அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் (A3) முகநூல் நேரலை
அரசுப் பள்ளிகளின் மீது அவநம்பிக்கையும் தவறான புரிதலும் ஏற்படுத்தி குறை சொல்வது சமூகத்தின் அன்றாட வேலைகளில் ஒன்றாகிவிட்ட காலகட்டம் அது, 2015 ஆம் ஆண்டு . ஆனால் இது உண்மையல்ல , இயல்பாகவே அரசுப் பள்ளிகளில் அர்ப்பணிப்பு பணியை செய்து வரும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இருப்பதை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டது தான் இந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ( A3 - ஏத்ரீ)
மாநில அளவில் உருவாகியுள்ள இவ்வமைப்பில் தங்கள் பள்ளிகளை சிறப்பாக செயல்படுத்தும் தலைமையாசிரியர்கள் , ஆசிரியர்கள் என பாகுபாடின்றி அனைவரும் இணைந்துள்ளனர். தொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என எல்லா வகையான பள்ளிகளிலும் இருந்தும் இணை்ந்து இருக்கின்றனர். ஏறக்குறைய தமிழகம் முழுவதும் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து செயல்படும் தன்னெழுச்சியான அமைப்பு இது. சங்கங்கள் சார்புடையதோ மற்ற அரசியல் சார்புடையதோ அல்லாத மாணவர் நலன் விரும்புகின்ற ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் உடன் இணைத்து பயணிக்கும் அமைப்பாக இது கடந்த 5 வருடங்களாக இயங்கி வருகிறது.
வருடம் தோறும் ஆசிரியர் கூடல் விழாவை மாநிலத்தின் ஏதேனும் ஒரு மாவட்டத்தில் நடத்தி வருகிறது. அந்தந்த மாவட்டA3 உறுப்பினர்கள் பொறுப்பு எடுத்து ஏற்பாடுகளை செய்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூடல் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கூடல் விழா திருச்சியில் நடைபெற்றது. மாநிலம் முழுவதிலிருந்து 150 ஆசிரியர்கள் தன்னார்வமாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து ஆசிரியர் தின கூடல் விழாக்களாக கொல்லிமலை , திருநெல்வேலி , தஞ்சாவூர் , ஈரோடு என 4 வருடங்கள் நடந்துள்ளது. அவரவர் சொந்த செலவில் பயணித்து தங்குமிடம் , உணவு இவற்றிற்கான செலவுகளைப் பகிர்ந்து கொள்வதோடு அறிவுப் பகிர்தலும் நடந்து வீடு திரும்புவர்.
ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிரும் தளமாக , சவால்களை சந்தித்த கற்பித்தல் அனுபவங்கள் , மாணவரது கற்றல் விளைவுகள் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து உற்சாகம் பெற்று மாற்றத்தை நோக்கிப் பயணிக்க இந்தத் தளம் உதவி செய்கிறது. ஏராளமான பெண் ஆசிரியர்கள் தைரியமும் தன்னம்பிக்கையுடனும் இன்று சமூக பொதுத் தளங்களில் , ஊடகங்களில் வெளிப்படுவதற்கும் இத்தளம் வழிகாட்டி வருவது கூடுதல் சிறப்பு.
கூடல் விழாக்கள் மட்டுமன்றி ஆசிரியர்கள் தங்கள் பணி சார்ந்த திறன்களை எவ்வெவ்வகைகளில் மேம்படுத்திக் கொள்ளலாம் என நேரடி அனுபவங்களை உருவாக்கித் தருகிறது.
அதற்காக கற்பித்தல் - கற்றல் செயல்பாட்டில் கணினி வன்பொருள் , மென்பொருள் கையாளுதல் குறித்த ICT பயிற்சியை மாநில அளவில் விழுப்புரம் , கோவை , கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் இரண்டு , மூன்று நாள் பயிற்சியாக நடத்தியது. எங்கெங்கோ கிராமங்களில் ICT குறித்து திறன்களை அறிந்து கொள்ள இயலாதிருந்த தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இப்பயிற்சிகளில் கலந்து கொண்டு மிகப் பெரிய மாற்றங்களை தங்கள் வகுப்பறைகளிலும் பள்ளிகளிலும் நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்ல எப்போதும் எந்த நேரத்திலும் இதன் உறுப்பினர்கள் தங்கள்
பகிர்வுகளை மனமுவந்து மற்றவருக்கு வழங்குவர்.
