இன்றைய சூழலில் கல்வி - 3
ஜூன் மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகள் திறக்கப் படாமல் போனதால் , அதற்கு மாற்றாக ஆன் லைன் வகுப்புகளை கையிலெடுத்தன தனியார் பள்ளிகள் .
கடந்த ஏப்ரல் , மே மாதங்களிலேயே NEET வகுப்புகளுக்காகவும் , 12 ஆம் வகுப்புகளுக்காகவும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கி மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள் .
தற்போது முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன் லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம்.
கல்வி என்பதை ஒரு டிவைஸ் வழியே தர முடியுமா ? ஆசிரியர் - மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால் கற்றல் நடைபெறுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம். வீடுகளே குழந்தைகளுக் பள்ளிக் கூடங்களாகவும் பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப் போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவை சிதைக்கும் வன்முறை மறுபுறம். பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும் காது கொடுக்க முடியவில்லை.
பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல் குழந்தைகளது கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால் தான் சேர்த்துக் கொள்ளும் நிலை , இதையொட்டிய செய்திகள் , புகார்கள் என ஒரு புறம் பூதாகரமாகப் பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன .
இந்த ஆன் லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள் , தனக்கு ஆன் லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின. அது மட்டுமா , கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஆன் லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொளிகளைக் கண்டு நிஜ வாழ்க்கையில் பரிசோதிக்க அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன.
கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன் லைன் வகுப்புகளைத் தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை .
ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.
அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள் சாத்தியமா
தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி , கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள். அப்படியே வைத்திருந்தாலும்
இணைய வழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஊரடங்கால் அன்றாடம் வேலையே இல்லாமல் வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள் இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எல்லோரும் முன் வைக்கும் வினா.
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர். வாட்ஸ் அப் வழியே பாடத் தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள் , அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர்.
சத்துணவுக்காக பள்ளிக்கு வரும் பல லட்சம் குழந்தைகள் , மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் மலைப் பகுதி குழந்தைகள் , ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியுள்ள குழந்தைகள் என பல தரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம் முன் எழும் சந்தேகங்கள்.
உலக நாடுகளில் பின்லாந்து , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தற்போதைய சூழலில் ஆன் லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து ஒரு நாளில் சில மணி நேரங்களில் மட்டும் ஆன் லைன் வழியே குழந்தைகளை கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். முக்கியக் காரணம் அங்கு ஒரே கல்வி முறை -பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய வழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் , பன்னாட்டு பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் என பல பிரிவுகளானப் பள்ளிகள் அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன் லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.
பள்ளி இல்லாக் குழந்தைகள் - இப்படியே விட்டு விடலாமா ?
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்றே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் வீடு என்பது அவ்வளவு பாதுகாப்பானதாக இல்லை . பள்ளிகளும் இல்லை , வீடுகளும் குழந்தைகளுக்கு பள்ளிகளாக மாற்றம் பெற முடியாது. இப்படியான சூழலில் குழந்தைகள் கல்வி பெற குறைந்த பட்சம் மகிழ்ச்சியாக வாழ ஏதாவதொரு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
கல்வி குறித்து தொடர்ந்து பேசி வருபவர்கள் செயல்பாட்டாளர்கள் , தன்னார்வலர் அமைப்புகள் , இயக்கங்கள் போன்றவை குழந்தைகளது கல்விக்காக மாற்று வழிகளை முன்வைத்து வருகின்றனர்.
அரசு தன்னிடம் கல்வித் தொலைக் காட்சி ஒன்றை கல்வித் துறையில் சில வருடங்களுக்கு முன்பாகத் துவக்கியது - தற்போது NCERT கல்வி நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி சேனல்கள் வழியாக ஒளிபரப்பி வருகின்றது. நம் தமிழகத்திலும் SCERT , மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இணைந்து NCERT ஐப் பின்பற்றலாம். பெரும்பாலான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன .விர்ட்சுவல் வகுப்பறைகளையும் கொண்டுள்ளன.
இவற்றை எல்லாம் வைத்து கற்பித்தல் செயலுக்கு ஷிப்ட் முறையில் மாணவரை வரவழைத்து பகுதி பகுதியாக பாதுகாப்பான முறையில் கற்றலில் ஈடுபடுத்த திட்டமிடலாம். அல்லது கிராமங்களில் நோய்த் தொற்று பரவல் இல்லாத இடங்களில் ஆசிரியர்கள் உதவியுடன் வீதிகளில் கூட திறந்த வெளி வகுப்பறைகளைத் திட்டமிடலாம்.
ஆசிரியர் , பெற்றோர் , கல்வி அலுவலர் , கல்வியாளர்கள் ஊர் மக்கள் இணைந்து செயல்பட வேண்டிய காலமிது . பள்ளிக் கல்வியில் புதிய பரிமாணங்கள் பிறக்க வேண்டும்.
உமா
No comments:
Post a Comment