இன்றைய சூழலில் கல்வி - 12
தமிழகக் கல்வி வரலாற்றின் சமீபத்திய
பெரும் சாதனையாக நாம் பார்ப்பது மருத்துவக் கல்வி பயில அரசுப் பள்ளி மாணவர்கள் 407 பேர் முதல் முறையாக இந்த வருடம் தேர்வாகி மருத்துவப் படிப்பில் எம்.பி .பி எஸ் மற்றும் பி.டி.எஸ் பிரிவுகளில் மருத்துவக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இதற்குக் காரணமாக இருந்த நமது தமிழக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தமிழ்நாட்டில் 7,968 மேல்நிலைப் பள்ளிகளில், 3,054 பள்ளிகள், தமிழ்நாடு அரசின் சார்பில், நடத்தப்பட்டு வருகின்றன. இது 38.32 சதவீதமாகும். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பயிலும் 8 லட்சத்து 41 ஆயிரத்து 251 மாணவர்களில், 3 லட்சத்து 44 ஆயிரத்து 485 மாணவர்கள் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயில்கின்றனர். இது 41 சதவீதமாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,550 மொத்த மருத்துவ இடங்களில், மாநில அரசின் ஒதுக்கீடாக 4,043 இடங்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களில் 0.15 சதவீதம் மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் கிடைத்து வந்தன.
இதை மாற்றும் விதமாக ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிக்கூடங்களில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ் ஆகிய படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழக அரசு பின்பற்றிவரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்குள், ஒவ்வொரு பிரிவுக்குள்ளும் இது செயல்படுத்தப்படும் என்ற அரசாணை குறித்த செய்தி கடந்த மாதத்தில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறிய,
வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக நிகழ்ந்திருப்பது மேற்கண்ட அரசாணையின் எதிர்வினை.
எத்தனையோ அரசியல் கட்சிகள் இதை வேறு வேறு கோணங்களில் விமர்சித்தாலும் , .குரலற்றவர்களின் கடைசிப் புகலிடமாக மாறிவிட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கனவு வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தது நடப்பு அரசு தான் என்ற வலுவான உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதிலும் தனியார் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வான மாணவர்களின் படிப்பு செலவை முழுவதும் அரசே ஏற்றுக் கொள்கிறது என்ற அறிவிப்பு அத்தனைக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய பரிசு எனலாம் . ஆம் , 7.5 % இட ஒதுக்கீட்டில் தம் குழந்தைகள் தேர்வானாலும் தனியார் கல்லூரி என்பதால் வருடத்திற்கு பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டும் என்பது அவர்களது பொருளாதார நிலையில் இயலாத ஒன்று. அதனால் இந்த அறிவிப்பு வெளியாகாத முதல் நாள் கவுன்சிலிங் போது சில குழந்தைகள் தங்களுக்கு கிடைத்த மருத்துவப் படிப்பிற்கான இடத்தை வேண்டாம் என விட்டுக் கொடுத்த வேதனை நிகழ்வுகளும் உண்டு.
