Thursday, 18 March 2021

நூற்றாண்டு கடந்த பெருமை மிகுபெண்களுக்கான அரசுப் பள்ளி

நூற்றாண்டு கடந்த பெருமை மிகுபெண்களுக்கான அரசுப் பள்ளி


கோவை மாநகரத்தின் பிரதான சாலையில் ராஜவீதியில் அமைந்துள்ள பள்ளி தான் கோ.து. வ .ச. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி . இப்பள்ளி 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 2020 இந்த வருடம் 125 ஆண்டுகளைக் கடந்து கோவையின் முதன்மைப் பள்ளியாக  பெருமையுடன் வீற்றிருக்கிறது. 


ஆரம்ப காலத்தில் கோவை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என்று பெயர் கொண்டு விளங்கியது.   தற்போது  ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தனிப் பெயரிலும் மேல்நிலைப் பள்ளி தனிப் பெயரிலும் அமைந்து இயங்கி வருகிறது.  சாலையின் இருபுறமும் அமைந்த இரு கட்டிடங்கள். மிகவும் கம்பீரமாக,  புராதன அருங்காட்சியகம் போல அமைந்திருக்கும் சிகப்புக் கட்டிடம் தான் பள்ளிக்குப் பேரழகு என்கின்றனர் அங்கு படிக்கும் மாணவிகள் . கலெக்டர் பில்டிங் என அழைக்கப்படும்  இது ஆங்கிலேயர் உருவாக்கிய கால கட்டத்தில் நீதிமன்றமாகவும் , பின்பு கலெக்டர் அலுவலகமாகவும் இருந்துள்ளது. 


சாலையின் மற்றொரு புறம் உள்ள பழைய கட்டிடத்தில் தூக்கு மேடைக்கான இடம் , சிறைச்சாலை அறைகள் ஆகியன இருந்துள்ளன. நூறாண்டுகளாக இந்த அமைப்புகளுடனேயே பள்ளி செயல்பட்டு வந்துள்ளது . கடந்த 2014 ஆம் ஆண்டில் தான் இவை அழிக்கப்பட்டு புதிய முகம்  பள்ளிக்கு  கிடைத்துள்ளது. 


கட்டமைப்பிலும் சரி , ஆசிரியர்கள் எண்ணிக்கை , மாணவிகளின் எண்ணிக்கை, அவர்களது திறமைகள் வெளிப்பாடு   என எல்லாத் தளங்களிலும் மற்ற பள்ளிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்து அனைவரையும் வியக்க வைக்கின்றது. கோவை துணி வணிகர் சங்க உறுப்பினர்கள் சில வருடங்களுக்கு முன்பு 30 லட்சம் மதிப்பில் இப்பள்ளிக்கு கட்டிடம் கட்டித் தந்து உதவியுள்ளனர். அவர்கள் பெயராலேயே சுருக்கமாக கோ.து.வ.ச . அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியாயிற்று. 


முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைப்  பெண் குழந்தைகள் படிக்கும் , கோவை மாவட்டத்தின் ஒரே அரசுப் பள்ளி இது தான் . பொதுவாக , தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை எனப் பள்ளிகளில் பிரிவுகள் இருக்கும் .ஆனால் அனைத்தும் இணைந்த ஒரே பள்ளியாக இயங்குவது தான் இதன் சிறப்பு . 5 வயதில் பள்ளிக்குள் வரும் பெண் குழந்தை தனது 17 ஆம் வயது வரை அதாவது  பனிரெண்டாம் வகுப்பு வரை இதே பள்ளியில் படிக்கலாம் எனில் மகிழ்ச்சி தானே. குழந்தைகள் விருப்பப் பட்டால் ஆசிரியர் பயிற்சியையும் முடித்த பிறகு வெளியே வரலாம். பள்ளியைச் சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவு வரைவசிப்பிடமுள்ள மாணவர்கள் இங்கு வருகின்றனர்.  


