வங்கிக் கணக்கும் சாதிச் சான்றிதழும்
பள்ளிக் கல்வியின் பல வித முன்னெடுப்புகளில் ஒன்று மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவது. நிறைய பிரிவுகளில் 12 ஆம் வகுப்பு வரை அரசு அவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கி வருவது மிகவும் வரவேற்கத் தக்கது. அவற்றைக் குறித்து விரிவாக மற்றொரு சமயம் பேசுவோம். ஆனால் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகைகளைப் பெறுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளவும் அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பது குறித்தும் நாம் உரையாடலாம்.
கல்விக்கான இணையதள (EMIS )பதிவுகள்
நமது கல்வித் துறையில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் இணைய தளமான , கல்வி குறித்த தகவல்களை மேலாண்மை செய்து வரும் EMIS (Education management information system) குறித்து நாம் அறிவோம். இதில் தமிழகத்தின் அனைத்து வகை பள்ளிகள் பற்றியும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு இருக்கும். அரசுப் பள்ளிகள் , அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என அனைத்தும் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு பள்ளியில் பயிலும் மாணவர் விபரங்கள் , ஆசிரியர் விபரங்கள் என அனைத்தும் இடம் பெற்று இருக்கும் .இதில் முக்கியமாக இடம் பெறும் பதிவுகளாகக் குழந்தைகளின் சாதிச் சான்றிதழின் அடிப்படையிலான பதிவும் வங்கிக் கணக்கு எண் பதிவும் குறிப்பிடலாம். ஏனெனில் இவை இரண்டும் தான் கல்வி உதவித் தொகைகளுடன் தொடர்புடைய பதிவுகளாக நாம் பார்க்கிறோம்.
பிறப்புச் சான்றிதழும் சாதிச் சான்றிதழும்
நானெல்லாம் சிறுமியாக இருக்கும் போது முதல் வகுப்பிலேயே சாதிச் சான்றிதழை யாரும் கேட்டதில்லை .இதை வாசிக்கும் உங்களுக்கும் ஒரு வேளை அப்படியான அனுபவம் தான் இருந்திருக்கும். பிறப்புச் சான்று , சாதிச் சான்று என எதுவும் கேட்டதில்லை. அரசுத் தேர்வுகள் எழுதும் போதோ , 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் போதோ அதை சரி பார்ப்பர். ஆனால் இன்று சூழல் அப்படியில்லை. தனியார் பள்ளிகள் என்றால் , முன் மழலையர் வகுப்பில் சேர்க்கும் போதே பிறப்புச் சான்றிதழைப் பெற்ற பிறகே பள்ளியில் சேர்க்கை நடைபெறும் . அரசுப் பள்ளிகள் என்றால் முதல் வகுப்பில் பிறப்புச் சான்றிதழை ஒப்படைப்பார்கள் பெற்றோர்கள். பல குழந்தைகளுக்கு இல்லாமல் உள்ள சூழலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இவை முறைப்படுத்தப்பட்டு பெரும்பாலும் பிறப்புச் சான்றிதழைப் பெற்று பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
ஆனால் சாதிச் சான்றிதழ் என அழைக்கப்படும் Community Certificate என்பதை அவ்வளவு எளிதில் பெற்று விட முடியாத சூழலே இங்கு நிலவுகிறது. 60% குழந்தைகளுக்கும் அதிகமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் சாதிச் சான்றிதழைப் பெற்று பள்ளியில் ஒப்படைத்து விடுகின்றனர். ஆனால் ஒரு 30% குழந்தைகளின் பாடு படு திண்டாட்டமாக இருக்கிறது. காரணம் சாதிச் சான்றிதழ் பெறுவது என்பது வருவாய்த் துறையுடன் தொடர்புடைய செயல். நம் தமிழகத்திற்கே உரித்தான சில துறையினரின் கையூட்டு பெறும் நடைமுறையால் சில குழந்தைகளின் பெற்றோர் இச்சான்றிதழைப் பெற முடியாமல் விழிப்பதும் , சரியான அரசு நடைமுறையைப் பின்பற்றும் அதிகாரிகள் இருந்தும் தேவையான சான்றுகளைத் தகுந்த நேரத்தில் தந்து உதவாத ஒத்துழைப்பு தராத பெற்றோர்களால் அக்குழந்தைகளுக்கு இச்சான்றிதழ் கிடைப்பதில்லை. சில குடும்பங்களில் பெற்றோரை இழந்த நிலையில் தாத்தா பாட்டி என இச்சான்றிதழுக்காக அலையும் முதியவர்களையும் நாம் பார்க்கிறோம். வெளி மாநிலங்களிலிருந்து இங்கு வந்து குடியேறும் குழந்தைகள் சிலருக்கு இச்சான்றிதழைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தாய் , தந்தையருக்கு சாதிச் சான்றிதழ் இல்லாததால் குழந்தைகளுக்குப் பெறுவதில் சிக்கல்கள் எனத் தொடர்கிறது .
இவற்றை முறைப்படுத்துவது இன்றியமையாத செயல். ஏனெனில் ஒரு குழந்தையின் சாதிச் சான்றிதழ் என்பது , பள்ளிக் கல்வியோடு நின்று விடுவதில்லை. உயர் கல்வி , வேலை வாய்ப்பு என வாழ்க்கை சார்ந்த பிரச்சனையாக மாறிப் போகிறது.
