உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேலாக அச்சம் கொண்டு தவித்து வரும் கொரோனா பேரிடர் கால கட்டம் இது என்பதை அனைவரும் அறிவோம் . ஊரடங்கு ஒன்றே நோய் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தனிமைப்படுத்துதலே நோய் தொற்றைத் தவிர்க்கும் வழிமுறையாகவும் மாதக் கணக்கில் நடைமுறையிலிருந்து வருகிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை என்பது மருந்து கண்டு பிடிக்காத நிலையில் தான். இது உலக அளவில் பொதுமைப் படுத்தப்பட்டுள்ள இன்றைய நிலை.
பள்ளிகள் திறப்பு
இந்த அபாயகரமான சூழலில் நமது தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகள் திறப்பு நடைமுறைகள் குறித்து பல வித கருத்துகள் நிலவி வருகின்றன. ஏற்கனவே பல காலகட்டங்களில் வழக்கமாக
நிலவிய பேரிடர்களைக் காட்டிலும் இந்த நோய்த் தொற்று பிரச்சனை அனைவரையும்
வேறுபட்ட மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது .
சூழ்நிலை சரியாகி வழக்கம் போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுமா என்று சிந்திக்கையில் , ஒரிரு மாதம் தள்ளிப் போக வாய்ப்புகளிருப்ப
தாக அன்றாட நோய் பாதிப்பு பரவல் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.
தொடக்கப் பள்ளிக் குழந்தைகள்
இந்த மிகச் சிக்கலான சூழலில் , மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளைக் காட்டிலும் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளை நாம் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். வயதில் சிறுவர்களாக , குழந்தை இயல்புகளுடன் இருக்கும் இவர்கள் பள்ளிக்கு வருவது குறித்தும் நாள் முழுவதும் இவர்களைக் கையாள்வது உட்பட நிறைய திட்டமிடல்கள் தேவைப்படுகின்றன.
பள்ளி திறந்த பிறகும் இந்நோய் தொற்றுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகவே உணரப்படுகிறது. தொடக்கப் பள்ளி வயது குழந்தைகள் எப்போதும் தனித்து இருக்க வாய்ப்புகளில்லை.வளர்ந்த குழந்தைகளை விட தொடக்கப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் தனிநபர் இடைவெளி , முகக் கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எந்த அளவிற்கு உள் வாங்கி புரிந்து கொள்வார்கள் , கடைபிடிப்பார்கள் என்பதெல்லாம் கேள்விக்குரியவை. அவற்றைப் பயிற்றுவிப்பதும் பழக்கப்படுத்துவதும் சற்று சிக்கலாக இருந்தாலும் அவசியமான பின்பற்றுதல்கள் . குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் இந்தப் புரிதல்களைத் தர வேண்டிய கூடுதல் பொறுப்பில் இருக்கிறோம்.
மழலையர் கல்வி
இந்த நாட்களில் மழலையர் வகுப்புக்கான கல்வி குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 இன் ஒரு கூறாக வெளிவந்துள்ள மழலையர் கல்வி என்பது , தமிழகத்தில் பல ஆண்டுகளாக தனியார் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கின்றது .ஆனால் கடந்த கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளிலும் இந்த மழலையர் கல்வியை அரசே செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் இட வசதி உட்பட குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஆசிரியர்கள் இல்லாமை , ஏனைய அடிப்படை வசதிகள் பற்றாக்குறை எனஏராளமாக இடர்களை எதிர்கொண்டனர் தலைமையாசிரியர்கள் . இவற்றுடன் வரும் கல்வியாண்டில் கொரோனா சவால்களையும் சேர்த்து கையாளத் தயாராக வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. மேலும் வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறந்தாலும் மழலையர் கல்விக்கான அவகாசம் சற்று தாமதமானாலும் பரவாயில்லை. குழந்தைகள் பெற்றோருடன் வீடுகளில் இருப்பதே உகந்தது .சில மாதங்கள் கழித்து இவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கலாம்.
பள்ளிகளில் பாதுகாப்பு சூழல் உறுதிப்படுத்துதல்
முதல் வகுப்புக் குழந்தைகள் முதல் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பது பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகளில் ஏற்புடையதே . அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இடைவெளி விட்டு அமர்வது சிரமமான காரியம் அன்று. ஆனால் பெரும்பாலும் தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பதால் ஐந்து வகுப்புகளையும் பாடம் நடத்தி கவனித்துக் கொள்வதை விட நோய்த் தொற்று குறித்து மாணவர்களை கவனிப்பது சவாலான காரியம். ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுவர். அதற்குரிய ஏற்பாடுகளை செய்யலாம் .
அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுவது என்ற பாதுகாப்பு முறையும் பின்பற்றப் பட வேண்டும். அடிப்படையான நீர் வசதியை பள்ளிகளில் செய்து தர வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும். முகக் கவசம் அணிந்து வருதல் முறையும் தவறாமல் பின்பற்ற வலியுறுத்த வேண்டும்.
உளவியல் அணுகுமுறைகள்
பள்ளிகளில் வெளிப்புறப் பாதுகாப்பு மட்டுமல்ல, ஏற்கனவே தங்கள் வீடுகளில் பல்வேறுபட்ட சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுடன் போராடி வரும் குழந்தைகளின் மன அழுத்தங்கள் கொரோனா துயரத்தினால் கூடுதல் உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகியிருப்பதை நாம் மறுக்க முடியாது. ஆசிரியர்கள் இதை மனதில் கொண்டு குழந்தைகளை அணுகுதல் மிகவும் இன்றியமையாதது. குறைந்த பட்சம் "கால் ஆண்டுக்குரிய நாட்கள் " குழந்தைகள் வீட்டிற்குள் முடங்கி தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்து பகிர்ந்து கொள்ள முடியாத அறிவு நிலையில் இருப்பர். அவர்களது குழந்தைப் பருவத்தை மீட்டெடுப்பது என்பதிலிருந்து ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைக் குழந்தைகளை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சாதாரண விடுமுறைக் காலங்களில் உறவினர்களது அரவணைப்பில் மகிழ்ந்து உற்சாகமாக, விடுமுறைக் காலம் முடிந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளாக இருப்பர். ஆனால் இந்தக் கல்வியாண்டில் இவை எதுவுமின்றி வறண்ட மனநிலை , பயம் மிகுந்த மனநிலை , வீட்டில் வேலையில்லாத சூழலில் நலிவுற்ற பெற்றோரின் வருத்தங்களைப் பார்த்து பாதிக்கப்படும் குழந்தைகள் என
உளவியல் சிக்கல்களால் நிறைந்த மணவர்களாகவே இவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பிப்பர். அதோடு பள்ளியில் தரும் சத்துணவை ஆதரமாகக் கொண்டு வாழும் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவின்றி இந்தக் கால கட்டத்தைக் கடந்து வந்ததால் உடல் ஆரோக்கியமும் அவ்வளவு சீராக இருக்க வாய்ப்பில்லை.
இவர்களை அணுகுவதற்கு முதலில் ஆசிரியர்கள் தங்கள் மனநிலையை தயார்படுத்திக் கொள்வதே சிறந்தது.இந்த உளவியல் ரீதியான மாணவர் அணுகுமுறையை வலுவாக்க , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி துறை வழியாக வழிகாட்டு நெறிமுறைகள் தருவது வரவேற்கத்தக்கது.
சமமான கல்வி வாய்ப்பு
நம்மிடம் வரும் குழந்தைகள் பலதரப்பட்ட சூழலிருந்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் பொருளாதாரம் அடிப்படைக் காரணியாக இருக்கிறது. மாத சம்பளம் , வார சம்பளம், தினக்கூலி என்ற வரிசையில் உள்ள குடும்பங்களிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு பக்கம் என்றால் கல்வி இன்னும் கிடைக்காத மலைவாழ் ஆதிவாசிப் பழங்குடியினர் குழந்தைகள் , நரிக்குறவர் என்ற ஓரிடத்தில் நிலையாக வாழாத மக்களின் குழந்தைகள் , வேலை வாய்ப்புக்காக புலம் பெயரும் குடும்பங்களின் குழந்தைகள் , பெற்றோரை இழந்த ஆதரவற்ற குழந்தைகள் , இன்னும் தெருவோரக் குழந்தைகள் என ஏற்றத்தாழ்வு மலிந்த ஒரு சிக்கலான சூழலையுடைய குழந்தைகளைக் கொண்டது நமது பள்ளிகள் . அரசுப் பள்ளிக்கு வரும் 90% குழந்தைகள் மேற்கூறிய குடும்ப சூழலின் பின்னணியிலிருந்து தான் வருகிறார்கள்
கொரோனா காலகட்டத்தில் இணைய வகுப்புகள் (ON LINE TEACHING) கல்வித் தொலைக்காட்சி வகுப்புகள் என பல்வித முயற்சிகளும் நடந்தேறின. ஆரம்ப வகுப்புகளைப் பொறுத்தவரை இந்த வகுப்புகள் அவசியமற்றவையும் சமமற்ற கல்வி வாய்ப்புகளைத் தரக்கூடியதாகவும் அமைந்து விடுகிறது. இவையெல்லாம் குழந்தைகளிடம் ஏற்றத் தாழ்வு மனப்பான்மையை ஆரம்ப வகுப்புகளிலேயே உருவாக்கி விடும் , ஆகவே கல்வியாண்டின் பாடப் புத்தகங்கள் , பாடங்கள் விடுமுறை கால கட்டங்களை ஈடுகட்டும் நோக்கில் இது போன்ற கற்றல் வழிமுறைகளை ஆரம்ப வகுப்புக் குழந்தைகளிடம் கட்டாயப் படுத்தக் கூடாது.
