கல்வியை மாநில உரிமையாக்குங்கள்
2020 ஆம் ஆண்டின் புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ள இவ்வேளையில் கல்வியை மாநில உரிமையாக்குங்கள் என்ற கோரிக்கையை மிக வலிமையாக ஒலிக்க வேண்டியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலங்களிலேயே கூட கல்வியை மாநிலங்களின் உரிமையாகவே அறிவித்திருந்தனர். அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 26.01.1950 ஆம் நாள் முதலாக கால் நூற்றாண்டு காலம் கல்வி மாநிலங்களின் கட்டுப்பாட்டில் மிகச் சிறப்பாக வளர்ச்சி பெற்றது என்பதை இன்றைய தமிழகக் கல்வி வரலாறு பதிவு செய்கிறது.
இந்த சூழலில் ,அவசர கால நேரத்தில் பிரதமர் இந்திர காந்தி அவர்கள் 1976 இல் கல்வியை அரசியலமைப்பின் 42 ஆவது சட்டத் திருத்தப்படி பொதுப் பட்டியலுக்குக் கொண்டு வருகிறார்.
1950 ஆம் ஆண்டு முதல் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் II இல் பதினொன்றாம் பிரிவில் இருந்த கல்விக்கான மாநில அரசின் சட்டமியற்றும் உரிமை மாற்றப்பட்டு பட்டியல் III இல் பிரிவு 25 க்குள் கொண்டு வரப் படுகிறது .அதுதான் மத்திய மாநில அரசுகள் இரண்டுமே கல்விக்கான சட்டங்களை இயற்றும் அதிகாரம் ,உரிமை என்பது. அப்படி மாற்றியதை ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent list) என்றே அழைத்து வந்தனர். ஒத்திசைவுப் பட்டியல் என்பது கல்விக்கான சட்டமியற்றுதலை இரு தரப்பு அரசுகளும் இசைவுடன் செயல்படுத்தலாம் எனப் பொருள் கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் தலையீடின்றி மாநிலங்கள் தங்கள் கல்விப் பணியைத் தொடர்ந்து மிகச்சிறப்பாகவே செய்து வந்துள்ளன.
தற்போதைய அரசியல் சூழலில் கல்வி உரிமை என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருந்தாலும் மாநிலங்களின் கருத்துகளுக்கு இடமின்றி முழு அதிகாரத்தையும் மத்திய அரசே கையாள்வது கண்கூடாகத் தெரிகிறது.
மிகச் சிறந்த உதாரணம் மாணவரது மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் நடைமுறையைக் கூறலாம். இந்தியாவிலேயே அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழகம் மட்டும் தான். கடந்த மூன்றாண்டுகள் முன்பு வரை நமது மாநில மாணவர்களே அதிக சதவீதத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்து படித்து வந்தனர். அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட சதவீதத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்த பிறகு நமது மாநில மாணவர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தது பற்றி எல்லோரும் அறிவோம் .அதோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் என்பது அரிதானது .அனிதா போன்ற மாணவர்களின் மரணங்கள் இதை நமக்கு வலியுறுத்துகின்றன.
கல்வி நமது மாநில உரிமையாக இருந்தால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டோம். நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்டமன்றத் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு கொடுத்து சில வருடங்கள் ஆகியும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் கிடக்கிறது. ஏனென்றால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்பது மத்திய அரசின் ஒப்புதல் தானே . இங்கு நாம் ஒத்திசைவுப் பட்டியல் என்பதை கவனித்தால் அது ஒரு போலியான கண்துடைப்பாக உணர முடியும்.
இது மட்டுமா ? நம் தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு , தனியார் பள்ளிகள் என எல்லாவற்றிலும் பொதுவான பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அமலுக்கு வந்த திட்டம் தான் சமச்சீர் கல்வி . 2011 ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்த பிறகு மத்திய அரசின் வாரியப் பள்ளிகள் (CBSE) மீதான ஈடுபாடு அதிகமாக மக்களிடையே உருவாகும் சூழலும் வந்தது. மாநிலப் பாடத்திட்டத்தைக் கொண்டிருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகள் CBSE பள்ளிகளாக மாற்றம் பெற்றன.
இப்படி தொடர்ச்சியாக மாநில அளவிலான கல்விக் கொள்கைகளைப் புறந்தள்ளும் போக்கு சில வருடங்களாக மிக அதிகமாக உருவாகி வந்தது.
