Thursday, 18 March 2021

இன்றைய சூழலில் கல்வி - 11

இன்றைய சூழலில் கல்வி - 11


ஊரடங்கு நீட்டிப்புகளும் பள்ளி திறப்பது குறித்த செய்திகளும் பெற்றோர் கருத்துக் கேட்பும் தொடர்ந்து நிகழ்கின்றன.

 அரசு அறிவித்த  நவம்பர் 16 அன்று பள்ளி திறப்பது குறித்தான செய்தி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 


இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் ,எது கல்வி ? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எண்ணற்ற கேள்விகளை உருவாக்கி வரும்  நாட்களாக நீள்கின்றன. கல்வி என்பது  நீட் தேர்வில் வெற்றி பெறுவதா ? இணைய வழிக் கற்றல் - கற்பித்தலா என்று குழம்பிப் போயுள்ளனர் பெற்றோர்கள். ஆனால் தனியார் பள்ளிகளில் தொடர்ந்து இணைய வழி வகுப்புகள் சரியான திட்டமிடலுடன் நடைபெற்று வருகின்றன. இதனால் ஒரு கட்டத்தில்  குழந்தைகளோ ஒரு வித வெறுப்பு மனநிலைக்கு வந்துள்ளனர். ஏனெனில் வழக்கமாக பள்ளி செயல்படும் போது மாலை  4 மணிக்கு முடிந்து விடும் வகுப்புகள் கூட இப்போது சில இடங்களில் 6 மணிக்கு அதிகமாகக் கூட நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதே போல சிறு வகுப்புகளுக்கு மாதாந்திர தேர்வு , பெரிய வகுப்புகளுக்கு தினத் தேர்வு , வார , மாதத் தேர்வு என்று காலாண்டுத் தேர்வு வரை நடத்தப்பட்டும் வருகின்றனவாம். பெற்றோர் கூட்டங்கள்  இணைய வழியிலும் நேரடியாகவும் நடந்து கொண்டே உள்ளன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இணைய வழி வகுப்புகளுக்கு நிறைய டேட்டாக்கள் செலவாகிறது என்றும் பல வழிகளில் புலம்பித் தான் வருகின்றனர். இணைய வழிக் கற்பித்தலின்  சாதக  பாதகங்கள் குறித்து அச்சு/ காட்சி ஊடகங்கள் பேசிப் பேசி ஓய்ந்து விட்டன. தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு ,உழைப்புச் சுரண்டல் என ஒரு புறம் விவாதம் , புலம்பல் இவை கூட ஒலித்து ஒலித்து  குரல் கம்மி விட்டது. அரசுப் பள்ளிகளில் இரு பருவங்களுக்கான பாடப்புத்தகங்கள்  , பாடக்குறிப்பேடு முதல் அரிசி , பருப்பு , முட்டை என செருப்பு வரை மாணவர்களுக்கு தொடர்ந்து பட்டுவாடா செய்யப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் கல்விக்குள் அடங்குமா ?

பள்ளி திறப்பதை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் குழந்தைகள் ஒரு புறம் இருக்கின்றனர். மற்றொரு புறம் பள்ளிக்கு எதற்கு ?  கல்வி என்பதெல்லாம் வெறும் பேச்சு , எதுவுமில்லாமல் நான் என் வாழ்க்கையை நடத்துமளவிற்கு சம்பாதிக்கத் தயாராகிவிட்டேன் என மாணவர்களில்  ஒரு சாரார் களமிறங்கி விட்டனர். எதார்த்தம் என்ன ?