உதாரணமாக இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தனது கணினி பயன்பாட்டு திறனை கற்பித்தலைப் பயன்படுத்துவதை சென்னை ஆசிரியருக்கு வழங்குவார். கரூர் மாவட்ட ஒரு தலைமைஆசிரியர் தன் பள்ளிக் கட்டமைப்பை அரசு நிதியின் வழி வளப்படுத்தியுள்ளதை குழுவில் உள்ள மற்ற பள்ளிகளுக்குத் தெரிவித்து வழிகாட்டுவார். இது போன்ற பகிர்வுகள் தொடர்ந்து நிகழும் .
இக்குழு தொடர் செயல்பாடுகளை செய்து வரும் பொழுது ஒவ்வொன்றிற்கும் தனித் தனி வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி செயல்படும் .அச் செயல்பாடு முடிந்தால் அக்குழுவை நீக்கி புதுக் குழுக்கள் ஆரம்பிப்பது என தன்னை வடிவமைத்துக் கொள்ளும் . அரசுப் பள்ளிக் குழந்தைகளிடையே வாசிப்பை தொடர் செயல்பாடாக எடுத்துச் செல்ல கடந்த 3 வருடமாக க்ரியா பதிப்பகத்தின் உதவியுடன் 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சிறுவர் புத்தகங்களை , க்ரியா அகராதியை வழங்கி வருகிறது. முழுக்க முழுக்க க்ரியா பதிப்பகம் கொடையாளர்களைக் கண்டறிந்து இப்பள்ளிகளுக்கு 12 தலைப்புகளில் ரூ 600000 - ஆறு லட்சம் மதிப்பில் A3 குழு பள்ளிகளுக்கு புத்தகங்களை வழங்கியுள்ளனர். இதற்கென பிரத்யேகமாக A3 + Crea புத்தகங்கள் என்ற வாட்ஸ் அப் குழுக்கள் 3 உண்டு. புத்தகங்களைப் பெற்ற குழுவின் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாசிப்பு அனுபவத்தை காணொளிகளாக , படங்களாக , குரல் பதிவுகளாக இக்குழுக்களில் பகிரும் போது கொடையாளர்கள் மகிழ்கின்றனர் . பதிப்பகத்தாரும் குழுவில் இணைந்து மாணவர் செயல்பாடுகளை ஆசிரியர்களது பகிர்வுகள் வழியே அறிந்து உற்சாகம் அடைவதால் 4 வருடங்களாக இந்த புத்தகப் பரிசுகள் சுமார் 500 அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வழியே பள்ளிகளைச் சென்றடைந்துள்ளது.
அதே போல சிறுவர்களுக்கான மாத இதழாக வெளிவரும் தும்பி என்ற இதழை மாநிலம் முழுவதும் 100 பள்ளிகளுக்கும் மேலாக A3 குழுவே கொடையாளர்களைக் கண்டறிந்து ஆண்டு சந்தாக்களைக் கட்டி புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இது கடந்த கல்வியாண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் இப்பணி நடைபெற்றது. இந்தக் கல்வியாண்டும் தொடர்கிறது .
இவை மட்டுமன்றி பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை பெரு நிறுவனங்களிடமிருந்து , கொடையாகப் பெற்று தேவையுள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு குழு வழங்கி வருகிறது. இது வரை 30 கணினிகள் , 10 மடிக்கணினிகள் என சுமார் 15 லட்சம் மதிப்பில் இவை அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. சில கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட இரும்பாலான புத்தக அலமாரிகள் 15 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களது உயர்கல்விக்கு பொறுப்பேற்று வருடா வருடம் சில குழந்தைகளை கல்லூரிக்கு அனுப்பும் பணியையும் A3 குழு செய்து வருகிறது. ஆசிரியர்களுக்கான உளவியல் சார்ந்த மன அழுத்தங்களைப் போக்க சில வழிமுறைகளையும் மேற்கொண்டு வருகிறது.
