Thursday, 18 March 2021

மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி

மனித மாண்புகளை மாணவர் மனதில் விதைக்கும் அரசுப் பள்ளி 


கிருஷ்ணகிரி மாவடத்தின் மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைக்  குறித்து தலைமையாசிரியர் பா.ஆனந்திமாலா  கூறுகிறார்.  


அரசுப் பள்ளிகள் என்றாலே ஆசிரியர்கள் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கக் கூடியவர்கள் , குழந்தைகள் மீது கவனம் எடுப்பதில்லை , பாடமே நடத்துவது இல்லை என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருவதைப் போல எனக்கும் அப்படியான எண்ணம் தான் இருந்தது நான் ஆசிரியராக பணியேற்பதற்கு முன்பு வரை . ஆனால் பள்ளி ஆசிரியராகப் பணியேற்ற பிறகு தான் 

 அரசுப் பள்ளிகள் அப்படி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது என்கிறார்.  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஆசிரியர் பயிற்றுனராக தனது பணியைத் துவங்கி, தொடர்ந்து பட்டதாரி ஆசிரியராகவும் பள்ளிக்குள் பணியேற்றியிருக்கிறார். பிறகு முதுகலைத் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் , மத்தூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின்  தலைமை ஆசிரியராகத் தற்போது பணியாற்றி வருகிறார். 


1991 முதல் உயர்நிலைப் பள்ளியாக

ஆரம்பிக்கப்பட்டு , 1994 இல் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது இப்பள்ளி . கால் நூற்றாண்டு வயதைத் தொட்டிருக்கும் இப்பள்ளி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மிகச் சிறந்த பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கிறது.


பள்ளிக்குள் நுழையும் போதே மிகப் பெரிய நந்தவனம் பூங்காவிற்குள் நுழைந்தது போல ஒரு உணர்வைத் தரும் அழகிய பள்ளியாக இருக்கின்றது. சூழலே படிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. 


இப்பள்ளி மற்ற பள்ளிகளிலிருந்து  முற்றிலும் மாறுபட்டது என்கிறார். பல கரங்களும் இணைந்து ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வெற்றி பெறுதல்  தான் எங்கள் பள்ளியின் வெற்றிக்குக் காரணம் என்கிறார் . 


எழுநூற்றுக்கும்  மேற்பட்ட பெண்குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில் 40% க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பில்லாத சூழலில் வாழும் குழந்தைகள் என்கிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட சூழலில் இருப்பதைக் கண்டுணர்ந்த இவர் ஒரு தலைமையாசிரியருக்கான பொறுப்புகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என உணர்ந்து நிறைய முன்னெடுப்புகளை செய்து வருகிறார். 


குழந்தைகளின் மன நடவடிக்கைகளை மகிழ்ச்சியாக மாற்றி தனது பள்ளியை மகிழ்ச்சியான பள்ளியாக உருவாக்கியுள்ளார். மகிழ்ச்சியான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்குவது தான் உண்மையான சுதந்திரமான கல்வி பெற வழி வகுக்கும் என உறுதியாக நம்புகிறார். 


ஆலோசனைப் பெட்டி வைத்து , நமது பள்ளி என்ற எண்ணத்தை மாணவிகள் மத்தியில் உருவாக்கி நடத்தை மாற்றங்களில் மிகப் பெரிய மாறுதல்களை உருவாக்கியுள்ளதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறார். கழிப்பறைகளை சரி செய்ய இவர் எடுத்துக் கொண்ட முயற்சியில்  பதினொன்றாம் வகுப்பு மாணவிகள் தங்களால் இயன்ற தொகையை இவர் கேட்காமலேயேக் கொடுத்து உதவியதைப் பற்றிக் கூறி நெகிழ்கிறார். 


தேர்வை நோக்கி ஓடும் பெரும்பாலான பள்ளிகளிலிருந்து வேறுபடுகிறது இப்பள்ளி . 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை முக்கிய வினாக்களை மட்டும் படிக்க வைக்காமல் பாடப் புத்தகம் முழுவதும் படிக்க வைக்க வழிகாட்டியுள்ளார் . இதனால் , ஆசிரியர்கள் , மாணவர்கள் இருவரது மனப்பான்மைகளும் மாற்றம் பெற்று கல்வி என்பது தேர்வுகள் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாகக் கூறுகிறார் .


