Thursday, 18 March 2021

சோலைவனப் பள்ளியை உருவாக்கும் விவசாய ஆசிரியர்



ஈரோடு மாவட்டத்தின் அருகே  பெருந்துறை என்ற ஊரின் மையப்பகுதியில் அமைந்து அனைவரையும் தனது பசுமையான சூழலால் கவர்ந்து ஈர்க்கும் பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி . பழமையும் பெருமையும் வாய்ந்த இப்பள்ளியின் கற்பித்தல் செயல்பாடுகளும் ,  ஆசிரியர்கள் மாணவர் மீது கொண்டுள்ள அக்கறையும் சுற்று வட்டாரத்தில் பிரசித்தி பெற்றவை. அது அரசுப் பள்ளி போன்று இல்லாமல் பல்கலைக் கழகமாக மிளிர்வது குறித்தும் பல பத்தாண்டுகளாக அனைவரும் அறிவர். ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் பள்ளியின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை வளர்கிறது என்பார் பல வருடங்களாக உதவி தலைமை ஆசிரியராக இருந்து வரும் முதுகலை ஆசிரியர்  அருள்குமார். இவரோடு கை கோர்த்து நகரத்தின் நடுவே சோலைவனத்தை உருவாக்கி தமிழகத்தில் எந்த அரசுப் பள்ளியும் செய்திடாத பல முன்னெடுப்புகளை செய்து வருபவர் அப்பள்ளியின் விவசாயப் பிரிவு முதுகலை ஆசிரியர் கந்தன் .


விவசாயத் துறையில் பொறியியல் பட்டமும் கல்வியியல் பட்டமும்  படித்த இவர் இயற்கை உயிரி உரங்கள் விற்பனையாளராகத்  தனது வாழ்க்கையைத் துவங்கியுள்ளார். லாப நோக்கமின்றி ஆனால் மன நிறைவுடன் மக்களின் உடல் ஆரோக்கியத்தை மனதில் வைத்து இயற்கை உரத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார்.   2009 ஆம் ஆண்டு பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளியின் விவசாய ஆசிரியராகப் பணி நியமனம் ஆகிய போது , மற்ற ஆசிரியர் பார்வையில் அந்தப் பாடப் பிரிவை ஒரு உதவாத குரூப் என்ற நிலையே இருந்திருக்கிறது. இது நாடு தழுவிய மக்களின் பொது புத்தி தானே .


ஆசிரியராக வந்த உடனே மாணவர் மத்தியில் , இந்த விவசாயப் பாடப் பிரிவும் (Agri Group) ஒரு ப்ரொபஷனல் கோர்ஸ் என்ற புரிதலை நிகழ்த்தியுள்ளார். ஒரு மாணவன் மேல் நிலைக் கல்வியில்  அக்ரி குரூப் எடுத்தால் என்னென்ன படிக்கலாம் , வேலை கிடைக்கும் என அவர்களுக்கு விளங்க வைத்திருக்கிறார்.  இந்த பத்தாண்டுகளில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் அரசு வேலையில் இருப்பவர்கள் பலரும் அடங்குவர். அவரவர் குடும்ப சூழலுக்கு ஏற்ற டிப்ளமோ , விவசாயப் பிரிவு பட்டம் , மனித வள மேம்பாட்டுத்துறையின் இரு மாதம் பயிற்சிப் படிப்பு , வனத்துறை என மேற்படிப்பு விபரங்களைக் கூறுகிறார். மாத வருமானம் 25000 முதல் சில லட்சங்கள் வரை வருமானம் ஈட்டும் சுய தொழில் முனைவோரையும் உருவாக்கியிருக்கிறார். இத்துறையில் இவரது மாணவர் அரசுப் பணியின்  உயர்ந்த பதவி வரை ( AA0_- ) சென்றுள்ளதைக் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் ஒரு புறம் எனில் பள்ளியின் வளர்ச்சியில் இவரது பங்கு அளப்பரியது .