இந்த வருடம் அரசுப் பள்ளிகளுக்குள் சேர்க்கை அதிகம் என்றாலும் , பள்ளி திறக்கப்படாததால் பல புதுப் புதுப் பிரச்சனைகள் உருவாகியுள்ளன. ,

ஓரளவு வளர்ந்த மாணவர்கள் வீட்டின் பொருளாதாரத் தேவைகளுக்காக பெற்றோருடன் பல்வேறு தினசரி வேலைகளுக்குச் சென்று சம்பாதித்து உதவுகின்றனர் . பல குழந்தைகள் தனது செலவுகளுக்காக பெட்ரோல் பங்க் , சிறு கடைகள் , பெரிய கடைகளில் தினக் கூலிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். பெட்ரோல் பங்க்குகளில் இரவுப் பணிகளுக்கு பெரிய மனிதர்களை விட பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அதிகம் என்கின்றனர் ஈரோடு மாவட்டத்தின் ஒரு கிராமத்து  அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதிகளான

 தினேஷ் - உமா இருவரும் . . ஆம் , உணவு தந்து நாளொன்றுக்கு 600 ரூபாய் இரவுப் பணிக்கு சம்பளம் தருகின்றனர். எங்கள்  பள்ளி மாணவர்கள் இப்படியான பணிகளுக்குப் போகும் போது  , விடுமுறை நாட்களைக் கழித்தாலும் மாதத்திற்கு ஏறத்தாழ 15000 ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டதால் அவர்கள் மனநிலை மாறிவிட்டது. பி.ஈ படித்தவர்கள் கூட பத்தாயிரம் ரூபாய்க்கு அல்லல் படும் போது பள்ளி மாணவர்களான எங்களுக்கு போதுமான  அளவு ஊதியம் கிடைக்கிறது என்கின்றனராம். இது மட்டுமா ? இந்தப் பணம் என்ன செய்கிறது ? பள்ளிக்கு ஆன் லைன் வகுப்புகளுக்கு என அலைபேசி வாங்குகின்றனர் .அதை தவறான பல பழக்கங்களுக்கும்  பயன்படுத்துகின்றனர் , இவர்களை எல்லாம் எப்படி மீண்டும் பள்ளிக்குள் கொண்டு வரப் போகிறோம் என வேதனைப் படுகின்றனர். 


கரூர் மாவட்டத்தில் ஒரு தலைமை ஆசிரியரிடம் பேசும் போது பள்ளி திறக்க ஏதாவது ஏற்பாடு செய்தால் பரவாயில்லை. பதின் பருவத்தினரது இயல்பு வாழ்க்கை சூழல் பெருமளவு எதிர்மறை  மாற்றம் பெற்று வேதனையடைய வைக்கிறது. வீட்டுக்குத் தெரியாமல்  காதல் , பாலின ஈர்ப்பு , உடலுறவு கொள்ளுதல் என தறிகெட்டுப் போய் வீணாகின்றனர் குழந்தைகள். என்னிடம் தொடக்க வகுப்புகள்  படித்த மாணவி தற்போது 17 வயதில் கர்ப்பம் தரித்து காணப்படுவது மிகவும் வேதனையாக உள்ளது. பெற்றோர்களிடம் இது குறித்து பேசினால் , இனிமே என்னத்துக்கு படிப்பு ? கலியாணம் செய்து வைத்து விடுகிறோம் என சாதாரணமாகக் கூறுகின்றனர். பள்ளிகள் நடைபெறும் போது பதின்பருவ மாணவர்களின் இது போன்ற சிக்கல்களை ஆசிரியர்கள் உளவியல் ரீதியாக அணுகி அவர்களது கல்வி வாழ்க்கையை ஓரளவாவது காப்பாற்றி வந்தனர். தற்போது இவற்றிற்கு வழியற்று கதியற்ற குழந்தைகளாகப் போய் விட்டனர் .

இப்படியே போனால் பெண் குழந்தைகள் உயர்கல்வி கற்பது என்பதில் மீண்டும் பின்னடைவு ஏற்படும் என்று வருந்துகிறார். ,

ஒரு  கிராமத்தின் பல தெருக்களில்  பெண் குழந்தைகள் ஒரு பக்கம் புத்தகம் விரித்து வைத்துக் கொண்டு மற்றொரு பக்கம் பிளாஸ்டிக் ஒயர் கூடை பின்னிக் கொண்டு இருப்பதையும் காண முடிகிறது. 