அடுத்து நூலக வாசிப்புக்கான சூழலை உருவாக்கி , சிறு வகுப்பு முதல் வாசிப்பின் முக்கியத்துவத்தை பள்ளிக்குள் கொண்டு வந்துள்ளார். குழந்தைகள் மட்டுமல்ல ஆசிரியர்களையும் வாசிப்புக்குள் கொண்டு வந்து மாற்றத்தை விளைவித்துள்ளார். அதற்காக இவரே சென்னை  புத்தகத் திருவிழாவிற்காக சென்று புத்தகங்களைத் திரட்டிய அனுபவம் குறித்துப் பேசுகிறார். 


திரைப்படங்களில்  பார்த்து வியப்போம் , ஆனால்  இந்தத் தலைமையாசிரியரோ தினம் ஒரு வகுப்பில் குழந்தைகளுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மாணவிகளிடையே ஒற்றுமை உணர்வும் மேலிடுகிறதாம். யாரோ ஒருவர்  உணவு உண்ணாமல் இருந்தாலும் அறிந்து மாணவிகளே சரி செய்வது நிகழ்ந்திருக்கிறது. அரசுப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள்  சாப்பிடாமல் வருவதும் மயக்கம் போட்டு விழுவதும் தமிழகத்திற்கே உரிய பொதுமைப் பண்பு. இவரது பள்ளியிலும் இது போன்ற குழந்தைகளைக் கண்ட தலைமை ஆசிரியர் பள்ளியின் சத்துணவைக் குழந்தைகள் விருப்பப்படி மாற்றியமைத்துள்ளார். 


பள்ளியைச் சுற்றியுள்ள முள்வேலிக் காடுகளை சுத்தம் செய்து விளையாட்டுத் திடலை செம்மையாக்கி, குழந்தைகளுடன் இணைந்து ஆசிரியர்களும் விளையாட களம் அமைத்துள்ளார் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து .


தனது பள்ளி ஆசிரியர்களே தனது மொத்த பலம் எனப் பகிர்கிறார். கல்வி மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் அனைத்திலும் முழுமையாக மாணவர்களைத் தயார் செய்வதில் ஆசிரியர்கள் நிறைவாகப் பங்காற்றி வருகின்றனர் என்பது இவரது பகிர்வில் வெளிப்படுகிறது. 


மரம் , செடி , கொடி முதல் ஹைடெக் ஆய்வகம் வரை மிக அற்புதக் கட்டமைப்பும் கூட்டுழைப்பும் அப்பள்ளி வளாகத்தில் நிரம்பியிருப்பதைக் காண முடிகிறது. கழிவறைப் பகுதியைக் கடந்து செல்லும் போது கூட முகம் சுழிக்கக் கூடாது  என ரோஸ் கார்டனாக்கியுள்ளனர். பள்ளியை மிக நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பசுமை வளாகமாகவும் பராமரித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் இல்லாத செடிகளை வாங்கி வர பெங்களூர் வரை சென்று திரட்டி வந்துள்ளனர். தாவரங்கள் வளர்ப்புக்காக இதுவரை குறுகிய காலத்தில் இருபதாயிரம் ரூபாய்கள் செலவழித்துள்ளனர். மனிதர்கள் பயன்படுத்தும் மூலிகைத் தாவரங்களை மட்டுமே குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தாமல் பறவைகளுக்குப் பயன் தரும் புதர்த் தாவரங்கள் உட்பட அனைத்தும் வாங்கி வந்து பள்ளிக்குள் வளர்த்து வருகின்றனர். பறவைகள் நீர் அருந்தும் கிண்ணங்கள் உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி ECO Friendly பள்ளியாகத் திகழ்கிறது. 


தேர்ச்சி சதவீதம் எப்போதும் 100 சதம் அல்லது 98 சதமாக இருந்து வருகிறது என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும்.

ஆசிரியர் , மாணவர் மட்டுமல்ல சமூக உறவிலும் இப்பள்ளி சிறப்பாகத் திகழ்கிறது. அவற்றுக்கும் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளார்  தலைமை ஆசிரியர் . 


 கல்வி என்பது தேர்வு மட்டுமல்ல , அதைத் தாண்டிய உலகத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தும் இவர் போன்ற தலைமையாசிரியர்கள் தமிழகம் முழுவதும் இருப்பின் சமூக மாற்றம் என்பது எளிதாக நமக்குக் கிட்டும். 


உமா

No comments:

Post a Comment