பள்ளிக் கல்வியின் நீர்த்துப் போதலுக்கு பல காரணங்களை முன்வைத்து விட்டோம். ஒவ்வொன்றுமே, நான் தான் முக்கியம் என சொல்லாமல் சொல்கிறது. ஆனால் பள்ளிக் கழிப்பறைகள் பிரச்சனைகள் தான் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்குமளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது .
அரசு , அரசு உதவி பெறும் பள்ளிகள் என்றில்லை .தனியார் பள்ளிகளிலும் கழிப்பறை சார்ந்த பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன.
ஆரோக்கியம் சார்ந்த கழிப்பறைகள் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு இருந்தும் பள்ளிகளில் கழிப்பறைகள் நிலை என்ன ? ஒரு பள்ளியில் கழிப்பறைகள் அமைத்துள்ள பகுதிக்கு அருகில் செல்ல முற்படும் போதே மூக்கைப் பொத்திக் கொண்டு செல்லும் நிலை தான் இந்த 21ஆம் நூற்றாண்டின் வளர்ச்சி காலத்திலும் என்பதே வேதனை .
பெண்குழந்தைகள் என்ன சொல்கிறார்கள்
ஏன் தொடர்ந்து விடுப்பு எடுக்கிறீர்கள் , பொதுத் தேர்வு எழுதும் மாணவிகள் இப்படி லீவு போட்டா ரிசல்ட் எப்படித் தருவது எனக் கத்துகிறார் அந்த 10 ஆம் வகுப்பு ஆசிரியர் .பீரியட்ஸ் டைம்ல டாய்லெட் ல தண்ணியில்லாம எப்படிங்க மிஸ் போறது ? அதான் 4 நாள் லீவு போட்டுட்டேன் என்கிறார்கள் ஒரு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் பல மாணவிகள்.
இடைவேளை மணியடிக்கும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்பாகவே கழிப்பறை செல்ல அனுமதி கேட்கும் வழக்கத்தை அன்றாடம் கைக்கொள்ளுகின்றனர் சிலர் . அந்த மாணவிகளிடம் உரையாடியதில் இருந்து அறிந்து கொள்கிறார் ஆசிரியர் . பெல் (Bell) அடிச்சா கூட்டமா வந்துடுவாங்க , இடம் கிடைக்காது.
அப்பள்ளியின் கழிப்பறைகள் கதவுகளுக்கு தாழ்ப்பாளே இல்லை . ஏன் இரண்டு இரண்டு பேராய் அனுமதி கேட்க வருகிறார்கள் என காரணம் அறிந்து கொண்ட ஆசிரியர்க்கு பேரதிர்ச்சி . ஒருவர் உள்ளிருக்கும் போது மற்றொருவர் தாழ்ப்பாளுக்கு பதிலாக வெளியே நிற்க வேண்டுமாம் .
பெற்றோர்கள் ஆதங்கம்
நான் படிக்கற காலத்திலேயே கவர்மென்ட் ஸ்கூல்ல டாய்லெட் வசதி கிடயாது. காட்டுக்குள்ள தான் போவேன். அந்த கஷ்டம் என் குழந்தைக்கு வரக்கூடாதுன்னு தாங்க ,
5 ஆம் வகுப்பு வரை மெட்ரிகுலேசன் பள்ளிக்கு அனுப்பினேன் .ஃபீஸ் ரொம்ப அதிகமா இருந்ததுங்க , அதான் இப்போ அரசுப் பள்ளிக்கு மாற்றி சேர்த்து விட்டேன். குழந்தை பள்ளிக்கூடம் வரவே பயப்படறா . பாத்ரூம் ரொம்ப மோசமா இருக்குது ,தண்ணியேயில்ல .. அடிக்கடி யூரினரி இன்பெக்க்ஷன் வருது , டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனா தண்ணி நிறைய குடிக்க சொல்றாங்க , இவ தண்ணி குடிச்சா டாய்லெட் போகணும், அதனால் குடிக்க முடியாது என்கிறாள் . அடிக்கடி லீவு போட்ட குழந்தை பள்ளிக்கூடமே வர மாட்டேங்குறா டீச்சர். பள்ளிக்கூடத்தை விட்டு நின்னுக்கறேன்னு சொல்றா என அழுது புலம்பும் தாயை, தேற்ற வழியின்றி விழிக்கிறார் ஆசிரியர் .
