Thursday, 18 March 2021

குழந்தைகளுடன் உரையாடுவோம்




மெல்ல நழுவும் கல்வி - 3

 நழுவாமல் இருக்க பல அம்சங்கள் ….


கல்வி இணைச் செயல்பாடுகள் 


அது ஒரு சனிக்கிழமை , ஆனாலும் குழந்தைகள் ஆவலோடு பள்ளியை நோக்கி மகிழ்ச்சியுடன் ஓடி வருகின்றனர். ஏனென்றால் வழக்கமான பாடங்களைப் படிப்பதை அன்றொரு நாள் நிறுத்திவிடுகின்றனர். மாற்றாக , குழந்தைகளுக்குப்  பிடித்த வேறு விதமான கற்றல் அனுபவங்களை அளிக்கின்றனர் அப்பள்ளி ஆசிரியர்கள் . ஆம் , அந்த தொடக்கப் பள்ளி ஈரோடு மாவட்டத்தில் நகரின் மையத்தில் அமைந்துள்ள பள்ளி . ஈ.கே.எம் அப்துல் கனி மதரசா இஸ்லாமிய ஆரம்பப் பள்ளியின் 25 வகுப்பறைகளும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன. பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள்  இந்த அரசு உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளியைச் சுற்றி இருந்தாலும் 720 குழந்தைகள் இப்பள்ளியை நோக்கி வரக் காரணம் என்ன ? குழந்தைகள் மகிழ்ச்சியாக கற்கின்றனர்.  அதற்கு பல்வேறு விதமான கல்வி இணைச் செயல்பாடுகளை உட்புகுத்தி குழந்தைகளை கற்றலுக்குள்  அழைத்து வரும் ஆசிரியர்கள் . கதை , பாட்டு , வில்லுப்பாட்டு , நடனம் ,நாடகம் ,வரைதல் , குழந்தைகள் திரைப்படங்கள்  விளையாட்டுப் பயிற்சிகள் , கராத்தே , கணினிப் பயன்பாடு , யோகா, களப்பயணம்  விழாக்கள் என நீள்கிறது இவர்களது பட்டியல் . கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு புத்தகத்தை வடிவமைத்துள்ளது இப்பள்ளியில் தான் . தமிழகத்தில் வேறெங்கும் இல்லாத சிறந்த நடைமுறை .


நான்கு வகை பிடித்தமான விஷயங்கள் 


 மாதம் தோறும் ஒரு சனிக்கிழமை , அந்த நாள் முழுவதும் மாணவர்களுக்குப் பிடித்தமான விஷயங்கள் .கதை , பாட்டு , நாடகம் (Dramma, Songs & Stories), குழந்தைகள் சினிமா ( Children movie) ,வரைதல் (Painting) ,  கைவேலைப் பொருட்கள் தயாரிப்பு  (Art & Craft) என்ற நான்கு வகுப்புகளை வடிவமைத்துள்ளனர் அப்பள்ளி ஆசிரியர்கள் .  ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் அப்பள்ளி ஆசிரியர்களாலேயே கற்றுத் தரப்படுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தனக்கு பிடித்தமானவற்றை தங்கள் கைகளால் வரையவும் பொருட்களை செய்து காட்டவும் ஒவ்வொரு பணியில் ஈடுபடுகின்றனர். அதோடு உலகத் தரம் வாய்ந்த குழந்தைகளுக்கான திரைப்படங்களை திரையிட்டு மகிழ்விக்கின்றனர். கடந்த வாரம் கூட மோனா (Moana) என்ற குழந்தைகள் திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்துள்ளனர் குழந்தைகள். 

அதோடு அந்த நாளின் இறுதியில் குழந்தைகள் தங்கள் கைகளால் செய்த பொருட்கள் , வரைந்த ஓவியங்கள் இவற்றையெல்லாம்  காட்சிப் படுத்தும் வேலையையும் செய்கின்றது பள்ளி .. அந்த நேரத்தில்  அவர்களுக்கு பாராட்டும் சிறு சிறு ஊக்கப் பரிசுகளும் அளிக்கப்படுகின்றன. குழந்தைகள் தன்னம்பிக்கைப் பெறுகின்றனர். அடுத்தடுத்த நாட்களில்  மகிழ்வோடு பள்ளிக்கு வர அவர்களது ஆர்வத்தைத் தூண்டுகின்றன இந்த கல்வி இணைச் செயல்பாடுகள். 