வகுப்பறைகளை மாற்றலாம்
வழக்கமான கற்பித்தலும் வகுப்பறையும் கற்றுக் கொடுத்த அனைத்தும் இன்று பயனற்றுப் போய் விட்டன. நமது மண் சார்ந்த ஊர் சார்ந்த தற்சார்புக் கல்விக்கான வகுப்பறைகளை மறந்ததன் விளைவும் இன்றைய அனைத்து சூழல்களுக்கும் ஒரு காரணம். எப்பேர்ப்பட்ட கல்வி முறையும் ஒன்றுமில்லாததாகி ஆதரவற்ற நிராயுதபாணிகளாக மனிதர்கள் வாழும் நிலை. இவற்றை ஆரம்பக் கல்வியிலிருந்து மாற்றி நமது வாழ்வியல் கல்வியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் வகுப்பறைகளை உருவாக்கலாம்.
எழுத்து , சொல் , தேர்வு , கட்டளைகள் , கொஞ்சமாகக் கதைகள் , பாடல்கள் என்பவற்றை மாற்றி அதிகமான பாடல்கள் , அதிகமான கதைகள் , ஓவியம் வரைதல், காய்கறி பூச்செடி வளர்ப்பு , கொஞ்சம் பாடம் என மாற்றம் செய்து பிறகு சொற்களையும் எழுத்துகளையும் அவர்களே கற்றுக் கொள்ள வழி வகுக்கும் உயிருள்ள வகுப்பறைகளை நடைமுறைப்படுத்தலாம்.
சமூகத்தின் அடிப்படை மாறிப் போனதற்கும் வகுப்பறைக் கல்வி முறைக்கும் நெருங்கியத் தொடர்புள்ளது. ஆகவே ஆரம்பப் பள்ளி வகுப்பறையை மாற்றினாலே மற்றொரு கொரோனா போன்ற எந்தப் பேரிடரும் வருங்காலத்தில் நம்மைத் தாக்காது.
மகிழ்ச்சியான கற்றலுக்கு வழிவகுத்தல்
மாணவர்கள் தங்கள் கடந்த கால மன உளைச்சல் , பயம் இவற்றைத் தூர எறிந்து மகிழ்ச்சியான கற்றலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள என்னவெல்லாம் இயலுமோ அவற்றையெல்லாம் பள்ளி திட்டமிட வேண்டும்.
ஆசிரியர்களும் மாணவர்களுக்கு சுதந்திரமான மகிழ்ச்சியான கற்பித்தலைத் தர திட்டமிட வேண்டும். ஆம் , வார இறுதியில் விழாக்கள் , மன்றங்களைத் திட்டமிட்டு நடத்தி இந்த குழப்பமான பயம் மிகுந்த மனநிலையிலிருந்து வெளிவர மாணவர்களுக்கு வழிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். திரும்பவும் அழுத்தமாக நான் கூற நினைப்பது நினைவு படுத்துவது என்னவென்றால் பாடங்களை சற்றே தூரமாக வைத்து மேற்சொன்ன செயல்பாடுகளுக்கு வகை செய்தால் கற்றல் - கற்பித்தல் மகிழ்ச்சியாக அமையும். அதோடு எல்லாவற்றிலும் கொரோனா மீட்புக் கருத்துகள் மையமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கல்விக் கொள்கைகள் , கல்விக் குழுக்கள் ஆகியன வழிகாட்டும் மகிழ்ச்சியான கற்றலையே குழந்தைகளுக்குத் தர வேண்டும்.