தொடர்ந்த இவை போன்ற சிக்கல்களுக்கு மத்தியில் தான் கடந்த ஆண்டில் தேசியக் கல்விக் கொள்கை வரைவு 2019 ஐ மத்திய அரசு ஆங்கில மெழியில் வெளியிட்டது. 484 பக்கங்களைப் படித்து மக்களின் கருத்துகளை வெளியிட ஒரு மாதம் மட்டுமே நேரம் தந்ததும் தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்புகளும் விவாதங்களும் உருவானதும் நன்கறிவோம் .
வரைவுக் கொள்கை தானே , மக்கள் கருத்துகளை மனதில் கொண்டு மாற்றங்களுக்கு உட்படுத்தப்படும் என்ற கருத்தும் கூட ஒரு புறம் நிலவி வந்தது. ஆனால் நோய்த் தொற்றின் தீவிரம் , ஊரடங்கு , பொருளாதாரப் பிரச்சனை என உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் திடீரென மத்திய அரசு வரைவைக் கல்விக் கொள்கை 2020 என தடாலடியாக சமீபத்தில் வெளியிட்டிருப்பது தான் அனைவருக்கும் பேரதிர்ச்சி. ஒரு வேளை லட்சக்கணக்கான மக்களின் கருத்துகளுக்கு காது கொடுத்து ஏதாவது மாற்றம் செய்துள்ளனரா என்றால் அதுவும் இல்லை. .
மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை சின்னாபின்னமாக சீர்குலைத்து ஒரு தேசிய அளவிலான கல்விக் கொள்கையை புதுமை என்ற பெயரில் கொண்டு வந்துள்ளதை நாம் எப்படி வரவேற்பது ?
ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1924 இல் ஒரு செயல்முறையை அரசு உருவாக்கியது. அதில் தாய் மொழி வழிக் கல்வியைத் தான் தொடக்கக் கல்வியில் நடைமுறையில் இருப்பதைக் கட்டாயமாக வலியுறுத்தியது.
உலகில் மிகச் சிறப்பாக கல்வியால் வளர்ந்த பின்லாந்து , ஸ்கான்டிநேவியன் நாடுகள் , சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகள் அங்குள்ள குழந்தைகளுக்கு தாய் மொழி வழிக் கல்வியைத் தான் கட்டாயமாக்கியுள்ளது , ஆனால் இந்த தேசியக் கல்விக் கொள்கையோ தாய் மொழிவழிக் கல்வி பற்றி சிறு அளவிலேனும் குறிப்பிடாமல் , சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளவும் இந்தி மொழியைக் கற்றுக் கொள்ளவும் முழுமையாக வலியுறுத்துகிறது.
நமது மக்களிடையே மும்மொழிவழிக் கல்வி குறித்த பிரச்சனை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மொழி மட்டும் தானா பிரச்சனை ?.. என்றால், இல்லை , குழந்தை பிறந்து 3 வயது ஆகும் போதே , முறையான கல்வி முறையைக் கொண்டு வரப் பார்க்கிறது இக்கல்விக் கொள்கை , 3 வயதில் பள்ளிக்குள் முழு நேர பாடம் கற்றுக் கொள்ள வரும் குழந்தைக்கு 3 ஆம் வகுப்பில் ஒரு பொதுத் தேர்வு , 5 , 8 வகுப்புகளிலும் பொதுத் தேர்வுகள் , அதுவும் தேசிய அளவில் தான் எல்லாமே கண்காணிக்கப்படுமாம். முதல் தலைமுறையில் கிராமப்புறங்களில் இருந்து வரும் குழந்தைகள் இந்த படிப்படியான பொதுத் தேர்வுகளால் இடை நின்று கல்வி மறுக்கப்பட்டு படிக்காத சமுதாயம் உருவாகும் நிலை ஒரு புறம் இருக்கட்டும் . உளவியல் சார்ந்து தேர்வுக்கு இவ்வளவு அழுத்தங்கள் தேவையா என்பதை முதலில் நமக்குள் விவாதிப்பது அவசியம் .ஏற்கனவே நம் தமிழகத்தில் அரசாணை 164 ஐப் பிறப்பித்து 5 , 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பதன் பிரச்சனை முடிவக்கு வந்தது , இதுவும் இக் கல்விக் கொள்கையின் ஒரு சாரமே. .