அடுத்த நாள் . எதிர்க்கட்சித் தலைவரான திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களது , தனியார் கல்லூரியில் தேர்வாகும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, தி.மு.க. கழகம் ஏற்கும் என்ற அறிவிப்பு மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஆனால் அதைத் தொடர்ந்து தமிழக அரசே அம்மாணவர்களது கல்விக் கட்டணத்தை ஏற்கிறது என்ற செய்தி கூடுதல் பாராட்டுதலுக்குரியது. இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவரது வாக்குறுதியாக , மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு செலவழிக்க இருந்த பல கோடி ரூபாய் கல்விக் கட்டணத்தை, கல்வி கற்கும் வேறு துறை மாணவர்களுக்கு பயன்படுத்துதலே ஆகச் சிறந்த நல்ல செயலாக இருக்கும். ஆம் எத்தனையே ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிக் குழந்தைகளின் உயர்கல்விக்கு அப்பணத்தைப் பயன்படுத்தலாம் . விவசாயம் , பொறியியல் , அறிவியல் இளங்கலை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களது படிப்பு செலவை ஏற்கலாம் . மருத்துவப் படிப்பைக் காட்டிலும் குறைவான செலவே மற்ற உயர் கல்விக்கு செலவாகும். ஆகவே இதை நடைமுறைப்படுத்த திராவிட முன்னேற்றக்கழகம் முன் வரவேண்டும் என்பதை, சுவடு இதழின் வழியாக தமிழக அரசுப் பள்ளிகளின் சார்பாக
திரு ஸ்டாலின் அவர்களது
கவனத்திற்கு கோரிக்கையாக வைக்கிறோம்
நீட் தேர்வு வந்த பிறகு ஒவ்வொரு வருடமும் பத்துக்கும் குறைவான அரசுப் பள்ளி மாணவர்களே மருத்துவம் படிக்கத் தேர்வாகி வந்தனர். கடந்த வருடம் தமிழகம் முழுக்க இவர்களின் எண்ணிக்கை வெறும் 4 மட்டுமே. அப்படியிருக்க இந்த 7.5 % ஒதுக்கிட்டின் விளைவாக அதைப் போல் நூறு மடங்கு மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வழிவகுத்திருப்பதால் நாம் இதை சமூக மாற்றத்தின் மிகப் பெரிய அடையாளமாகப் பார்க்கலாம் ..
ஆனால் இந்த அரசாணை அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்குப் பொருந்தாது என்பது சற்றே ஏமாற்றமடைய வைக்கிறது ஒரு சாராரை .
சில ஆசிரியர்களிடம் பேசிய போது |
அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்க வேண்டும் ஏனெனில் தற்போது இப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் வசதி குறைவானவர்கள் வீட்டு பிள்ளைகள் தான் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் தான்
BC MBC SC ST மாணவர்கள் தான் அதிகம்
எனவே இந்த வாய்ப்பு கண்டிப்பாக வழங்குவதே பொருத்தமானது
மேலும் 7 .5 என்பதை 10 சதவீதமாக உயர்த்தவும் வேண்டும் என்கிறார் மன்னார்குடியைச் சேர்ந்த ராஜப்பா என்ற ஆசிரியர் .
ஏழைகளின் கடைசி நம்பிக்கை அரசு பள்ளிகள்.அரசு பள்ளிகளின் இட ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ப்பதால் அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். வேண்டுமானால் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தனி இட ஒதுக்கீடு தரலாம் என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆசிரியர் இளையராஜா .
அரசு உதவிபெறும் பள்ளி என்பது தனியார் நிர்வாகம்தானே . அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே 7.5% இட ஒதுக்கீடு என்பதே சரியானதாக இருக்கும் என்பது ஆசிரியர் ஹரிஹரனின் குரல்.
அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சமமாகவே கருத வேண்டும். கன்னியாகுமரி ,தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் 90 சதவீதம் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் என்கிறார் ஆசிரியர் செந்தில் .
அரசு உதவிபெறும் பள்ளிகளில்
பயின்ற மாணவர்களில்
எத்தனை பேர்
கடந்த நான்கு ஆண்டுகளில்
மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்
என்ற புள்ளி விவரத்தை
பார்த்தாலே தெரிந்துவிடும்,
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும்
அரசுப்பள்ளி மாணவர்களுக்கும்
வேறுபாடு இல்லை என்பது
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வேண்டும்
7.5% இட ஒதுக்கீட்டின் பயன்.
தனியார் நிர்வாகம் என்பது வெறும் நிர்வாகம் சார்ந்தே இருக்கும்.
உதவிபெறும் பள்ளியின் மாணவர் கல்வி சார்ந்த அனைத்து முடிவுகளும் அரசை சார்ந்ததே எனவே இடஒதுக்கீட்டில் உதவிபெறும் பள்ளி மாணவர்களையும் சேர்ப்பதுதான் அறம்
RTE சட்டத்தின் படி 25% இட ஒதுக்கீட்டில்
தனியார் சுயநிதிப் பள்ளிகளில்
8ம் வகுப்பு வரை படித்து 9-12 வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.ஆனால்
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது என்பது எவ்விதத்தில் நியாயம் என்கிறார் பழனியைச் சேர்ந்த ஆசிரியர் முருகானந்தம் .