பெற்றோர் சந்திப்பு முக்கியம்
பேரிடர் தொற்று நோயின் எல்லா முகங்களையும் சந்தித்த நமது பள்ளிக் குழந்தைகள் இந்தக் கல்வியாண்டில் தொடர்ந்து தங்களை கற்றவில் ஈடுபடுத்த வேண்டுமானால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரையும் பள்ளிக்குள் ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். வர இயலாத பெற்றோர்களை அவர் தம் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். அவர்களுக்கும் குழந்தைகளுக்கு மான உறவு முறை , பெற்றோரின் தேவைகள் , பெற்றோர்களின் மன அழுத்தம் இவை குறித்து பேசி , வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான நம்பிக்கையை அவர்களிடம் விதைக்க வேண்டியதும் உறுதுணையாக இருப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமை.
அதோடு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மாதமொரு முறை கட்டாயமாகக் கூட்டி எப்போதும் எடுக்கப்படும் பள்ளித் தேவைகளுக்கான முடிவுகளுடன் , சிறப்பு கவனமாக கொரோனா குறித்தான காலத்தின் பெற்றோர்கள் , குழந்தைகள் நலன் சார்ந்த
மீட்பு வழிகள் குறித்தும் இந்த பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்களில் முடிவுகள்
எடுக்கப்பட்டால் மிகுந்த பயனளிக்கும்.
கொரோனாவால் பெற்றோர் உணர வேண்டியது
எல்லா வகையான பள்ளிகளும் இன்று மூடப்பட்டு பொதுப் பிரச்சனையாகியுள்ளது. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தாய் மொழிவழிக் கல்வியில் சேர்க்க முன்வர வேண்டும். முதல் வகுப்பிற்கே லட்ச ரூபாய் கல்வி நிதி கொடுத்து படிக்கும் குழந்தையின் மனநிலையும் அரசுப் பள்ளியில் ஒரு ரூபாய் செலவின்றி கல்வி கற்கும் குழந்தையும் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றனர். கல்வி
கற்பது அவர்களது அடிப்படை உரிமை , அவ்வளவே. எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்குறிப்பிட்டவையே வரும் கல்வியாண்டின் தேவைகள். ஆகவே மக்களின் பார்வை கொரோனாவிற்குப் பிறகு அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்ப வேண்டும் . வரும் கல்வியாண்டு சவாலான ஆண்டாக இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை நடத்துவதில் மேற்கூறிய கருதுகோள்களை மனதில் கொண்டால் எளிதாகக் கடக்கலாம்
உமா
( கல்வியாளர்)
இந்த அபாயகரமான சூழலில் நமது தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிகள் திறப்பு நடைமுறைகள் குறித்து பல வித கருத்துகள் நிலவி வருகின்றன. ஏற்கனவே பல காலகட்டங்களில் வழக்கமாக
நிலவிய பேரிடர்களைக் காட்டிலும் இந்த நோய்த் தொற்று பிரச்சனை அனைவரையும்
வேறுபட்ட மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறது .
கொரோனாவால் பெற்றோர் உணர வேண்டியது
எல்லா வகையான பள்ளிகளும் இன்று மூடப்பட்டு பொதுப் பிரச்சனையாகியுள்ளது. தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தாய் மொழிவழிக் கல்வியில் சேர்க்க முன்வர வேண்டும். முதல் வகுப்பிற்கே லட்ச ரூபாய் கல்வி நிதி கொடுத்து படிக்கும் குழந்தையின் மனநிலையும் அரசுப் பள்ளியில் ஒரு ரூபாய் செலவின்றி கல்வி கற்கும் குழந்தையும் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றனர். கல்வி
கற்பது அவர்களது அடிப்படை உரிமை , அவ்வளவே. எல்லாக் குழந்தைகளுக்கும் மேற்குறிப்பிட்டவையே வரும் கல்வியாண்டின் தேவைகள். ஆகவே மக்களின் பார்வை கொரோனாவிற்குப் பிறகு அரசுப் பள்ளிகளின் பக்கம் திரும்ப வேண்டும் . வரும் கல்வியாண்டு சவாலான ஆண்டாக இருந்தாலும் ஆரம்பப் பள்ளிகளை நடத்துவதில் மேற்கூறிய கருதுகோள்களை மனதில் கொண்டால் எளிதாகக் கடக்கலாம்
No comments:
Post a Comment