்றோர்கள் சிந்திக்கக் கூடாது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  என்றில்லாமல் , எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதுவான பாதகமில்லா வழிமுறையின் அடிப்படையில் தான் கல்வியை  அரசு முன்னெடுக்கும். அதற்கு தகுதியான இடம் அரசின் பொதுப் பள்ளிகளே. அனைத்து பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக மாற்றும் கருது கோள்களையும் அரசு சிந்திக்கலாம். மக்களின் நலனுக்காக எந்த முடிவுகளையும் அரசால் எடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட நேரங்களில் அவசர காலச் சட்டங்கள் உருவாவது போல , இந்தக் கொரோனா காலப் பேரிடர் நேரத்தில் கல்வியில் நிகழ்த்த வேண்டிய உடனடி மாற்றங்களாக அவசர சட்டங்கள் கொண்டு வர சட்டத்தில் இடமிருந்தால் அனைத்து பள்ளிகளையும் உடனடியாக அரசுப் பள்ளிகளாக மாற்ற முடியும். இப்படியான மாறுதலில் இருந்து தான் கல்வியில் மாற்றங்களை நாம் உருவாக்க முடியும். 


மாற்றுக் கல்வி முறை 


மெக்காலே கல்வி முறையை நாம் குறையாகக் கூறிக் கொண்டே இருக்கிறோம். எத்தனைக் கல்விக் கொள்கைகள் வந்தாலும்  மனப்பாடக் கல்வி முறை தான் பொதுத் தேர்வு என்ற மையத்தை நோக்கியக் கல்வி முறையாக இன்றும் நம்மிடம் உறுதியாக நிலை பெற்றுள்ளது.  இதில் மாற்றம் கொண்டு வர வேண்டுமானால் முதலில் கல்வி முறையை மாற்ற வேண்டும். ஏற்கனவே நாம் முந்தைய சுவடு இதழ்களில் தேர்வுக்கு மாற்று முறை  குறித்து எழுதியிருந்தோம்  . தேர்வு மட்டுமல்ல , கல்வி முறையையே மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும். அப்படி ஒரு முயற்சியை எடுப்பதற்கு கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் . உள்ளூர் வளம் சார்ந்து  நெகிழ்வு தன்மை கொண்டதாக கல்வி மாற்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். அப்போது தான் திறன் சார்ந்து கற்றல் நிகழும் . இன்று தமிழகத்தில் உள்ள மாதிரி அமைப்பு மாற்றுக் கல்வி முறைகளை உற்று நோக்கி சிறப்பானவற்றை அரசு அந்தந்த மாவட்டங்களில்  செயல்படுத்த முன்வர வேண்டும் . இப்படியான மாற்றுக் கல்வி முறைகளை சிந்திக்க இந்த நாட்கள் தூண்டுகோலாக அமைந்திருக்கின்றன .


மாற்று வகுப்பறைகள் - மாத்தி யோசி 


தற்போதைய சூழலுக்கு மாற்றுக் கல்வி முறைகளை மையப்படுத்தி அதற்கான முயற்சிகளை முன்னெடுப்பது நீண்ட செயல்பாடாகப் பார்க்கலாம். உடனடித் தேவை மாற்று வகுப்பறைகளே. நோய்ப் பரவல் இல்லாத ஊர்களில் , மலைப் பகுதிகளில் ஆசிரியர்கள் நேரடியாகச் சென்று மாணவர்களை சந்திக்கலாம். பள்ளிக்குள் மாணவர் வர இயலாததால் பொது இடங்கள் , வயல்கள் , குளங்கள் , கோவில்கள், தெருக்கள்  இவற்றை திறந்த நிலை வகுப்பறைகளாக்கலாம்.  மாணவர்களுக்கு கற்றலில் தொடர்பு அற்றுப் போகாமலிருக்கவே இந்த முயற்சியை மேற்கொள்ளலாம். அடிப்படை வாசிப்பு , கணக்கு செயல்பாடுகள் குறித்து திறந்த நிலை வகுப்பறைகளில் முயற்சிக்கலாம். கதைகள் , பாட்டு , நாடகம் வழியே சுற்றுச் சூழல் கல்வி , விவசாயம் , மண் சார்ந்த கல்வி , ஆரோக்கியம் இவற்றில் சுய அனுபவங்களைக் கற்பித்தலாகக் கொடுத்து கற்றல் விளைவுகளைப் பதிவு செய்யலாம் .


வகுப்பறையின் நான்கு சுவற்றுக்குள்ளான கற்றல் கற்பித்தல் நடைமுறைகளை மீறி குழந்தைகள்  எவ்வாறு கற்கின்றனர் என்பதை உணர ஒரு வாய்ப்பாகத் தான் இந்தக் கொரோனா நோய்த் தொற்று ஊரடங்கு அமைந்து விட்டது போலும். 



தொடர்ந்து பேசுவோம் 

உமா 




No comments:

Post a Comment