Thursday, 18 March 2021

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

.


தமிழகமெங்கும் தங்கள் பன்முகத் திறனால் அரசுப் பள்ளிகளை மீட்டுருவாக்கம் செய்து வரும் ஆசிரியர்கள் நிறைந்துள்ளனர். தங்கள் கற்பித்தல் முறைகளால் , பள்ளியின் கட்டமைப்பை மாற்றி மக்களை நம்பிக்கை கொள்ள வைப்பதால் , மாணவர் திறனை உலகறியச் செய்வதால் , கற்றலில் புதுமை புகுத்துவதால் சமூகத்தை பள்ளிக்குள் அழைத்து வருவதால் என பல கோணங்களில் அசத்தி வருகின்றனர். அவர்களது பணி  பற்றிய ஒரு ஆவணமாக தொடராக இங்கு பகிரஇருக்கிறோம். தமிழகக் கல்வி வரலாற்றில் இந்தக் குறிப்புகள் முக்கிய இடம் வகிக்க தகுதியான வரலாற்றுப் பக்கங்களாக எக்காலத்தும் நிலைத்து இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


இங்கு எழுதப்படும் ஆசிரியர்கள் ஊரடங்கு காலத்தில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் (A3) பக்க முகநூல் இணைப்பில் நேரலையில் கலந்து கொண்டு தங்கள் பணிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முதலாவதாக ...


குருமூர்த்தி , இடைநிலை ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மு.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்


கடந்த 2020 ,ஆகஸ்ட் மாதம் மத்தியக் கல்வி அமைச்சரின் டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுப் பெற்ற தமிழக அரசுப் பள்ளி ஆசிரியரான  இவர் என்னென்ன மாற்றங்களை செய்து வருகிறார் என்று அறிந்தால் நாம் பிரமிப்பு அடைவோம். 


2004 இல் கடலூர் மாவட்டத்தில் நல்லூர் ஒன்றியப் பள்ளியில் ஆசிரியராகப் பணியேற்ற இவர் மிகச் சிறந்த வகுப்பறைக் கற்பித்தல் முறையால் மாணவர்களை கற்றலுக்குள் எளிமையாக அழைத்துச் சென்றுள்ளார். 2008 இல் தற்போதுள்ள பள்ளிக்கு மாறுதல் பெற்ற இவரின் பணி இன்று தமிழகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது. .


2018ஆம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் க்யூ ஆர் செயலி ( QR Code) மூலமாக பாடங்களை வீடியோவாக காண்பித்து வருவது அரசு செய்துள்ள மாற்றம் . ஆனால் இவரோ  2012ஆம் ஆண்டு முதலே பாடங்களை வீடியோ மூலம் நடத்தி வருகிறார் . 2011 இல் தனது  வீட்டில் இன்டர்நெட் இணைப்பு கொடுத்த சமயத்தில் வார்த்தைகளால் விளக்க முடியாத பாடங்கள் தொடர்பான வீடியோக்களை  youtube லிருந்து பதிவிறக்கம் செய்து மாணவர்களிடம் காண்பிக்க .மாணவர்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அந்த மகிழ்ச்சியை தொடர்ச்சியாக காணவேண்டும் என்றெண்ணி ஒவ்வொரு பாடத்திலும் புரியாத விஷயங்களை youtube லிருந்து வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் விளக்க ஆரம்பித்தார். 


அதோடு தனது பள்ளிக் குழந்தைகள் அடையும் மகிழ்ச்சியை தமிழகம் முழுக்க பரவலாக்க முயற்சி எடுக்கிறார். விளைவு ,தமிழ்நாடு தொடக்கப் பள்ளி பாடப் புத்தகங்கள் முழுவதும் கணக்கு நீங்கலாக வீடியோவாக மாற்றுகிறார் . அதோடு  ஆங்கில வழி கல்விக்கும் அவ்வாறே செய்து முடிக்கிறார். இதற்காக  இவர் எடுத்துக் கொண்ட நேரமோ இந்த நான்கு ஆண்டுகளில் எட்டாயிரம்(8000) மணி நேரத்துக்கும் அதிகம் என்கிறார் .இவரது இந்த வீடியோ பாடங்கள் தமிழகம் முழுக்க 3,500 மேற்பட்ட பள்ளிகளில்  பிரபலம். வீடியோ பாடங்களை குறுந்தகடுகளாக மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறார்.  


 இவ்வேலையை செய்யத் தொடங்கும் முன்னரே பள்ளிப் பணிக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என முடிவு செய்துகொண்டு தனி ஒருவராக சுய தேவைகளுக்கான நேரங்களை இதற்காக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார்.  "தமிழக அரசு செய்யவேண்டியதை தனியாளாக இருந்து செய்துள்ளீர்கள்" என்று உயரதிகாரிகள் இவருக்குப்  பாராட்டினாலும்  இதுவரை கூறிக்கொள்ளும் அளவிற்கு அங்கீகரிக்கவில்லை என்பதே உண்மை. 