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் இடம்பெற்றால் இன்று அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்துள்ள MBBS சீட்டில் ஒன்றுகூட அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்திருக்காது என்கிறார் கார்த்திகேயன் என்ற ஆசிரியர் .
அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது. ஆயினும் அரசு பள்ளிகள் அருகில் இல்லாமல் தான் படிக்கும் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி என்பதே தெரியாமல் நடுநிலைப்பள்ளிகளில் படித்து தற்போது உயர்நிலை மேல்நிலை பள்ளிகளை அரசு பள்ளியில் படித்து 7.5 சதவிகித பலனை அனுபவிக்க முடியாத மாணவர்களின் பரிதாபம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்கிறார் ஆசிரியர் பிரபாகரன் .
தமிழ்நாடு மாநில மருத்துவ மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று கூறி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை அந்த இட ஒதுக்கீட்டில் சேர்க்காதது, தமிழ் நாட்டில் பயிலும் 30 %
மாணவர்களின் மருத்துவர் ஆகும் கனவை தகர்ப்பது போல் உள்ளது.
அரசு பள்ளிகளை போல்தான் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை மாணவர்கள்தான் பயில்கின்றனர்.
ஒரு அரசு செய்ய வேண்டிய வசதிகளை நிலம், கட்டிடங்கள், கழிவறைகள், குடிநீர் நிதி உதவிபெறும் பள்ளிகள் செய்து வரும் போது இங்கு பயிலும் மாணவர்களுக்கு மருத்துவர் ஆகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது எந்த விதத்திலும் சரியில்லை.
ஒரு சில பகுதிகளில் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளது. அங்கு பயிலும் மாணவர்களின் மருத்துவர் கனவு சிதைக்கப்படுகிறது.
அரசு விதிகள் கடைப்பிடிக்கிறோம்.
சென்சஸ் எடுக்கிறோம்.
ABL,SABL, என்று BRT, BEO சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்கிறோம். இருந்தும் எங்களை ஒதுக்குவது ஏன்?
எங்களுக்கும் அரசு பள்ளிகளும் என்ன வேறுபாடு? அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடம் சரியாக சொல்லி கொடுக்கவில்லையா? நல்ல மாணவர்களை உருவாக்கவில்லையா? ஏன் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடமில்லை? இதற்கு அரசு என்ன பதில் கூற போகிறது?
சமத்துவ கல்வி,
சமச்சீர் கல்வி என்று கூறி விட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளை மாற்றாந்தாய் பிள்ளை போல் நடத்துவது ஏன்?
வசதி உள்ளவர்களுக்கு ICSE,CBSE, METRIC என்று உள்ள நிலையில்
எங்களைப் போன்ற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கூடுதலாக எந்த வசதி செய்யாவிட்டாலும் பரவயில்லை.அரசு பள்ளிகளுக்கு வழங்கும் மருத்துவ இட ஒதுக்கீடு 7.5 இல் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்கிறார் ஈரோடு மாவட்ட
ஈ.கே.எம்.அப்துல்கனி மதரஸா இஸ்லாமிய ஆரம்பப்பள்ளியின்
தலைமையாசிரியரான மூசா ராஜா ஜுனைதி என்பவர் .
,
இத்தனை வேறுபட்ட கருத்துகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்து இருந்தாலும் சமூக நீதி என்று பார்த்தால் நூற்றுக் கணக்கான ஊர்களில் அரசுப் பள்ளிகள் இல்லாததால் வறிய மக்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தரவில்லை என்றாலும் இவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க அரசு ஆவண செய்யலாம் . அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளை அரசுப் பள்ளிகளாக அங்கீகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் .ஏனெனில் இன்றைய சூழலில் கல்விக்குள் நிறைய சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து விவாதிக்கப்பட வேண்டிய ஒரு கருத்து .
தொடர்ந்து உரையாடுவோம்
No comments:
Post a Comment