அரசுப் பள்ளிக்கு வாருங்கள் - மேம்பாடு
என்ற தலைப்பில் கடந்த மாதம் கட்டுரை எழுதியிருந்தோம். எல்லாவித சகல வசதிகளும் பெற்றிருந்தாலும் மேம்படுத்த வேண்டிய தேவைகளும் ஏராளமாக இருக்கின்றன. அவை குறித்து ஆய்வு செய்ய வேண்டியது நமது தலையாய கடமையும் காலத்தின் தேவையும் ஆகும்.
சமீப ஆண்டுகளில் வேறெப்போதும் இல்லாமல் இந்த வருடம் பல லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அது மட்டுமன்றி அரசு ஊழியர்கள் , அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என இந்த ஆண்டு ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர் .இவர்களைத் தக்க வைப்பதற்காகவும் வரும் ஆண்டுகளில் அரசுப் பள்ளிகள் மீது மக்கள் மிகுந்த கவனம் கொண்டு கூடுதலாக சேரவும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள்
பெரும்பாலான பள்ளிகளின் கட்டமைப்பு வசதி மேம்படுத்த வேண்டியுள்ளது. அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து மக்கள் தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்வதற்கு மிக முக்கியமான முதற் காரணமாக இதையே கூறலாம். வெளிப்புறத் தோற்றம் , வண்ணமயமான சுற்றுச்சுவர் , வகுப்பறை வசதிகள் , கழிப்பறை வசதிகள் என இன்றைய தலைமுறையினர் மிக அவசியமாக எதிர்பார்க்கக் கூடிய விடயங்கள் இவை எனலாம். 30 வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளியில் திறந்த வெளிக் கழிப்பறைகளாகவே பெரும்பாலும் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறி கழிப்பறைக் கட்டிடங்கள் , உபயோகிக்கத் தண்ணீர் வசதி என ஓரளவு மாற்றம் பெற்றுள்ளது. ஆனால் அனைத்து பள்ளிகளிலும் 100% கட்டமைப்பை மேம்படுத்தி , புதுப்பொலிவுடன் மாற்றியமைத்தலும் சில வருடங்களுக்கு ஒரு முறை பள்ளிக்கு வண்ணமடித்து உயிர்ப்புடன் வைக்க வேண்டிய பொறுப்பை, கல்வித் துறை தொடர வேண்டும். அது மட்டுமல்ல , தொடக்கப் பள்ளிகள் , நடுநிலைப் பள்ளிகள் என வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளுக்கும் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டும். சுற்றுச்சுவர் இல்லாத அனைத்துப் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைத்திட வேண்டும். அதே போல அறிவியல் ஆய்வுக் கூடங்கள் 20 வருடங்களுக்கு முன்பு மேல் நிலை வகுப்புகளுக்கு மட்டும் இருந்து வந்தது. இன்றைய நாட்களில் தொடக்க நிலை வகுப்புகளுக்கே செயல்முறை விளக்கம் தேவைப்படுவதால் அரசுப் பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகள் உட்பட நடுநிலை , உயர்நிலைப் பள்ளிகள் வரை தேவையான அடிப்படை செயல்முறைகளுக்கான அறிவியல் ஆய்வகங்கள் உருவாக்கிட வேண்டும் . விழாக்கள் நடத்த பார்வையாளர் விழா அரங்கும் , மெய்நிகர் கற்றல் வகுப்பறைகள் , மொழிப் பாடங்களுக்கான ஆய்வகங்கள் என ஒவ்வொரு பள்ளியும் முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும் .
வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம்
ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் முறையாகப் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பணியாற்றுவது உண்மைதான். ஆனால் பலஆயிரக்கணக்கான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரிரியர் பள்ளிகளாகவே செயல்படுகின்றன. மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டங்கள் , காலத்திற்கேற்ப விரிவு படுத்தப்பட்ட பாடநூல்கள் என அனைத்தும் பள்ளிக்குள் வரும் போது , அவற்றை மாணவர்களிடம் சரியான வழியில் கொண்டு சேர்க்க தேவையான ஆசிரியர்கள் நியமனம் கட்டாயம் இருக்க வேண்டும் . கல்வி உரிமைச் சட்டத்தின் படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனம் என்பது இங்கு கற்பித்தல் பணிக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஏனெனில் ஒரு வகுப்பில் ஒரு குழந்தை இருந்தாலும் அவர்களுக்கு 5 பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் . அப்படிப் பார்த்தால் தொடக்க நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்புகளுக்கு 23 பாடப் புத்தகங்கள் உள்ளன. ஒரு ஆசிரியரால் ஒரு நாளைக்கு எத்தனை வகுப்பு மாணவர்களைக் கையாள முடியும் ? ஆகவே வகுப்புக்கு ஒரு ஆசிரியரும் , தலைமை ஆசிரியரும் ஒவ்வொரு பள்ளிக்கும் மிகவும் அவசியம்.
கூடுதலான துறை ஆசிரியர்கள்
அரசுப் பள்ளிகளில் விளையாட்டு , பாட்டு , விவசாயம் ,நெசவு , ஓவியம் என பல துறை தொழிற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவது பற்றிக் கூறியிருந்தோம். பெரும்பாலான மேல் நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்விப் பிரிவுகளில் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் போது அந்தப் பணியிடம் நிரப்பப்படுவதில்லை. ஒரு சில ஆண்டுகளில் அப்பணியிடமே நீக்கப்படுகிறது. இந்த நிலை மாற்றப்பட்டு மீண்டும் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் .அதோடு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் . ஏனெனில் விளையாட்டு என்பது குழந்தைப் பருவத்திலிருந்து தரப் பட வேண்டும். மேல் வகுப்பு செல்லும் போது தேர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் நமது கல்வி முறையில் விளையாட்டுத் திறன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் தொடக்க வகுப்புகளிலிருந்து விளையாட்டுத் திறன்களை வளர்க்க ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
கற்பித்தல் முறைகளும் மதிப்பீட்டு முறையும் ஆய்வுக்குட்படுத்துதல்
பல்வேறு பட்ட சிறப்பான கற்பித்தல் முறைகளும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையான CCE என்ற முறையும் 8ஆம் வகுப்பு வரை பின்பற்றப்பட்டாலும் இவற்றில் இருக்கும் இடைவெளியை நிரப்ப வேண்டும். வாசித்தலில் சிக்கல் , வயதுக்கேற்ற கற்றல் முழுமையடையாமை என தொடர்ந்து மாணவரிடையே நாம் குறிப்பிடும் பிரச்சனைகள் கற்பித்தல் முறைகளிலும் இருக்கலாம் , பாடத்திட்டம் மதிப்பீட்டு முறை அனைத்திலும் பிரச்சனைகள் இருக்கலாம் . இவற்றை ஆண்டுதோறும் மறு ஆய்வுக்கு உட்படுத்தி திரும்பத் திரும்ப சரி செய்யும் போது சிறிய குறைபாடுகளும் களையப்பட்டு அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் கூடுதலாக சிறப்படையும் .
விலையில்லாப் பொருட்களில் கூடுதல் கவனம்
அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி தான் வழங்கப்படுகிறது.
அதோடு விலையில்லாப் பொருட்களாக பாடநூல் , நோட்டு , சீருடை, செருப்பு என பத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் சீருடைகள் குறித்து அதிருப்தி எப்போதும் அனைத்து தரப்பிலும் பேசப்படுவதற்குக் காரணம் , குழந்தைகளின் உடல் அளவுகளுக்கு ஏற்ப பெரும்பாலும் உடைகள் தைக்கப்படாமல் இருக்கும். இவற்றை சரி செய்ய மாற்று ஏற்பாடுகளை அரசு யோசிக்கலாம். அதே போல மற்ற விலையில்லாப் பொருட்களையும் கவனம் செலுத்தலாம்.