கடந்த ஆண்டு முதல்  அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் புதியதாக  மாறியுள்ள நிலையில் அவைகளை வீடியோவாக மாற்றும் பணியில் மீண்டும் ஈடுபட்டு வருகிறார் . இந்தக் கோவிட் - 19 ஊரடங்கு காலம் முழுவதும் தனது நேரத்தை  காணொலி தயாரிப்புப் பணிக்கே செலவழித்துள்ளார் .


இது மட்டுமல்ல இவரது பணி . பள்ளியில் ஒரு ஆசிரியராக "படிக்கும் மாணவர்கள் எங்கும் படிப்பார்கள்; படிக்கத்தெரியாத மாணவர்கள் எங்கள் பள்ளியில்

படிக்கவைக்கப்படுவார்கள்",என்னும் உறுதிமொழியை கொடுத்துவருகிறார். 


 இதை கேள்வியுற்ற சேலத்தைச் சேர்ந்த ஒரு பெற்றோர் இவரைத் தொடர்புகொண்டு , என் மகன் மூன்றாம் வகுப்பு படித்தும் அவனுக்கு படிக்கத் தெரியவில்லை. உங்கள் பள்ளியில் சேர்க்கலாமா ? என்றார். சேலத்தில் இருக்கும் தாங்கள் திருச்சி மாவட்டத்தில் ஒரு உள்கிராமத்தில் உள்ள எங்கள் பள்ளியில் எப்படி சேர்ப்பீர்கள் ? என்று இவர் கேட்டபோது , "நாங்கள் உங்கள் ஊரிலேயே தங்கி எங்கள் மகனை படிக்க வைப்போம்" என்றனர்.  அதே போல  தனியார் பள்ளியில் பயின்ற தங்களது இரு குழந்தைகளையும் இவரது  பள்ளியில் சேர்க்க சேலத்திலிருந்து குடிபெயர்ந்தது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவம் .

பெற்றோர்கள் அருகாமையிலுள்ள ஊர்களில் உள்ள பெற்றோர்களிடம் இவரது  பள்ளியின் செயல்பாடுகளை எடுத்துக்கூறி அங்கிருந்து 15 மாணவர்களைக்  கடந்த கல்வியாண்டில் இவரது  பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதில் ஒரு மாணவியின் தந்தை தன் சொந்த காரிலேயே தன் மகளுடன் சேர்த்து மற்ற மாணவர்களையும் அழைத்து வருகிறார். இவரது பள்ளி அமைந்த  ஊர் குறைவான மக்கள்தொகை கொண்ட உள்கிராமம் .ஆதலால் சென்ற ஆண்டு 23 மாணவர்களே பயின்றனர். தற்போது வெளியூரிலிருந்தும் மாணவர்கள் வந்ததால் இந்த   ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 54  ஆக உயர்ந்தது. 



 அதே போல அந்த  ஊர் அஞ்சலகத்தில் பணிபுரியும் ஒருவர் , அவர் மகளையும் மகனையும் இவரது  பள்ளியில் சேர்ப்பதற்காகவே அந்த  ஊருக்கே குடிபெயர்ந்து வந்துவிட்டது என மக்கள் விரும்பும் பள்ளியாக மாற்றம் பெற இவரது பங்களிப்பு அதிகம் உள்ளது   அவரது  குழந்தைகள் அரசுப் பள்ளி   தமிழ் வழிக் கல்வியில் சேர்த்து படிக்க வைக்கிறார் என்பது  கூடுதல் தகவல் . 



இன்னும் தொடர்ந்து பல வழிகளில் பள்ளி வளர்ச்சிக்கும் முயற்சிகள் செய்கிறார். தலைமை ஆசிரியரின் ஒத்துழைப்புடன் 

 ரூ.200000 மதிப்பில் தனது  பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தியுள்ளார்.  வகுப்பறை முழுவதும் கற்றல் - கற்பித்தல் உபகரணங்களால் நிறைத்துள்ளார். தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் முறைகளையும் இவரது  பள்ளியில் பயன்படுத்தி வருவதாகப் பதிவு செய்கின்றார்..



மாணவர்களுக்காக தமிழக அரசு கொடுத்துள்ள கற்றல் உபகரணங்களுடன் இவரே  உருவாக்கிய  கற்றல் உபகாரங்களையும் கொண்டு மெல்ல மலரும் மாணவர்களுக்கும் (Slow learners) தனிக்கவனமெடுத்து கற்பித்து வருகின்றனர் இருவரும் .    

தூய்மை இந்தியா திட்டத்தில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட காணொலி ப் போட்டியில் இவரது  பள்ளி திருச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்று ஆட்சியர் கரங்களில் பாராட்டு சான்று பெற்றுள்ளது . 2018ஆம் ஆண்டில் DFC செயல்திட்டத்தில் எங்கள் பள்ளி சிறந்த 100 செயல்திட்டத்தில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது என இவரது பள்ளி செயல்பாடுகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது பள்ளி தமிழ் வழிப் பள்ளி என்பதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 


இப்படியாக ஒரு கிராமத்து ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றும் குரு மூர்த்தி போலத்தான் தமிழகம் முழுக்க அறியப்படாமலிருக்கும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நிறைந்துள்ளனர். 


உமா

ஒருங்கிணைப்பாளர் 

அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)


                                                                 


No comments:

Post a Comment