Thursday, 18 March 2021

பொதுத் தேர்வு ரத்து ...

பொதுத் தேர்வு ரத்து ... அடுத்து செய்ய வேண்டியது என்ன ?


தமிழகம் வேறெப்போதும் இல்லாத பேரிடர் காலத்தின் ஆபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. 

தொற்று பரவி வரும் இச்சமயத்தில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் குழந்தைகளின் உயிரைக்  கருத்தில் கொண்டு , பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது அரசு. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள  அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில்  கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் . தேர்வுக்கான மாற்று ஒன்றை நாம் கண்டறியத் தேவை எழுந்துள்ளது. நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையை மாற்றும் காலகட்டமாக  இந்தக் கொரோனா துயரக்  காலம் பாடம் கற்றுக் கொடுக்கிறது. 


தேசியக் கலைத்திட்டம் 2005 ( NCF - 2005) இன் பரிந்துரையின் படி,  கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிகளில் நடைமுறையில் இருந்து வரும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை  வலுவாக்கப்பட வேண்டும். திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான இந்த CCE முறை  தான்   மதிப்பெண்கள் சார்ந்த  தேர்வுகளுக்கான சிறந்த மாற்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த CCE எனப்படும் (Continuous and Comprehensive Evaluation) தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை

ஏற்கனவே 9ஆம் வகுப்பு வரை நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.  இதே முறையை 

 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில்  நீட்டிக்கலாம் . அப்படிச் செய்தால்   பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும்  . 


அதே போல , வாழ்வியல் சார்ந்த  சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கல்வியைக்  கற்றுக் கொடுக்கும்  ஆய்வுக் கூடங்களாகப்  பள்ளிகள் மாற்றம் பெற  வேண்டும். மேல்நிலைக் கல்வியில்  பயிலும் பாடப் பிரிவுகள் சம வாய்ப்பு முறையில் பரவலாக்கப்பட வேண்டும் .


தமிழகத்தின் எல்லா ஊர்களின்   மேல்நிலைப் பள்ளிகளிலும் விவசாயம் , தொழிற்கல்வி , அறிவியல்  , கணக்கு , அரசியல் , வரலாறு , புவியியல் , இலக்கியம் , இசை இப்படி ஏராளமான துறைகளை உருவாக்கிட வேண்டும். விரும்பும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும்  கிடைக்க இது உதவும். இவ்வாறான கல்வி சீரமைப்பு காலமாக இந்தக் கொரோனா காலம் மாற்றம் பெறுவதே சிறப்பு .


பேரா ச .மாடசாமி, இன்று பள்ளி இல்லை; வீடு போதாது. ஜான் ஹோல்ட் அழுத்தமாய் வலியுறுத்திய ‘குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்’ (Third place) நினைவுக்கு வருகிறது. வீடும் பள்ளியும் போக குழந்தைகளுக்கான மூன்றாம் இடம்!

மூன்றாம் இடம்- பெரியவர்கள் பேசித் தீர்க்க அல்ல; பிள்ளைகளைப் பயிற்சியால் வளைத்து முறிக்க அல்ல. பிள்ளைகள் நினைத்ததைப் பகிர- சிரிக்க ஓர் மூன்றாம் இடம். பிள்ளைகளின் மூளைகளையே குறி வைக்காமல், அவர்கள் இதயங்களை மலர வைக்கும் மூன்றாம் இடம். சக்கையாய்ப் பிழிந்து இதுதான் என்று இலக்கணம் வகுத்து வடிவமைக்கப்படாத மூன்றாம் இடம். புதுப் புது வடிவங்களில், புதுப் புது கற்பனைகளுக்கு இடங்கொடுத்து மலரும் மூன்றாம் இடம்! இன்றைய தேவை என்கிறார் 

இது குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 



No comments:

Post a Comment