தொடர்ந்து செய்தி அச்சு ஊடகங்களில் கட்டுரையாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களது பள்ளிகளை , செயல்பாட்டை ஆவணப் படுத்தும் பணியையும் குழு செய்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான மக்கள் வேலையிழந்து பொருளாதார சிக்கலில் துவண்டுள்ளனர். அவர்கள் குழந்தைகளுக்கான கல்வியைத் தருவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி படிக்க வைக்க இயலாத பொருளதார சூழல். இப்படியான சூழலில்,அரசுப் பள்ளிகள் மீதான பொது மக்களின் பார்வை மாற வேண்டும் எனவும் உண்மையாகவே சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிகள் இருக்கின்றன என்பதை மையப்படுத்தியும் அரசுப் பள்ளிகள் குறித்த விளம்பரங்களாக A3 New journey - அசத்தும் அரசுப் பள்ளிகள் என்ற குழுவின் முகநூல்
பக்கத்தில் ஜூன் மாத ஆரம்பம் முதல் நேரலையில் ஆசிரியர்களைப் பகிரவைக்கும் பணி நடைபெற்று வருகிறது .
காலை 10-11 மணியளவில் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி குறித்தும் , வகுப்பறை செயல்பாடு குறித்தும் பகிர்ந்து கொள்வார்கள். இதுவரை 20 மாவட்டங்களிலிருந்து 50 ஆசிரியர்களை நேரலையில் பேச வைத்துள்ளோம். 2000 உறுப்பினர்கள் கொண்ட தனிக்குழு இது. தினமும் 1800 பார்வையாளர்கள் இருப்பதாக குழுவின் வரைபடம் காட்டுகிறது. வெளிநாடு வாழ் மக்களும் பார்வையாளர்களாக உள்ளனர்.
பள்ளியின் கட்டமைப்பை மாற்றிய அனுபவங்கள் , மக்கள் விரும்பும் பள்ளிகளாக மாற்றிய அனுபவங்கள் , கற்பித்தல் முறைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவற்றைப் பகிரும் களமாக இந்த நேரலை அனுபவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
உதாரணமாக நேரலையின் சில தலைப்புகள்
மென் திறன் வழியே மலரும் கற்றல் திறன் பள்ளி ,அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் அரசுப் பள்ளி , குறள் நெறி வளர்க்கும் அரகப் பள்ளி , முன்னாள் மாணவர்களால் பொலிவு பெறும் அரசுப் பள்ளி , பட்டியலின மாணவர்களை உலகறியச் செய்யும் அரசு நலத்துறைப் பள்ளி ,தன்னிறைவு பெற்ற கிராமத்து பெண்கள் அரசுப் பள்ளி , படைப்பாற்றலை வளர்க்கும் அரசுப் பள்ளி , நூற்றாண்டு சிறப்புப் பள்ளி , பாரதி கண்ட புதுமைப் பள்ளி ,ஜனநாயக வகுப்பறைகளை உருவாக்கும் பள்ளி , மெட்டுகளால் மலரும் (மொட்டுகளை) முன்னேற்றும் அரசுப் பள்ளி , தனித்திறன்களை வளர்க்கும் பள்ளி , அனைத்து துறைகளி லும் அசத்தும் அரசுப் பள்ளி , சமூகப் பங்களிப்பு பெற்று வளரும் பள்ளி , சர்வதேச அளவில் சதுரங்கப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி ,கலை வழியே கற்பித்தல் பள்ளி , மாணவரைச் செதுக்கும் மரபுப் பள்ளி , மாவட்ட ஆட்சியர் தேடி வந்து பாராட்டிய அரசுப் பள்ளி ,கலை வழி மொழிக் கற்பித்தல் பள்ளி , குழந்தைகளைக் கொண்டாடும் அரசுப் பள்ளி ,தனித்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த அரசுப் பள்ளி , பசுஞ் சோலை உருவாக்கிய அரசுப் பள்ளி , மனமகிழ் கல்வி தரும் அரசுப் பள்ளி, நூற்றாண்டு விழா காண இருக்கும் தமிழகத்தின் மாதிரி அரசுப் பள்ளி , சிலம்பம் , பிரமீடு , விளையாட்டு என அசத்தும் அரசுப் பள்ளி போன்றன .