ஆசிரியர்கள் கருத்து
எங்கள் பள்ளியில் துப்புறவாளர் மட்டுமே உள்ளார். ஆனால் அவர் கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாட்டார். நானே மூன்று முறைக்கு மேல் பெண்கள் மற்றும் ஆண்கள் கழிவறைகளை சுத்தம் செய்தேன். பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வருவதில்லை. தலைமை ஆசிரியரோ அதற்கு முயற்சி செய்ய மறுக்கிறார் பணம் இல்லை என்கிறார். 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கிவருவார் என்கிறது ஒரு ஆசிரியரின் குரல்.
மற்றொருவரோ , எங்கள் பள்ளி மாணவிகள் கடன்களை முடிக்க புதர்கள் பக்கம் செல்கின்றனர். தலைமை ஆசிரியர் கண்டு கொள்வதில்லை என்கிறார். எங்கள் பள்ளி மாணவர்கள் பொது வெளியில் தான் சிறுநீர் கழிக்கின்றனர் என்ற குரல்களும் ஒலிக்கின்றன .
கழிப்பறைத் தூய்மை செய்யும் பணியாளர்கள் தங்களது பணியினை சிறப்பாக செய்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது மட்டும் 6 மாதம் அல்லது 8 மாதம் தாமதமாகிறது .. இது அரசு தரப்பின் பிரச்சனை .
பணம் ஒதுக்கீடு செய்தும் சில தலைமை ஆசிரியர்கள் கழிப்பறை சுத்தம் செய்யும் பொருட்களை வாங்கித் தராமல் ஏமாற்றி விடுகிறார்கள் , இதுவும் ஆங்காங்கே நடைமுறையில் உண்டு.
பள்ளிகளில் கழிப்பறைகளின் துன்பங்கள்
மேற்சொன்ன சில உரையாடல்கள் ஏதேனும் ஒரு பள்ளிக்கு அல்ல , தமிழகத்தின் 98% அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறைகள் எப்படி இருக்கின்றன என்பதற்கு உதாரணங்களே .
மாணவர் எண்ணிக்கைக்கு தக்கபடி கழிப்பறை வசதி கிடையாது. 2000 பெண் குழந்தைகள் படிக்கும் நகரின் பள்ளியில் 20 கழிப்பறைகளே உள்ளன .அவற்றில் 10க்கு தாழ்ப்பாள் இல்லை , 5 உபயோகிக்க முடியாமல் இருக்கின்றன. 5 இல் தண்ணீர் வருவதில்லை. பிறகு அந்த 10 நிமிட இடைவேளையில் எப்படி குழந்தைகள் இவ்வளவு பேரும் 10 / 15 கழிப்பறைகளில் சிறுநீர் கழித்து விட்டு வெளியேறுவர் ?
சாதாரண நாட்களிலேயே இவ்வளவு பிரச்சனை , கோடை வந்து விட்டால் தண்ணீர்ப் பற்றாக்குறை தாண்டவமாடும். கிராமங்களிலும் இதே பிரச்சனைகள் இருந்தாலும் நகரப் பகுதிகளில் மிக அதிகமாக இப் பாதிப்பு உண்டு.
மாணவர்களுக்கு மட்டுமல்ல , ஆசிரியர்களுக்கும் கழிப்பறை வசதிகள் இல்லாமல் பள்ளிக்கு அருகிலுள்ள வீடுகளில் கெஞ்சி , வேண்டுதல் விடுத்து போய்விட்டு வரும் பெண் ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் உண்டு.
உளவியல் மருத்துவர்கள்
தங்களிடம் சிகிச்சைக்காக வரும் குழந்தைகள் பெரும்பாலும் தண்ணீர் குடிக்காமல் மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். காரணம் பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லாமல் , பராமரிக்கப்படாமல் இருப்பதுவே . பள்ளிகளின் பொதுவான பிரச்சனைக்கு பெற்றோர்களால் தீர்வு காண முடியாமல் தவிக்கின்றனர்.
தலைமையாசிரியர்கள் என்ன சொல்கின்றனர்
கழிப்பறை வசதிகள் ஓரளவுக்கு பள்ளிகளில் இருந்தாலும் பராமரிப்பு மானியங்கள் மாதா மாதம் ஒதுக்கப்பட்டு கையில் வந்து சேர கால தாமதம் ஆகிறது. பல மாதங்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. குறைவான சம்பளம் என்பதால் இந்தப் பணிக்கு ஆள் கிடைப்பதில் சிக்கல் .மிகச் சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் ,ஆசிரியர்களே கழிப்பறைத் தூய்மை செய்து கொள்கிறோம் என்கின்றனர்.