முதல் 5 வகுப்புகளிலேயே 15 பிரிவுகளும் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் படிக்கும் பிரம்மாண்டம். 6 முதல் 10 வகுப்பு மாணவிகள் 1300,மேல்நிலை வகுப்பு மாணவிகள் - 900 , என  அனைவரும் ஒரே வளாகம் . இரு கட்டிடங்களிலும் மூன்று இடங்களில் வழிபாட்டுக் கூட்டம் என , தினமும் திருவிழாவாகவே அமைகின்றதாம் காலை பிரார்த்தனைக் கூட்டம். 


 நூற்றுக் கணக்கான வருடங்களாக கோவை மாவட்டத்தின் ஆயிரமாயிரம் பெண் குழந்தைகளுக்கு ஒரு விடிவெள்ளியாக அமைந்துள்ளது. தற்போது சுமார்  2800 குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை எப்போதும் 3000 த்திற்குக் குறையாது என்கிறார் அதன் தலைமை ஆசிரியர் .காரணம் பள்ளியின் பாதுகாப்பான சூழல் , சிறந்த கற்பித்தல் முறைகள் , கல்வி இணைச் செயல்பாடுகள் , தொழில்நுட்ப வளர்ச்சிகளை அனைத்து ஆசிரியர்களும் கற்பித்தலில் பயன்படுத்துதல் என்று சொல்லிக் கொண்டே போகலாம் .ஆசிரியர்களோ 93 பேர் . அது தவிர மாற்றுப் பணி ஆசிரியர்கள் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக த்தால் நியமிக்கப்பட்டவர்கள் என மிகப் பெரிய ஆசிரியர்கள் வளம் இங்குண்டு என்கிறார். 


ஆம் , 41 வகுப்பறைக் கட்டிடங்களை புதியதாக சமீப காலத்தில் கட்டியுள்ளனர். அவற்றில் 27 அறைகள் வகுப்பறைகளாகவும் மற்றவை தனித்தனியான பயன்பாட்டு வகுப்பறைகளாகவும் மாற்றப்பட்டுள்ளன .இசைக்காக ஒரு அறை , ஸ்மார்ட் வகுப்பறைகள் , விர்ட்சுவல்  வகுப்பறை , அறிவியல் கணினி அறைகள் , மிகப் பெரிய அனைத்து வசதியும் கொண்ட விழா அரங்கம், என பரிபூரண வசதியுடன் வகுப்பறைகள் பயன்பாட்டில் உள்ளன .12 சிசிடி கேமராக்களுடன் குழந்தைகளது பாதுகாப்பையும் பள்ளி உறுதி செய்கிறது .


9ஆம் வகுப்பிலேயே மாணவிகள் விருப்பப் பட்டால் தேர்வு செய்யும் தொழிற்கல்விப் பிரிவு பாட அமைப்புகள் உள்ள பள்ளி இது. நெசவு , தையல் பல்திறன் வளர்ப்பு , லேத், வெல்டிங் , எலக்ட்ரிகல் - எலக்ட்ரானிக்ஸ் , சமையல் , தோட்ட வேலை என இவை பல தரப்பட்டவை. டிஜிட்டல் தையல் எந்திரங்கள் உட்பட அனைத்து உபகரணங்களும்  கற்றலுக்கு ஏதுவாக இங்கு உண்டு. இவை சுமார் ஐந்தரை லட்ச ரூபாய் மதிப்பில்  வாங்கப்பட்ட பொருட்கள் என்கின்றனர் ஆசிரியர்கள் . மத்திய அரசின் சிறப்பு தொழிற்கல்வி சான்றிதழ் பெறும் படிப்புகள் இங்கு நடைமுறையில் உள்ளன. 


