Wednesday, 17 March 2021

கல்வியில் நாடகம் (Theatre in Education)

கல்வியில் நாடகம் (Theatre in Education)


வகுப்பறைச் சூழலில் புதிய எல்லைகளைக் கண்டறிய முயலும் போதனா முறையின் ஒரு பகுதியாக மாற்றுக் கல்வியாளர்களால் நாடகம் முன்வைக்கப்படுகிறது. ஒரு பாடத்தை,  சமூகவியல் உண்மைகளை பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் தேடிக் கண்டறியக்கூடிய வாய்ப்பை நாடக முயற்சி வழங்குகிறது - பிரளயன் 


நமது கல்வி முறையில் காணும்  பல அபத்தங்களில் ஒன்று, மாணவர்களுக்கு  தகவல் மூட்டைகளை மட்டும் அளித்து தரமாக சிந்திக்கும் திறனையே இழக்கச் செய்வதாக மாறியுள்ள ஒரு கூறு . தகவல்களை அறிவாக அல்லது செயல் அறிவாக மாற்றிக் கொள்வதற்கு இடமில்லாத பள்ளிச் சூழலை மாற்ற ஆசிரியர்கள் தான் , தங்கள்   திறன்களை மேம்படுத்தி கற்றல் - கற்பித்தலில் புதிய வடிவங்களைக் கொண்டு வர வேண்டிய தேவையும் அவசியமும் தற்போது அவசரமாக ஏற்பட்டுள்ளது .அப்படி , வாழ்க்கைக்கும்  சமூகத்திற்கும் தேவையான ஒரு அணுகு முறையை , ஒரு பார்வையை அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்லும் பொருட்டு கல்வியில் அரங்கு அல்லது கல்வியில் நாடகம் (Theatre in Education)

 என்ற ஒரு புதிய முயற்சியை சென்னை கலைக் குழுவின் தலைவர்  பிரளயன் மேற்கொண்டு வருகிறார். 


இதன்படி , ஏற்கனவே திட்டமிட்டிருந்த நேரடி வகுப்புகள் கோவிட் - 19 ஊரடங்கால் இணைய வழிப் பயிற்சிப் பட்டறையாக மாறியது. கடந்த  நவம்பர் மாதம் முதல் நாடகப் பயிற்சி  வகுப்புகள் நடந்து வருகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க அமைப்பு  இதை முன்னெடுத்துள்ளது. நமது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலோர் பங்கேற்று வருகின்றனர். இந்தியா முழுவதிலிருந்தும் பல தேர்ந்த ஆளுமைகளைக் கருத்தாளர்களாகக்  கொண்டு வகுப்புகள் எடுக்கும் பயிற்சிப் பட்டறையை  பிரளயன் ஒருங்கிணைத்து வருகிறார். 


இப்படியான இணைய வழிப் பயிற்சி, இதுவரை இல்லாத புதிய முயற்சி என்றும்,  எதிர்பார்த்ததைவிட பங்கேற்பாளர்கள்  சிறப்பாக எதிர்வினை ஆற்றுவதாக வகுப்பு எடுப்பவர்கள் பதிவு செய்கின்றனர் என்கிறார் பிரளயன் . 


வாரம் இரு நாட்கள் மாலை 6 மணி முதல் 8-30 மணி வரை வகுப்புகள் உரையாடல்களாகவும் , செயல் வழிக் கற்றலாகவும் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி , விழுப்புரம் , புதுக்கோட்டை ,திருவண்ணாமலை , தர்மபுரி , சேலம் , பாண்டிச்சேரி , விருதுநகர் , செங்கல்பட்டு , கோவை , திண்டுக்கல் , ஈரோடு , இராமநாதபுரம் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து அரசுப் பள்ளிகளின்  ஆசிரியர்களும்  , தலைமை ஆசிரியர்களும்   உற்சாகமாகப் பங்கேற்று தங்களது திறன்களை புதுப்பித்துக் கொள்கின்றனர். ஓரிரண்டு தனியார் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பயன் பெற்று வருகின்றனர். 


நாடகக் கலையை எவ்வாறு கல்விக்குள் கொண்டு செல்வது என்பதை மிகச் சிறப்பான வழிகளில் திறனாளர்கள் வழங்கி வருவதையும் பயனாளர்கள் பதிவு செய்கின்றனர். இந்த வகுப்புகளில் கலந்து கொண்ட பிறகு தங்களுக்குள்  நுண் திறன்கள்  பல கோணங்களில் விரிவடைந்துள்ளதாக 

ஆசிரியர்கள் உணருவதாகக் கூறுகின்றனர். 