மாநகராட்சி பகுதிகளில் கழிப்பறை சுத்தம் செய்ய பொருட்கள் வாங்க மாதம் 500 வழங்கப்படுகிறது. கழிப்பறை சுத்தம் செய்ய தினக்கூலி அடிப்படையில் பணியாளர் நியமிக்கிறோம். மாநகரப் பகுதிளைப் போல ஊராட்சிப் பகுதிகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட அரசாணை உள்ளது.
கல்வி முறையும் காரணம்
நமது கல்வி முறை தேர்வு , மதிப்பெண் சார்ந்தே மாறி விட்டதால் தன் சுத்தம் , சுற்றுப்புற சுத்தம் போன்று எந்த கருத்தும் மாணவர் மனதைத் தொடவில்லை. பள்ளிகளில் தாங்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுத்தம் பராமரிப்பு இவற்றில் எந்த விழிப்புணர்வும் இல்லாமல் வளருகின்றனர். ஆண் பள்ளிகள் படிக்கும் பள்ளிகளில் சிறுநீர் கழிக்கும் பீங்கான் தொட்டிகளும் நீர் வரும் குழாய்களும் அடிக்கடி உடைக்கப்படுவதே இதற்கு உதாரணம் . பெண் குழந்தைகளது நாப்கின் உபயோகமும் கூட பெரும்பாலான பள்ளிகளில் கவலைக்கிடம் தான். இந்த நேரத்தில் நாம் காந்தியின் ஆதாரக் கல்வி முறையை நினைவு கொள்ள வேண்டியுள்ளது.
கழிப்பறை எண்ணிக்கையும் பராமரிப்பும்
பள்ளியில் குழந்தைகளின் எண்ணிக்கைக்குத் தேவையான எண்ணிக்கையில் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே பல பள்ளிகளில் முறையாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தக்க முயற்சி எடுத்து பராமரிப்பு செய்வதில்லை என்பது கண்கூடான உண்மை. பள்ளி வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் கழிப்பறைகளை சரியான முறையில் பராமரித்து வருகின்றனர் என்பதும் உண்மை
தீர்வுகள் நம்மிடமே
கழிப்பறை சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்திக் கொள்ளும் வழிமுறைகளை முறையாகப் பயன்படுத்தத் தலைமை ஆசிரியர்கள் முன்வர வேண்டும் . கழிவறைக் கட்டடங்களைப் பள்ளிக்கு வழங்கும் மானியத்தில் சீரமைக்கலாம் . அரசின் பகுதியில் குறைபாடு இருக்குமானால் அதனை முறைப்படி அணுக வேண்டியதும் அவசியமாகிறது. பள்ளி மானியத்தை முறையாக பயன்படுத்தினாலே கழிவறைப் பயன்பாட்டுக் குறைகளைக் களையலாம்.
ஒரு வீட்டில் கழிப்பறையின் தூய்மையைப் பார்த்து வீட்டின் தூய்மை குறித்து முடிவுக்கு வரலாம் எனக் கூறும் பழமொழி நமக்குத் தெரியும். ஆயிரம் காரணங்கள் தேடினாலும் கழிப்பறைப் பிரச்சனைகளைத் தீர்த்து சுகாதாரமான பள்ளியாக வைத்திருக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தலைமை ஆசிரியருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் வேண்டும் .
குழந்தைகள் தங்களின் பெரும்பாலான நேரத்தைப் பள்ளிகளில் தான் கழிக்கின்றனர். சிறுநீர் , மலம் கழிக்க , பருவ வயது பெண் குழந்தைகள் தங்கள் மாதவிடாய் காலப் பயன்பாடு அனைத்துக்கும் சுத்தமான பராமரிப்புடன் நீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் மிகவும் அவசியம். அதற்கு என்ன சூழல் தேவையோ அதற்கு தேவையானவற்றை தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்களுடன் இணைந்து செய்ய வேண்டும் .
அரசு தரப்பிலிருந்து வரும் சிக்கல்களைத் தீர்க்க பள்ளி மேலாண்மைக் குழு , பெற்றோர் ஆசிரியர் குழுக்களின் உதவியுடன் தீர்க்க இயலும். ஏனெனில் கழிப்பறை சரியில்லாத பள்ளிகளைக் குழந்தைகள் விரும்புவதில்லை. அரசு செய்து கொடுத்துள்ள வசதிகளை முறைப்படுத்தினாலே எல்லாப் பள்ளிகளிலும் சுத்தமான கழிப்பறைகளைப் பார்க்கலாம் .
No comments:
Post a Comment