காய்கறித் தோட்டம் 

ஓட்டுக்கட்டிடத்தில் இயங்கும் இவரது வகுப்பு மாணவர்கள் தான் உண்மையான வாழ்க்கைக் கல்வியைப் பயில்கின்றனர் எனலாம் . தங்கள் வகுப்பின் முன்புறம்  ஏறக்குறைய 5 சென்ட் இடத்தில் காய்கறித் தோட்டம் போட்டு வெண்டை , கத்தரி ,வெங்காயம் , கீரை வகைகள் , மிளகு தக்காளி, கறிவேப்பிலை , புதினா , பீர்க்கை , சுரைக்காய்  என ஏராளமானவற்றை வளர்த்து வருகின்றனர். சத்துணவுக்கு வழங்குவதோடு பள்ளி மாணவர்கள் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கும் ஆசிரியர்களுக்கும்  வழங்கி விடுகின்றனர் .


மூலிகைப் பண்ணை


பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் கீழா நெல்லி ,தூதுவளை , துளசி , ஆடாதோடா , இன்சுலின் பிளான்ட் ,ரன கல்லி , கற்பூரவல்லி , நில வேம்பு , சிரியா நங்கை , நித்ய கல்யாணி , தவசிக் கீரை , நொச்சி , வெள்ளை எருக்கன் , வல்லாரை என்று பல வகையான மூலிகைச் செடிகளை மாணவர்கள் வளர்த்து வர வழிகாட்டுகின்றார் கந்தன் .இவற்றை ஊர்ப் பொதுமக்களுக்கு விற்று விடுகின்றனர் . முட்புதர்களாக இருந்த பள்ளியின் ஒரு பகுதியை இவ்வாறு மூலிகைப் பண்ணையாக மாற்றியுள்ளார் விவசாய ஆசிரியர் கந்தன். 


மியா வாக்கி அடர்வனமும் வளாக மரங்களும் 


பள்ளியின் பின்புறம் ஆசிரியப் பயிற்றுநர் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு 2800 சதுர அடியில் 1000 மரங்களை 3 வருடங்களாக வளர்த்து அதை அடர்வனமாக மாற்றியுள்ளார் .இது தவிர பள்ளியைச் சுற்றிலும் 1000 மரங்கள் ஆசிரியர்களால் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறதாம். புன்னை மரம் , நெட்டிலிங்க மரம் , தேக்கு மரம் , சொர்க்க மரம் , மலை வேம்பு என பல வகையான மரங்கள்  வளாகத்தை அழகுபடுத்துகிநது. சுமார் எட்டரை ஏக்கர் நிலப்பரப்பு கொண்டுள்ள விளையாட்டு மைதானத்தைச் சுற்றிலும் மரங்களை நட்டுப் பாதுகாக்கின்றனர். மற்றுமொரு சிறப்பு மரங்களின் பெயர்களோடு ஒவ்வொரு மரமும் ஒரு திருக்குறளைத் தாங்கி மாணவருக்கும் மற்றவருக்கும் வழி காட்டுகிறது. 


பூஞ்சோலை 


பள்ளியில் மாணவர் கழிப்பறைப் பகுதியை அழகிய பூஞ்சோலையாக மாற்றியிருக்கிறார் .ஆம் , கழிப்பறை நாற்றத்தை மாற்றி பூக்களின் மனம் அங்குள்ளவர்களை மகிழ்ச்சியாக்கத் தீட்டிய திட்டத்தை  ஆசிரியர் கந்தன் செயல்படுத்தியுள்ளார்.


நாற்றுப் பண்ணை 


மரக்கன்றுகளை வளர்த்து ஒரு மாணவனுக்கு ஒரு மரம் எனக்  கடந்த 5 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வரும் இம் முயற்சியில் இதுவரை இருபதாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி மாணவருக்கு அதைக் கொடுத்து நட வைத்து  வளர்க்க வழிகாட்டி வரும் இவரது பணி சிறப்பு வாய்ந்ததே.


உயிர்வளிச் சோலை -


தமிழகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு முயற்சி என்கிறார். டிரைசினா , ஸ்பேத்தோபைலம் ,செப்புளோரா , சாங் ஆப் இன்டியா , பெப்ரோ மியா , சாமந்தி ,அடினியம் , துளசி , சோற்றுக் கற்றாலை போன்ற  32 வகையான செடிகளை இணைத்து உருவாக்கும் ஒரு வகையான சோலை .இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள நச்சு வாயுக்கள் ஈர்க்கப்பட்டு தூய ஆக்ஸிஜன் உருவாகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பல்லவா .