இரு சக்கரப் பழுது பார்க்கும் கடைகளில் சிறு ஆண் பிள்ளைகள் கையில் ஸ்பேனருடன் வேலை பார்ப்பதைக் கண்டு மனதைப் பதறாமல் கடந்து வர முடியவில்லை. அப்படி ஒரு சூழலில் ஒரு சிறுவனை அழைத்து உரையாடும் போது நம்பிக்கையாகப் பேசுகிறான். நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். தினம் இங்கு வேலை பார்த்து 50 ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். என்னிடம் ஒரு XL வண்டியக் குடுத்தா , பார்ட் பார்ட்டாகக் கழற்றி மீண்டும் சேர்த்து வண்டியை ஓட்ட வைப்பேன். நான் பெரியவனானா மெக்கானிக் என்ஜினியரிங் தான் படிப்பேன். அதுக்கு தேவையான பிராக்டிஸ் எல்லாம் இப்போ பன்றேன். எனக்கு தரும் சம்பளத்தைச் சேர்த்து வச்சு எங்கப்பா கிட்ட தந்து தீபாவளி துணி வாங்கிட்டேன். பாடங்கள் படிக்கவில்லையா எனக் கேட்டதற்கு , ராத்திரி வீட்டுக்கு வந்து படிக்கிறேன். அப்பப்போ ஆன்லைன் க்ளாஸ் பாDப்பேன் , நான் படிப்பு , வேலை இரண்டையும் சரியா பண்றேன் என்கிறான். ஈரோடு அருகே நசியனூர் பகுதி அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் இந்த 12 வயது சிறுவன்.

இப்படி நம் சமூகத்தில் எல்லாத் தரப்பு மக்களையும் ஒரு குடைக்குள் கொண்டு வருவதென்பது மிகவும் கடினமான காரியம். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் தினசரி பள்ளி வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். தினசரி பள்ளிக்கு செல்லாத தலைமையாசிரியர்களை தமிழகத்தில் விரல் விட்டு எண்ணிவிடலாம். அதே போல பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் தன்னார்வமாக வீட்டுப் பகுதிகளுக்குச் சென்று குறைந்த பட்ச கற்பித்தலை வழங்கி வருகின்றனர். 

கொரோனா தொற்று நகரப் பகுதிகளில் தான் அச்சுறுத்தி வருவதாகக் கூறுகின்றனர். இப்படியான சூழலில் நாம் ஏற்கனவே பலமுறை இங்கு வலியுறுத்தி வந்த மாற்று முறைகளை ஆசிரியர்கள் அனைவருமே ஏன் கையில் எடுக்கக் கூடாது ? மொத்தமாக ஆயிரக் கணக்கான , நூற்றுக்கணக்கான குழந்தைகளை வர வைக்க பள்ளியைத் திறப்பது குறித்து யோசிக்காமல், சிறு சிறு எண்ணிக்கையிலான மாணவர்களைப் பிரித்து வாரம் ஒரு முறை அல்லது இரு முறை வரவழைக்கலாமே ? பரவுதல் அற்ற கிராமங்களில் அந்தந்த பகுதி  கல்வி அலுவலரிடம் ஆலோசித்து தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்கள் , பெற்றோர் ஆகியோர் இணைந்து தேவையான பாதுகாப்பு வசதிகளுடன் கற்பித்தலை மேற்கொள்ளலாம். ஆனால் சமமாகக் கற்பித்தல் நடக்காததால் தேர்வுகள் அவசியமில்லை. இன்னும் பொதுத் தேர்வுகள் , வெளியிடப் படாதபாடக் குறைப்புகள் விபரம் ,என பல பிரச்சனைகளை இன்றைய சூழலில் கல்வி உருவாக்கி வைத்துள்ளது. |

கல்வி அதிகாரம் மாநில அளவுக்குள்ளேயே பொதுவாக செயல்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது, பரவலாக்கப்பட வேண்டும் என்பதையே உணர்த்துகிறது. எது கல்வி ? என மீண்டும் மீண்டும் நாம் சிந்திக்க ஏராளமான கள எதார்த்தங்கள் வரும் இதழிலும் தொடரும். 


உமா



No comments:

Post a Comment