குறிப்பாக பொதுத் தேர்வு எழுதும் போது ஆசிரியர்களுக்கு இந்த விபரங்களைப் பெற்று கல்வித் துறைக்கு வழங்குதலில் மிகவும் அதிகமான சவால்கள் உருவாகின்றன. ஆசிரியர்கள் பெற்றோர்களை அழைத்து சாதிச் சான்றிதழின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தி வருவதும் அவர்கள் பின்னாலேயே ஆசிரியர்கள் தொடர்ந்து சில முயற்சிகள் செய்து சான்றிதழ் பெற வைப்பதும் நடக்கிறது. ஆனால் எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படிப் பெற்று விட முடிவதில்லை.
சில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது , பெற்றோர்கள் இதில் அக்கறை காட்ட மறுப்பதை வருத்தத்தோடு பதிவு செய்கின்றனர். அதே போல சில பெற்றோர்களிடம் ஏன் இன்னும் சாதிச் சான்றிதழ் பெறவில்லை என்று கேட்கையில் , இதற்கான முயற்சியில் பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீணாவது பற்றியும் தங்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் குறித்து சிக்கலான சூழல் குறித்தும் கிராம அலுவலர் உள்ளிட்ட இச்சான்றிதழ் பெறும் அலுவலகங்களில் எதிர்பார்க்கும் - மேல போட்டு குடு , காசு இருந்தால் தான் பெற முடியும் என்ற எழுதப்படாத நடைமுறைகளும் பற்றிக் கூறி வருந்துகின்றனர்.
ஆகவே பெற்றோர்களுக்கும் அக்கறை வேண்டும் .சம்மந்தப்பட்ட வருவாய்த் துறையினருக்கும் இது குறித்த கருணை வேண்டும் , உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இது போன்ற பிரச்சனைகளில் சேவையாற்றி குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கலைத் தீர்க்கலாம் என்பது ஒரு தீர்வாகக் கருதலாம் .
வங்கிக் கணக்கு உருவாக்கம்
ஒரு நடுநிலை ,உயர்நிலை , மேல்நிலைபள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்ற உடனேயே Emis தளத்தில் வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும் நடைமுறை தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு வகையில் மிகவும் பாராட்டக் கூடிய செயலே. ஏனெனில் கல்வி சார்ந்து ஒரு குழந்தைக்கு கிடைக்கும் ,அனைத்து பணப் பயன்களும் நேரடியாக குழந்தைகளுக்கு சென்று சேர அரசும் கல்வித் துறையும் எடுத்துள்ள முயற்சியாகவே இதைப் பார்க்கலாம். ஆனால் மாணவருக்கான வங்கிக் கணக்கு உருவாக்கத்திலும் சில நடைமுறைச் சிக்கல்களை நாம் சவால்களாக சந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு ஆசிரியர் கூறும் போது , எனது வகுப்பு மாணவிகளில் சிலருக்கு வங்கிக் கணக்கு எண் ஆரம்பிக்கத் தாமதமானதால் இந்த வருட கல்வித் தொகை கிடைக்காமல் போனது. எத்தனை முறை கூறியும் பெற்றோர்கள் அதன் முக்கியத்துவத்தை உணர மறுக்கின்றனர் என வருந்துகிறார் .
மூன்று வருடமாக ஒரு ஆசிரியர் வலியுறுத்தியும், தனது பெண் குழந்தைக்கு வங்கிக் கணக்கை துவக்க இயலாத ஒரு தாய் , தனது மகளுக்கு வங்கிக் கணக்கு எண் ஆரம்பிக்க முயற்சி மேற்கொள்கையில், அவருக்கு ஆதார் எண் இல்லாததால் வங்கியில் கணக்கு உருவாக்கும் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர் என்று புலம்புகிறார். அதோடு தந்தையை இழந்து வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு அம்மா , ஆறாம் வகுப்பில் பயிலும் தனது குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் இருந்தால் தான் வங்கிக் கணக்கு எண் உருவாக்க முடியும் என்பதால் இம்முயற்சியில் தனது இயலாமையைப் பதிவு செய்கிறார் .இவையெல்லாம் ஒரு சில எடுத்துக் காட்டுகளே . ஆயிரக்கணக்கான மாணவர்கள் நிலை இப்படித்தான் தத்தளிக்கும் நிலையில் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்பு வரை சில வங்கிகளில் மாணவர்களுக்கு பூஜ்யம் மதிப்பில் வங்கிக் கணக்கு ஏற்படுத்தியது என்னவோ உண்மை தான். ஆனால் தற்போதெல்லாம் அச்சூழல் இல்லை சில வங்கிகள் 500 ரூபாய் , சில வங்கிகள் ரூபாய் 1000 என பணம் கட்டச் சொல்வது ஒரு வகையில் ஏற்புடையதல்ல. குறிப்பிட்ட மாணவி / மாணவருக்கு பள்ளியிலிருந்து அடையாளச் சான்று (Bona-fide) சமர்ப்பித்தால் ஜீரோ பேலன்ஸில் வங்கிக் கணக்கைத் துவக்கித் தருவதில் என்ன பிரச்சனை எனத் தெரியவில்லை. வட்டிக்கு 1000 ரூபாய் கடன் பெற்று வங்கிக் கணக்கு துவக்கிய பெற்றோரும் இருக்கின்றனர். இவற்றை அரசு கவனத்தில் கொண்டு முறைப்படுத்தினால் அரசுப் பள்ளி மாணவர்களான பயனாளிகள் இச் சிக்கல்களிலிருந்து விடுபடலாம் என்பதை நாம் சுவடு வழியாகக் கோரிக்கையாக முன்மொழியலாம்.
தொடர்ந்து பேசுவோம்
No comments:
Post a Comment