ஏற்கனவே இருக்கும் 5+ 5+2 கல்வி முறையை மாற்றி ஒன் 5+ 3 + 3 + 4 என்ற முறைக்கு மாற்றினர் எனப் புரியவில்லை. குழந்தைகளை 15 ஆண்டு காலம் தொடர்ச்சியான கற்பித்தலில் ஈடுபடுத்தும் திட்டத்தைக் கூறுவதோடு , 5 ஆம் வகுப்பிலேயே தொழிற்கல்வியை அறிமுகம் செய்யப் போவதாக அறிவுறுத்துகிறது. ஒரு வரியில் முன் மழலையர் வகுப்பு முதல் தொழிற் கல்வி என்ற குறிப்புகள் திகைக்க வைக்கின்றன.
8 ஆம் வகுப்பிலேயே மாணவன் தனக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்து கொள்ள வழிகாட்டுகிறது ,அப்படியானால் , உனக்கு படிக்க வரவில்லை எனில் ஏதேனும் ஒரு தொழிலைத் தேர்ந்தெடு எனக் கூறுகிறது ,சில உதாரணமாக தச்சுத் தொழில் , நெசவு , மண்பாண்டம் செய்தல் இவற்றைக் கூறுகிறது. அப்படியானால் , உனக்கு படிப்பு வரலியா ?, போ .. போய் தொழில் செய் என விரட்டுவதான தொனி இருக்கிறது , நவீன குலக் கல்வி என்கின்றனர் கல்வியாளர்கள் .
அதோடு 9 முதல் 12 வகுப்புகள் வரை செமஸ்டர் தேர்வு முறைகளும் , அதை மாணவன் அவன் வசதிக்கு எப்போது வேண்டு
மானாலும் படித்துக் கொள்ளலாம் என வழிகாட்டுவது இன்னும் இருண்ட காலக் கல்வியைக் கொண்டு வரும். 14 வயது நிரம்பிய மாணவன் அல்லது மாணவி தன் விருப்பப்படி செமஸ்டர் தேர்வை எழுத முடிவெடுக்கும் பக்குவமான புரிதலான சூழலில் நமது சமூகம் இன்னும் வளரவில்லை , இது அடுத்தடுத்த சிக்கல்களையே உருவாக்கும் , பெற்றோர் மாணவரிடையே சிக்கலான உறவை வளர்க்க இது துணை போகும். இவ்வகுப்புகளில் கணக்கு அறிவியலுக்கு முக்கியத்துவம் தரப் போவதாகவும் எந்த பாடம் வரவில்லையே அதோடு அந்த வகுப்பில் ஒரு சான்றிதழ் தரப்போவதாகவும், அந்த மாணவர் தனக்கான தொழிற்கல்வியைத் தேர்வு செய்யலாம் எனவும் கூறி பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேறும் வாயில்களை இக்கல்விக் கொள்கை தெளிவாகக் கட்டமைத்து இருக்கிறது. அதோடு இந்த 4 ஆண்டு கால மாணவர்களிடையே அறிவியல் கணித சிந்தனை வளர்க்க என்ன ஏற்பாடுகள் செய்யப்படும் என்றெல்லாம் தெளிவின்றி இக் கல்விக் கொள்கை குழப்புகிறது.
இவற்றை எல்லாம் கடந்து 8 செமஸ்ட்டர் எழுதி தேர்ச்சி பெறும் மாணவர் உயர் கல்விக்கு கல்லூரியில் சேர வேண்டுமெனில் எந்த இளங்கலை என்றாலும் (BA தமிழ் , BSC கணக்கு , BSC இயற்பியல் ,BCOM) நுழைவுத் தேர்வு எழுதித்தான் மேலே கல்லூரிக்குள் நுழைய முடியும் , இப்போது மருத்துவப் படிப்பிற்கு எழுதும் நீட் தேர்வு போல .. அப்படி என்றால் பள்ளிக் கல்வியின் தேவை தான் என்ன ? எல்லோரும் வீட்டில் இருந்தபடியே கோச்சிங் சென்ட்டர் சென்று பயிற்சி எடுக்கும் நிலைதான் வரும் , இயல்பாகவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் .. அதைத் தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பின்மை உருவாகும்.