வகுப்புகள் எடுத்து வரும் திறனாளர்களைக் கூற வேண்டுமானால் , முதலிரண்டு வகுப்புகளில்  கல்வியில் அரங்கு குறித்து , நவீன நாடக அரங்கு , நாட்டுப்புறக் கலை அரங்கு , செவ்வியல் அரங்கு என மிக விரிவான உரையாடலுடன் ,  ஆசிரியர்கள் அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை குறித்தும் வகுப்பு எடுத்த உபேந்திரா .இவர் நாட்டிய சாஸ்திரத்தில்  முனைவர் பட்டம் பெற்றவர் .அசிம் பிரேம்ஜி பவுண்டேஷனில் கல்வியில் நாடகத்துறையில் ஆலோசகராகப்  பணியாற்றி வருகிறார். தொடர்ந்து நம்மிடையே டெல்லி  நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்ற , பணியாற்றிய பலரும் திறனாளர்களாக வகுப்புகளை பகிர்ந்து கொண்டனர். அவர்களுள், குழந்தைகள் உளவியல் குறித்து ஆசிரியர்களின் உளவியல் அணுகுமுறையோடு வழங்கிய ஆஷா சிங்கின் வகுப்பு அனைவரையும் ஈர்த்தது.  அதே போல டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவின் கல்வியில் அரங்குத் சறையில் பணியாற்றும் சுபாஷ் ராவத் ,குழந்தைகளிடையே நாம் எதிர்பார்க்கும் எண்ணறிவு எழுத்தறிவு எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் பெற்றது  படைப்பாற்றல் திறன் , கற்பனைத் திறன் என்பதை மையப்படுத்தி கல்வியியல் அரங்கின் பல்வேறுபட்ட கூறுகளை பங்கேற்பாளர்களுக்கு தெளிவுபடுத்திய விதம் வரவேற்கத்தக்கது. மாயா கிருஷ்ணராவ் , ரெஜின் ரோஸ் , ஆர்வமூட்டும்  உடல் அசைவுப் பயிற்சிகளை வழங்கிய மெலடி டார்க்கஸ்  ஆகியோரும் டெல்லி நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமா வைச் சேர்ந்தவர்கள்.  


அகில உலக அளவில் பிரபலமான  தமிழ் , ஆங்கிலம், இந்தி என  மூன்று மொழிகளிலும் திறன் பெற்ற திறனாளர் ஜீவா ரகுநாத் ஆசிரியர்களைக் குழந்தைகளாக மாற்றி கதை சொல்லிகளாக உருவாக்கி மகிழ்ச்சியின் உச்சகட்ட நிலைக்கு அழைத்துச் சென்றார் எனலாம் . தங்களைத்  தேர்ந்த கதை சொல்லிகளாக பங்கேற்பாளர்களை உணர வைத்த தருணங்களுக்கு இவர் சொந்தக்காரர் .  கூத்துப்பட்டறை நடிகர் , திரை நட்சத்திரம் என பல்திறன் கொண்ட கலைராணி நாடகத் திறன்களில் தேவைப்படும் குரல் பயிற்சி வகுப்பை வசமாக்கினார். அதே போல பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைத் தலைவர் முனைவர் ராஜா ரவிவர்மா பேச்சுப் பயிற்சி வகுப்பை வழங்கியிருக்கிறார். பாலின சமத்துவம் குறித்து கல்வியில் அரங்கை வடிவமைத்த  பேராசிரியர் மங்கை .ஒரிகாமி காகிதக் கலை வகுப்பை செயல்பாடாக மாற்றிய அமல்ராஜ் , பொம்மலாட்ட வகுப்பை நிறைவாக்கி  பங்கேற்பாளர்களை பொம்மலாட்ட கைப் பொம்மைகளை செய்ய வைத்த பானுமதி ,மாஸ்க் மேக்கிங் வகுப்பை ஆர்வமூட்டிய தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் வெங்கடேசன் ,கல்வியில் அரங்கில் கல்வி விளையாட்டுகளை அறிமுகம் செய்த பேரா திருநாவுக்கரசு , குழந்தைகளுக்கான படைப்பாற்றல் கலை வகுப்பு தந்த கோவையைச் சேர்ந்த பேரா ராம்ராஜ் ,  குழந்தைகளுக்கான நாடகத்திறன் வகுப்பெடுத்த முனைவர் கோபி, மற்றும் சில திறன்களைத் தர இணைந்த ரத்தின விஜயன் , குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் பற்றிய வகுப்பைத் தந்த எழுத்தாளர் ப்ரியசகி , வகுப்பறைச் சவால்கள் குறித்து பகிர்ந்த ஆசிரியர் உமா ,கல்வியில் நாடகம் குறித்து திறனாளராக சந்திர மோகன் , வால்ட்டர் பீட்டர் என ஏராளமான திறனாளர்களுடன் வகுப்புகள் பொருண்மை நிறைந்ததாகவும் பொருளுள்ளதாகவும் அமைந்தன. 


இறுதி வகுப்புகளில் இணைந்தவர் பிரளயன் . வளரிளம் பருவம் எனப்படும்  பதின்பருவக் குழந்தைகளைக் கையாளும் திறன்கள் , கல்வியில் நாடகம் குறித்த  வேறுபட்ட பரிமாணங்கள் இவற்றை வழங்கிய இவர் முழுப் பயிற்சிப் பட்டறையையும் ஒருங்கிணைத்த முறை அளப்பரியது 

அடுத்த இணைய வழிப்  பயிற்சி  இம்மாதம் துவங்க இருக்கிறது.  .ஆசிரியர்கள் பங்கேற்று இம்முயற்சி அனைத்துப் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு கல்வி முறையிலேயே மாற்றம் கொண்டு வர வேண்டிய மிக முக்கியமான வழிமுறை  எனலாம்.



No comments:

Post a Comment