அதே போல மேல்நிலை வகுப்புகளின் பாடப் பிரிவுகள் வேறெந்த பள்ளியிலும் இல்லாத சிறப்புடன் இங்குண்டு .ஆம் , தட்டச்சு (Typing) , அலுவலக மேலாண்மை (office Managemeut) , தையல் , நெசவு இப்படி ஏராளமான 10க்கும் மேற்பட்டப் பிரிவுகள் உண்டு. 


கற்றல் கற்பித்தலுக்கான அனைத்து வசதிகளும் நிறைவாகப் பெற்றுள்ள பள்ளி. அரசு அளித்த ஹை டெக் லேப் இப்போது உள்ளது என்றாலும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே 30 கணினிகள் இணைய வசதியுடன் இயங்குகின்றன. மொழிப் பாடங்களுக்கான கணினி ஆய்வகங்கள் , கணக்குப் பாட கணினி ஆய்வகம்,  பட வீழ்த்திகள்  (Projector) வசதி  இப்படி தொடர்ந்து இயங்கும் அருமையான கற்றல் களங்களை உள்ளடக்கியுள்ளது. மாணவிகளே உருவாக்கும் கூகுள் கோடிங் (software) அனிமேஷன் இவற்றின் பயன்பாட்டை நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. ஆம் கணினி அறிவில் தேடலுடன் கூகுள் கோடிங் - தயாரிப்பில் இணைந்து சென்ற வருடம் 400 மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மூன்று வருடங்களாக பல நூறு எண்ணிக்கையில் கலந்து கொள்கின்றனராம் .


ஏறக்குறைய 17000 எண்ணிக்கையிலான புத்தகங்களைக் கொண்ட நூலகம் அமைந்து மாணவிகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இதன் நீட்சியாகக் கவிதை , கதை ,கட்டுரை எனவும் இலக்கியப் போட்டிகளிலும் பரிசு பெறும் மாணவிகள் ஏராளமாம். 


சாரணர் படையில் இராஜ்ய புரஸ்கார் விருது பெறும் மாணவிகள் வருடா வருடம் உண்டு. இதர அனைத்து கல்வி இணைச் செயல்பாடுகளான JRC , பசுமைப் படை , சாலைப் பாதுகாப்புப் படை, நாட்டியம் , பாடல்  என அனைத்து வகையிலும் பிரித்து மேய்கின்றனர் மாணவிகள்.

 

அதோடு விளையாட்டுத் துறையில் இப் பள்ளிக்கு தனிச் சிறப்புண்டு. முழுமையான வடிவமைப்புடன் கூடிய கூடைப் பந்து மைதானம் உண்டு. மாணவிகள் மாநில அளவில்  , தேசிய அளவில் எப்போதும் விளையாட்டு வீராங்கனைகளாகத் திகழ்கின்றனர். இவர்களை உருவாக்க 2 விளையாட்டு ஆசிரியர்களுடன் இப்பள்ளியில் விளையாட்டு இயக்குநரும் உண்டு . மாற்றுத் திறனாளி மாணவியை தேசிய வீராங்கனையாகக் கபடியில் அடையாளப் படுத்தியுள்ளனர் விளையாட்டு ஆசிரியர்கள் . சமீப நாட்களில் கூடைப் பந்து விளையாட்டில் 2 முறை தேசிய அளவில் ஹரியானா சென்று வந்துள்ள மாணவிகள் பற்றியும் கூறுகின்றனர்.


பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் இங்கு வழமையாகக் கற்றுத் தரப்படுகின்றன. சிலம்பம் , டேக்வாண்டோ , கராத்தே என மாணவிகளின் திறன் வெளிப்பாடும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அளவிட முடியாதவையாம் .இதோடு கலை நிகழ்ச்சிகள் என்றால் , குடியரசு , சுதந்திர தின நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக  நிகழ்வில் , இப்பள்ளியிலிருந்து 6 பேருந்துகளில் அரசு அழைத்துச் செல்லுமாம் . மற்ற பள்ளிகளில் 10 , 20 மாணவிகள் என்றால் இங்கு 300 , 400 மாணவிகள் கலந்து கொள்வார்களாம். இசைக்கான வகுப்புகள் அதற்குரிய பிரத்யேக அறையில் தன்னார்வ அமைப்பின் உதவியால் தொடர்ந்து நடப்பதுடன் இசைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 