இன்னொன்று கூறுகின்றது இக்கொள்கை , தேர்வுகள் பாடநூல்களை மையப்படுத்தாமல் , மாடுலார் (Modular approach) அப்ரோச் என்ற புதிய முறையில் தேர்வுக்கான சில குறிப்பிட்ட பாடங்களை மையப்படுத்தி சந்தையில் வெளியிடும் நோட்ஸ்சுகள் தயாரிப்பு , அதை மட்டுமே தேர்வுகளுக்குப் பயன்படுத்துவது என்றால் ,கோடிக்கணக்கான பணம் செலவழித்து தயாரிக்கப்படும் புத்தகங்கள் எதற்கு ? NCERT தான் மொத்த இந்தியாவுக்கும் பள்ளிப் பாடநூல் தயாரிக்கும் என்றும் மாநில நிறுவனங்களான SCERT சிறு மாறுதல் செய்து கொள்ளலாம் எனக் குறிப்பிடும் இக் கல்விக் கொள்கையின் படி டெல்லியை மையமாக வைத்து தயாரிக்கப்படும் பாடநூலில் கர்நாடக இசையும் , இந்துஸ்தானி இசையும் தான் அறிமுகம் செய்யப்படும் , நமது உள்ளூர் கலைகள் , இசை , நமது பண்பாடு என எதுவும் நம் குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியாது, உள்ளுர் கலைகள் , தற்சார்பு , பாரம்பரியம் இவை பற்றி மாணவர் அறிந்து கொள்வதே அரிதாகி விடும். .
மேலும் குடும்பப் பாரம்பரியம் , பல நூற்றாண்டு கலாச்சாரம் இவற்றை தொடக்க நிலை வகுப்புகளில் புகுத்தி விடத் துடிக்கிறது .இது முற்போக்கு சிந்தனைகளைப் பின்னுக்குத் தள்ளி பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆதி கால நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது தெளிவு.
உள்ளூர் வளம் சாராத ஒரு கல்வி மனிதனை மனிதனாக்காது , வேலைக்கு தயாரிக்கும் இயந்திரங்களாகவே நம் குழந்தைகள் உருவாக்கப்படுவர், அதோடு பள்ளிகளில் பெரும்பாலும் வகுப்பெடுக்க தன்னார்வலர்களையும் சமூக சேவகர்களையும் ஈடுபடுத்தக் கூறுவது நமக்கு மறைமுகமாக ஆசிரியர்கள் நியமனம் இருக்காது என்பதை வலியுறுத்துகிறது , எனில் வரும் இளம் தலைமுறையினர்க்கு வேலை வாய்ப்புகளற்ற சமுதாயமாக மாறும் என்பதும் கண்கூடு .
மாணவர் குறைந்தால் பள்ளிகள் இணைப்பு (School Complex) என்ற அறிமுகம் பல அரசுப் பள்ளிகளையும் மூடுவதற்கான திட்டம் என்பதை உணர்த்துகிறது. இது கடந்த கல்வி ஆண்டிலேயே நமது தமிழக அரசின் செயல்முறைகளில் அரசாணைப்படி இணைந்து விட்டதை சமூகம் அறியவில்லை.
அதோடு உயர்கல்வியில் பல்கலைக்கழகங்களுக்கான ஒரு சிறப்பு அறுபட்டு அந்தந்த கல்லூரிகளே பட்டம் அளிக்கும், எல்லாவற்றையும் தேசிய அளவில் ஒரு ஏஜென்ஸி தரக்கட்டுப்பாடு தர மதிப்பீடு செய்ய அமைக்கப்படும் என்கிறது. சரியாக மதிப்பீடு வாங்காத கல்லூரிகள் பொது நூலகமாக , அரசின் வேறு பணிகளுக்கான இடமாக மாற்றப்படும் எனில் கல்லூரிகளையும் மூடுவதற்கான வழிகள் இவை. 2030 க்குள் இவை அனைத்தும் நடந்து விடும் என்று கூறுவதைப் பார்த்தால் நாட்டில் உள்ள ஏறக்குறைய 50000 அரசு கல்லூரிகளை மூடிவிடும் அபாயம் உள்ளது.
தனியார் பள்ளி , கல்லூரிகள் கட்டணத்தை அவர்களே நிர்ணயிக்க வழிகாட்டுகிறது . காட்ஸ் ஒப்பந்தப்படி வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவிற்குள் நுழைய வைத்து யாருக்கு கல்வி தரப் போவதாகக் கூறுகிறது எனத் தெரியவில்லை.