பள்ளிக்கான பொதுக் கற்பித்தல் முறை


அது மட்டுமல்லாமல் மாதத்தின் மற்றொரு சனிக்கிழமை முழுவதும் ஆசிரியர்கள்  மட்டும் வரவழைக்கப்படுகிறார்கள் .25 வகுப்புகளுக்கு 30 ஆசிரியர்களைப் பள்ளியில் பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளார் தலைமை ஆசிரியர் . பொதுவாக அரசுப் பள்ளிகளில் வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இல்லாத நிலையில் இங்கு வகுப்பிற்கு ஒருவர் என 25 ஆசிரியர்கள் இருப்பதுடன் , 5 ஆசிரியர்களைக் கூடுதலாக , தனிக் கவனம் எடுத்து குழந்தைகளுக்காக நியமித்துள்ளனர் நிர்வாகமும் தலைமை ஆசிரியரும் . இவர்கள் அனைவரும் சனிக்கிழமை முழுவதும்

குழந்தைகளுக்காக ஏதுவான  கற்பித்தல் முறைகளை தங்களுக்குள்ளேயே    விவாதிக்கின்றனர் .


மொழிப் பாடத்திற்கும் கணக்குக்கும் இவர்கள் செய்யும் இந்த முயற்சி குழந்தைகளிடம்  கற்றலின் மீதான  ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றினாலும் , பொதுவாக  எந்த முறையில் மொழிப் பாடத்தைக் கற்பித்தால் மொழித் திறன்களை குழந்தைகள் விரைவில் அடைவர் என்று கலந்துரையாடு , கணக்கை எவ்வாறு கற்பித்தால்  குழந்தைகள் எளிதில் கற்றுக் கொள்கின்றனர் என்பதை விவாதித்து தகுந்த முறையைத் திட்டமிடுகின்றனர். இந்த ஆசிரியர் அமர்வு மாதம் ஒரு முறை தொடர்ந்து நிகழ்கிறது.  எல்லாவற்றையும் குழந்தைகளை மையப்படுத்தியே சிந்தித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். அவற்றையே தங்கள் வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்துகின்றனர் .இவற்றின் இறுதி விளைவு குழந்தைகள் விருப்பத்துடன் கற்பதாக மாற்றம் பெறுகிறது. 


பரிசுகளும் பாராட்டுகளும் அனைவருக்கும்


 குழந்தைகளுக்குப் பரிசு வழங்குவதும் பாராட்டும் எல்லாப் பள்ளிகளிலும் செய்கின்ற செயல் தான். ஆனால் மதரஸா பள்ளியில் கல்வி இணைச் செயல்பாடுகளில் எல்லாக் குழந்தைகளையும் ஈடுபட வைத்து எல்லோருக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கும் நடைமுறையை இப்பள்ளி கொண்டுள்ளது. ஒரு பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் , வீட்டில் அதிக விலை கொடுத்து ஏதாவது  வாங்கித் தந்தால் கூட எம் பொண்ணுக்கு முகத்துல  சந்தோஷமே வர்றது இல்லங்க , நீங்கள் கொடுக்கும் மெடலுக்காக அவ்வளவு உற்சாகமாகி விடுகிறாள் எனக் கூறி பூரித்துள்ளார். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது குழந்தைகளை அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் தொடர்ந்து பாராட்டிட. ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும்  


 கற்றல் நிகழும் தருணங்கள் 


இந்த ஆசிரியர்கள் குழு மாணவர்களுக்குத்   தரும் பயிற்சியும் மாணவர்களது முயற்சியும் ஒன்றிணையும் தருணத்தில் தான் கற்றல் நிகழ்ந்து விடுகிறது. ஒரு வகுப்பறைக்குள் ஒரு நாளின் எட்டு பிரிவேளைகளையும்  பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களைக் கற்பித்தலால் மட்டும் நமது மாணவர்களிடம் கற்றல் நிகழ்கிறது , என்பதை முற்றிலும் பொய்யாக்குகிறது இந்தப் பள்ளியின் சூழல். கற்பித்தல் - கற்றல் - நடத்தை மாற்றங்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றைத் தனித்தனியாகப் பிரித்திட இயலாது.


சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரு வகுப்பறையில் இவை நிகழாது. அவற்றை உடைக்க வேண்டும். ஆசிரியர்கள்  குழந்தைகள் நலம் விரும்பும் ஆசிரியர்களாக மாற வேண்டும். அவ்வாறு ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள 

போதுமான சூழலையும் சுதந்திரத்தையும் தலைமை ஆசிரியர் உருவாக்கித் தர வேண்டும். ஒட்டு மொத்த இந்த தொடர் செயல்பாடுகள் குழந்தைகளை மையமாக வைத்து நகர வேண்டும் .மேற்சொன்ன அனைத்தும் இங்கு நிகழ்ந்து இருக்கின்றது.  


பெற்றோர் விரும்பும் பள்ளி 


நீங்கள் சந்திக்கும் ஆசிரியர்  யாரேனும்  ஒருவரைக் , உங்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர்  கூட்டத்திற்கு எத்தனைப் பெற்றோர்கள் வருவார்கள் என்று  கேட்டுப் பாருங்கள் . பத்து பேர் இருபது பேர் என்பது தான் பொதுவான பதிலாக இருக்கும். ஆனால் மதரசா பள்ளியில் முந்நூறுக்கும் குறையாமல் பெற்றோர் வருகின்றனர். குழந்தைகளின் தேவை , கற்றல் நிலைகளை உயர்த்த அவர்களது பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்கிறார்.  அதனடிப்படையில் ,  பள்ளிக்குள் தேவையான மாற்றங்களை  

செய்து வருகின்ற தலைமை ஆசிரியர் .பெற்றோர்கள் விரும்பும் பள்ளியாக  இப்பள்ளியை மாற்றியது கூட  குழந்தைகளின் மனதில் விரும்பும் மதரஸா பள்ளி உருவானதற்குக்  காரணமாக இருக்கலாம்.


மாணவர் உளவியல் சார்ந்து வலிமையான பள்ளி 

மேற்கண்ட ஒவ்வொன்றும் அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் உளவியலை வலுவாக்குகிறது. நல்ல சூழலில் வளரும் கல்வி கற்கும் குழந்தைகளது மனநிலை ஆரோக்கியமாக இருக்கும். கற்றல் சுதந்திரமாகவும் , விருப்பத்துடனும் , மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கைத் தருவதாகவும் அமையும் போது இயல்பாகவே கற்றல் எளிதாகிறது. இவற்றுக்குப் பாடப் புத்தகங்கள் ஒரு போதும் தடையில்லை 


சங்கிலித் தொடர் நிகழ்வு 


 இப்படியான குழந்தைகள் மகிழும் பள்ளியாக, அவர்கள் விரும்பும் பள்ளியாக இருந்தால் நழுவிச் செல்லும் கல்வியை இறுகப் பற்றிக் கொண்டு காப்பாற்றி விடலாம். . அதற்கு பல கரங்கள் தேவைப்படுகின்றன. ஆசிரியர்களிடையே நல்லுறவு , தலைமை ஆசிரியரின் அக்கறை , தலைமை ஆசிரியர் - ஆசிரியர் இடையேயான புரிந்து கொள்ளுதல்  , பெற்றோர் ஆசிரியர் இடையிலான நல்லுறவு , குழந்தைகளது பல்திறன் வளர்க்கத் தளம் , சிறந்த நிர்வாகம் ஆகியன . ஒரு குழந்தையின் முகம் மலர அகம் குளிர ஒரு ஆசிரியரின் அன்பான ஒரு சொல்லைக் கடந்து குழந்தையின் வாழ்க்கை மலர தளம் அமைக்கும் பள்ளிகள் வேண்டும். 


பேசுவோம். 

உமா ஆசிரியர் 

 

No comments:

Post a Comment