கல்வி சார் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கும் மாணவிகள் , ஊக்கம்படுத்தும் ஆசிரியர்கள் என மாணவிகளின் திறன் களுக்கு மற்றொரு வாயில் இப்பள்ளி . மாநில அளவிலான வினாடி வினாப் போட்டி மண்டல அளவிலான தொடர் வெற்றி . ஸ்கோப் , இம்பார்ட் என்ற பெயருடைய பிராஜக்ட்ஸ் , இவற்றிற்கான களப்பயணங்களுக்கு  மாணவிகள் செல்வது என்று தங்கள் அறிவை விரிவாக்கிக் கொள்கின்றனர். அதோடு 9 ஆம் வகுப்பிலேயே ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிப்பது என தங்களை ஆராய்ச்சி மாணவர்களாக பள்ளிக் காலத்திேலயே உணருகின்றனர். 


பள்ளிக்கான யூ டியூப் சேனலை உருவாக்கி ஆசிரியர்கள் , மாணவர்கள் இருவரது வளங்களும் அதில் பதிவேற்றம் செய்யப் பட்டது குறித்து இதன் பொறுப்பாசிரியர் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ராஜேஷ் குமார் பகிர்ந்து கொள்வதோ மேலும் வியப்பைத் தருகிறது. 


ஆம் , இப்போது கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து வேலை செய்வது , ஆன்லைன் கல்வி எனப் பேசி வருகின்றனர் .ஆனால் எங்கள் பள்ளியில் பல வருடங்களாக இது நடந்து வருகிறது. எங்கள் பள்ளி யூ டியூப் சேனலில் பள்ளி குறித்த விழாக்கள் , மற்ற செய்திகள் காணொலிகள் உண்டு. அதோடு ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பாடங்களை சிறு சிறு காணொலிப் பாடங்களாக மாற்றி மாணவிகளுக்காகப் பதிவிட்டுள்ளனர் - கமென்ட் பகுதியில் மாணவிகள் கேட்கும் தலைப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்திப் பதிவிடுவர். தேர்வு காலங்களில் மாணவிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கவே இதை சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தோம். தற்போது 300க்கும் மேற்பட்ட வீடியோக்கள் உள்ளன. இவை பெற்றோரிடமும்  வரவேற்பு பெற்றுள்ளன. 


கல்வித் துறையில் பல பணிகளை பள்ளி விபரங்கள் உட்பட இணைய தளத்தில் பதிவேற்றத் தேவை ஏற்படும் . அவற்றை பள்ளியில் செய்தால் கற்பித்தல் பாதிக்கப்படும் என்பதால் வீட்டில் செய்ய வழிகாட்டு காணொலிகளும் எங்கள் பள்ளிக்கான ஆசிரியர் குழுக்களில் பகிர்வோம் . அதைப் பின்பற்றி வீட்டிலேயே இணைய வழி கணினிப் பணியை முடித்து விடுவோம் என்கிறார். 


 பள்ளி பெற்றோர் ஊர் மக்களிடம் வரவேற்பு பெற்று சிறந்து விளங்குவதை பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களின் செயல்பாடுகள் , பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் வழியே மேலும் அறிந்து கொள்ள முடிகிறது. 


பெண்களுக்கான பிரத்யேகப் பள்ளியாக நூற்றி இருபத்தைந்து ஆண்டு காலமாக இயங்கி பல தலைமுறைகளை உருவாக்கிய இப்பள்ளி மக்களுக்கான அரசுப் பள்ளியே .போற்றப்பட வேண்டியது. 


உமா



No comments:

Post a Comment