கல்வி அதிகாரம் மாநில அரசுகளின் கையிலிருந்து அபகரிக்கப்பட்டு தனியார் மயத்தை தாராளப்படுத்தி அடித்தட்டு மக்களை கல்வி கற்காத சூழலுக்கு தள்ளும் இக் கல்விக் கொள்கை பெண்களுக்கான கல்வி குறித்து எங்குமே சிந்திக்கவில்லை , அதோடு பட்டியல் இனக் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகைகளை மறுக்கிறது . இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பான பல கூறுகளை உள்ளடக்கியுள்ளது . சத்துணவைக் கூட 6 ஆம் வகுப்புக்கு பிறகான மாணவர்களுக்கு இல்லாமல் செய்கிறது.
ஆசிரியர்களைப் புறக்கணிப்பதோடு வெளியிலிருந்து ஆட்களை பள்ளிக்குள் கொண்டு வருகிறது. ஆசிரியர் பதவி உயர்வு கூட ஊழலுக்கு வழி வகுக்கும் முறையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது .
பொதுப்பள்ளியையோ அருகமைப் பள்ளி குறித்தோ, நிதி ஒதுக்கீடு , இட ஒதுக்கீடு இவற்றைக் குறித்தோ எதுவுமே பேசப்படவில்லை , வெறும் வார்த்தையாக 6% நிதி ஒதுக்கீடு குறித்து பேசுவதை நாம் எப்படி நம்புவது ?
இன்று கல்வியில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி மிகத் தெளிவான அறிக்கையாக உள்ளது வரைவு , ஆனால் அவற்றை சரி செய்வதற்கான முயற்சிகள் எதையும் சரியாகக் கூறவில்லை. ஒத்திசைவு (ConCurrent) பட்டியலில் இருக்கும் போதே நமது கல்வித் தேவைகளை நாம் முழுமையாக அடைய முடியாத போது மைய அரசின் அதிகாரக் குவிப்பிற்குள் சென்று விட்டால் பாரா முகமாகி நம் மாநிலக் குழந்தைகள் கல்வி கற்பது, பெரும் சவாலாகி விடும்.
அமெரிக்காவில் கூட கல்வி அதிகாரம் மையத்தில் இல்லை , மாகாணங்களுக்கு தான் அதிகாரம் பரவலாக்கப்படுகிறது. இங்கு நீலகிரி மாவட்டக் குழந்தைக்கும் சென்னைக் குழந்தைக்கும் கூட கல்வியில் தனித்தனியான சூழல், கல்வியின் படி நிலைகளில் வேறுபட்ட தேவை அவசியமாகிறது. அப்படி இருக்கையில் கல்வியில் மிக முன்னேறிய மாநிலமான தமிழகப் பள்ளிகளுக்கும் மிகவும் பின் தங்கிய மாநிலங்களான பீகார் ,சட்டீஸ்கர் , ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் குழந்தைகளையும் ஒரே பாடத்திட்டத்திற்குள் ஏன் கொண்டு வர வேண்டும் ? எதற்காக கொண்டு வர வேண்டும்.?
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை மட்டும் மனதில் கொள்ளக் கூடாது மாணவர்களைப் பள்ளியில் தொடர்ந்து இருக்க வைக்கவும் , அவர்களது கற்றல் விளைவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் . இக்கல்விக் கொள்கை சேர்க்கை குறித்து மட்டுமே பேசுகிறது . கல்விக் கொள்கை கல்வியின் மேம்பாடு குறித்து யதார்த்தத்தை இணைத்து ஆய்வுக்குட்படுத்தி பிரச்சனைகளைக் களைய முற்பட வேண்டும் . அப்படியான நோக்கமும் இதில் இல்லை -
எல்லோருக்கும் கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை , ஆனால் அந்தப் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது இக்கல்விக் கொள்கை .
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் இருள் சூழ் உலகைக் கண்களுக்கு காட்டும் இவ் வரைவு , அடிமைச் சமுதாயத்தை உருவாக்கும் சாசனம் இது. , நம் குழந்தைகளுக்குத் தேவையான கல்வியை நாமே வழங்க வேண்டும் என்றால்
கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும். ஆகவே தான் கல்வியை மாநில உரிமையாக்க வலியுறுத்துகிறோம்.
உமா
No comments:
Post a Comment