சத்துணவு
சத்துணவு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இது பன்னிரெண்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட வேண்டும். அதோடு ஏற்கனவே நடைமுறையிலிருந்து பலவகைக் காய்கறிகளும் சேர்த்து சரிவிகித உணவு தரும் வழக்கத்தைக் கைக்கொள்ளவும் பரிசீலிக்கலாம் .ஏனெனில் ஒரே வகையான சாதம் தக்காளி , புதினா இப்படி வழங்கும் போது சரிவிகித உணவு மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே இதையும் பரிசீலிக்கலாம் .
நூலகங்கள்
நமது அரசுப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் நூலகப் பயன்பாட்டிற்கான புத்தகங்கள் அரசால் வழங்கப்படுகின்றன. பள்ளி அளவில் செயல்படாமல் பூட்டி வைக்கப்படும் நூலகங்களை மாணவர் பயன்பாட்டுக்குக் கொண்டு வர அவசரமான சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதே போல குழந்தைகள் ,ஆசிரியர்கள் படிக்க வேண்டிய நல்ல நூல்களைத் தேர்வு செய்வதில் கவனம் கொள்ளுதல் வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழுக்களின் கூடுதல் கவனம் (SMC)
கல்வி உரிமைச் சட்டப்படி இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ( school Management Commity ) குறித்து முழுமையாக மக்களுக்கு விழிப்புண்ர்வு தரப்பட வேண்டும். ஒரு அரசுப் பள்ளியின் வெற்றிக்கு இவற்றின் பங்களிப்பும் அவசியம் , அதன் உறுப்பினர்கள் நினைத்தால் எப்படிப்பட்ட மாறுதலையும் பள்ளிக்குள் கொண்டு வர இயலும் என்பதை பள்ளி ஆசிரியர்கள் , தலைமை ஆசிரியர்கள் உணர்ந்து பெற்றோரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஆசிரியரது பங்கு
ஒரு பள்ளியில் வேறெந்தக் குறைபாடு இருந்தாலும் ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர் பால் கவனமும் அக்கறையும் கொள்ளும் போது தானாகவே அப்பள்ளியை நோக்கி வருவார்கள். ஆசிரியர்கள் தங்கள் சொந்தக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது போல பள்ளிக் குழந்தைகளையும் கவனித்து அணுகுமுறையை உருவாக்குதல் மிக அவசியமாகிறது. மேற்சொன்ன எல்லா மேம்பாடுகளையும் பள்ளிக்குள் உருவாக்கி ஆசிரியர்கள் சரியில்லை என்றால் எல்லாமே வீண் தான். ஆசிரியர் - மாணவர் உறவு , ஆசிரியர் - ஆசிரியர் - உறவு , ஆசிரியர் - தலைமையாசிரியர் உறவு , ஆசிரியர் - பெற்றோர் உறவு , ஆசிரியர் _சமூக உறவு என அனைத்து தரப்பிலும் ஆசிரியர்கள் நேர்மறையான மாற்றங்கள் உருவாக்குபவராக இருத்தல் அரசுப் பள்ளிகளுக்கு மிக இன்றியமையாதது. இப்படியான சிந்தனையுள்ள ஆசிரியர்கள் இல்லாமல் இல்லை , ஆனால் மிகக் குறைவான சதவீதமே இருக்கின்றனர். இந்த நிலை மாறி ஒரு பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் மாணவர் மீது அன்பு காட்டி , பாடப்பொருளில் தங்களை வலுப்படுத்தி , 100% கற்றலை உறுதிப்படுத்துமாறு பணியாற்ற வேண்டும். ஆசிரியப் பணி அறப்பணி , அதற்கு உன்னை அர்ப்பணி என்பதன் பொருளுணர்ந்து தங்கள் பொறுப்புகளையும் உணர வேண்டும். கிராமப்புற ஏழ்மையான குடும்பங்கள் , முதல் தலைமுறைக் குழந்தைகள் என கதியற்றவர்களின் புகலிடமாகவே நமது அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன , அவர்களுக்கு நம்மை விட்டால் கதியில்லை என்பதை அனைத்து ஆசிரியர்களும் புரிந்து மாணவர்களை அரவணைத்து மாணவர் மையக் கல்வியை வழங்குவதும் உளவியல் சார்ந்து ஜனநாயக வகுப்பறைகளைக் கட்டமைப்பதும் மிகவும் இன்றியமையாதது .
பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள்
வழக்கமாக, பல பள்ளிகளில் இக்கூட்டங்கள் கண்துடைப்புக்காகவே நிகழ்கிறது. ஆனால் பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்களது பெற்றோர்களும் பள்ளி வளர்ச்சிக்கு இன்றியமையாதவர்கள். ஆகவே பள்ளியின் மொத்தப் பெற்றோருக்கும் கூட்டம் நடத்துவதைத் தவிர்த்து , ஒவ்வொரு வகுப்பு பெற்றோரையும் குறிப்பிட்ட நாட்கள் சுழற்சி முறையில் அழைத்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்திட வேண்டும். பெரும்பாலான பிரச்சனைகள் தீரவும் அவர்களிடமிருந்தே பள்ளிக்கு உதவி கிடைக்கும் , மாற்றங்கள் நிகழும்.
கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் வலிமையைக் கூட்டுதல்
கல்வியின் , சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பில் பணியாற்றும் அனைவரும் நேர்மையுடன் 100% சரியான பாதையில் பள்ளிகளை வழி நடத்தி குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கல்விக் கட்டணங்கள் வசூலிக்கும் தலைமைகள் , கற்பித்தலில் சுணக்கமும் ஏமாற்றும் பண்பும் கொண்ட ஆசிரியர்கள் இவர்களை முறைப்படுத்த கடுமையான வழி முறைகளைக் கையாளலாம். , ஆய்வுக்காக மட்டுமே கோப்புகளைத் தயாரிக்கும் நடைமுறைகளை அறவே விட்டொழிக்கலாம். கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்துவதைத் தவிர்க்கலாம். அரசின் செயல் திட்டங்களை கீழ் நிலை வரை முறையாகக் கொண்டு சென்று வெற்றி பெறுதலைத் தக்க வைக்கலாம். மாணவர் சேர்க்கை எண்ணிக்கை உயரும் பள்ளிகளை முன்மாதிரிப் பள்ளிகளாக அறிவித்து மற்றவருடன் அதன் காரணங்களைப் பகிர வைக்கலாம் . இப்படி கல்வி நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலமும் அரசுப் பள்ளிகள் மேம்பாடு அடைய நிறைய வழிகள் உள்ளன..
ஆசிரியர் சங்கங்களின் பார்வை மாற வேண்டும் .
தமிழகப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கான சங்கங்களைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் நடத்தும் போராட்டங்களில் பெரும்பாலும் மாணவர் நலன் சார்ந்து இருப்பதில்லை என்பதே அவர்கள் மீதான பொதுவான குற்றச்சாட்டாக சமூகம் வைக்கிறது. அவற்றில் உண்மை உண்டு .ஆகவே ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து மாணவர் நலனுக்காகவும் செயல்பட வேண்டும். அதோடு சங்க உறுப்பினர்களாக இருப்பவர்களில் ஒரு சிலர் பள்ளிகளில் சக ஆசிரியர்களை நடத்தும் விதம் , தங்கள் சங்கத்து செல்வாக்கை எல்லை மீறி உபயோகித்தல் என பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கின்றன. இவை முற்றிலும் மாறி ஆசிரியர் சங்கங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆகவே அரசுப் பள்ளிகள் சிறப்பானவை என்றாலும் மேம்படுத்துவதற்கான சில கூறுகளை இந்தக் கட்டுரை வழியாக முன்வைக்கிறோம். மேற்கண்ட சில ஆலோசனைகள் அரசுப் பள்ளிகளின் வலிமையை மக்களுக்கு எடுத்துரைக்கும் என்பதில் ஐயமில்லை
No comments:
Post a Comment