இவை மட்டுமன்றி வரும் வருடத்தில் ரோஸ் கார்டன் , செங்குத்துத் தோட்டம் அமைக்கும் திட்டங்களையும் செயல்படுத்துவதாகக் கூறுகிறார். வகுப்பறைக்குள் மாணவர்களின் ஆரோக்கியத்திற்காக இன்டோர் பிளான்ட்ஸ் வளர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். 


பராமரிப்பு 

இவற்றைப் பராமரிக்க நீர் வேண்டுமே எனக் கேட்ட போது பள்ளிக்குள் 12 இடங்களில் மழை நீர் தொட்டிகள்  அமைத்துள்ளதாகக் கூறுகிறார் .  பள்ளிக்குள் நிறைய வேகத் தடைகளை அமைத்து மழை நீரை அவற்றின் வழியாக சேகரிக்கும்  முறை பற்றியும் கூறிட நாம் வியக்கிறோம். அதோடு 3 ஆழ்துளை நீர் வழிகள் ( Bore) இருப்பதைக் கொண்டும், அரசின்  மேல் நிலை நீர்த்தொட்டி வசதி கொண்டும் இத்தனை பசும் பரப்புகளைப் பராமரிப்பதாகக் கூறுகிறார். 


அதோடு அக்ரி பாடப் பிரிவு மாணவர்கள் மண்புழு உரம் , இயற்கை உரம் தயாரித்து தொடர்ந்து பராமரிப்பதும் முக்கியக் காரணம். இந்தக் கொரோனா ஊரடங்கு நாட்களிலும் கூட ஒரு வரை பணிக்கு அமர்த்தி அன்றாடம் செடி , மரங்களுக்கு நீர் ஊற்றும் பணி நடக்கிறதாம். 


பிளாஸ்டிக் ஒழிப்பு - புது முயற்சி 


இவை மட்டுமன்றி பள்ளி வளாகத்திலும் சுற்று வட்டாரத்திலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிட இவர் எடுத்த முயற்சி ஒரு ப்ளாஸ்டிக் எடுத்து வந்தால் ஒரு சாக்லேட் கொடுப்பது . மாணவர்களிடையே நல்ல வரவேற்று பெற்று , சாக்லேட் கடலை மிட்டாயாக , பொரி உருண்டையாக மாற்றம் பெற்றுள்ளது .


ஊருக்குள் பசுமை முயற்சி 


கடந்த 4 ஆண்டுகளாக தனது  விவசாய பாடப் பிரிவு மாணவர்களின் பள்ளி இறுதி நாளில் ஊரின் சுற்றுப்புறப் பகுதிக்குச் சென்று 50 மரங்களை நட்டு விட்டு , அனைவரும் உணவு தயாரித்து ஒரே இடத்தில்  அமர்ந்து உண்ட பிறகு வீடு செல்லும் முறையை மாணவரிடையே விதைத்துள்ளார் . இது ஊரையே பசுமையாக்கும் முயற்சி எனலாம் .


கல்வி அலுவலர்கள் விரும்பும் பள்ளி 


பெற்றோர் , மாணவர் , ஊர் மக்கள் அனைவரும் விரும்புவதோடு  , மாவட்ட ஆட்சியர் , உயர் நீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்ற உயரதிகாரிகள் , மாவட்டக் கல்வி அலுவலர் ,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் , மாநில அளவிலான இணை இயக்குநர்கள் என அனைவரும் விரும்பி பள்ளியைப்  பார்வையிட்டு பாராட்டிச் செல்லும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. 


நகரின் மத்தியில் இரைச்சலின் நடுநாயகமாக, போக்குவரத்து புழுதிக்குள்  இருந்தாலும் பள்ளிக்குள் நுழைந்து விட்டால் காற்று மாசையோ ஒலி மாசையோ சற்றும் உணர முடிவதில்லை . அற்புதமான அரசுப் பள்ளியை உருவாக்கும் கந்தன் போன்ற விவசாய ஆசிரியர்கள் ஒவ்வொரு ஊருக்கும் தேவை. 


உமா








  






No comments:

Post a Comment