இத் தலைப்புகளில் ஒவ்வொரு பள்ளி குறித்தும் அந்தந்த ஆசிரியர்கள் பகிர்ந்து கொள்ளும் போது பரவலாக மற்ற ஆசிரியர்களும் , ஊர் மக்கள் , நண்பர்கள் , முன்னாள் மாணவர்கள் , ஊடகவியல் துறை சார்ந்தவர்கள் என அனைவரும் கவனித்து அதிசயிக்கின்றனர் .ஒவ்வொரு பள்ளி ஆசிரியர் பகிர்வு முடிந்ததும் அரகப் பள்ளிகளில் இவ்வளவு மாற்றங்கள் செய்கின்றனரா என வியந்து பாராட்டுவதும் அதனால் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் பாராட்டுகளால் உற்சாகமாகி இந்தக் கொரோனா காலத்திலும் கூடுதலாக பள்ளி மாணவர்களுக்காக சிந்தித்து புதிய வடிவங்களில் கற்றலை நிகழ்த்துவதும் தொடர்கிறது .
பொது மக்கள் உதவிகளும் கிடைத்து வருகிறது என்று சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் பகிர்கின்றனர் .
உதாரணமாக ,
விருதுநகர் மாவட்ட ஆசிரியர் ஜெயமேரி அவர்கள் நேரலை முடிந்த மறு நாளே முகநூலில் பதிவிடுகிறார். அதாவது ஒரு லைவ் என்ன செய்யும் …. அவரது நேரலைப் பகிர்வைக் கண்டு மாணவர்களின் வீடுகளில் தீப்பெட்டி தொழில் புரியும் பெற்றோர்களின் பொருளாதார சூழல் வறுமையை போக்க , தன்னார்வலர்கள் உதவி தந்துள்ளனர். அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு அன்றாடத் தேவைகளுக்கான உணவுப் பொருள் , பண உதவி அளித்திட முன் வந்து அந்த நிகழ்வும் தொலைக்காட்சியில் வந்துள்ளதைப் பகிர்கிறார். அதோடு பள்ளிக் குழந்தைகள் பயன்பாட்டுக்காக FM Mega phone அனுப்பியுள்ளதையும் பகிர்கிறார்.
மற்றொரு திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் காந்தி ராஜன் அவர்களது நேரலையை அமெரிக்க வாழ் தமிழர் பார்த்து விட்டு , அந்த ஆசிரியரது 5 மாணவர்களை தத்து எடுத்துக் கொள்ளவும் கல்விச் செலவை உயர் கல்வி வரை ஏற்பதாகத் தெரிவித்ததோடு வங்கிக் கணக்கில் ஒரு மாணவனது தற்சமய கல்விக்கு ரூபாய் பத்தாயிரத்தை அனுப்பி உள்ளார் என்பதையும் பதிவு செய்கிறார் .
இந்த நேரலை நிகழ்வால் இவை போன்ற உதவிகள் எதிர்பாராமல் கிடைத்து வருகின்றன அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு . ஆனால் நமது நோக்கம் அரசுப் பள்ளிகளை மக்கள் நாட வேண்டும் .அங்கு பணிபுரியும் ஆசிரியர்களது திறன்களை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக பொது மக்களின் பொதுப் புத்தியில் பதிந்து விட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பற்றிய எதிர்மறை எண்ணங்களுக்கு மாற்றாக யதார்த்தத்தில் கள நிலவரம் என்ன என்பதை ஆவணமாக்கும் ஒரு பணி தான் இது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள் குறித்த நேர்மறை பார்வையை இந்த சமூகத்திடம் கடத்துவதே நமது குறைந்து பட்ச எதிர்பார்ப்பு .
உமா
ஒருங்கிணைப்பாளர்
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு
(A3-ஏ த்ரீ )
No comments:
Post a Comment