படித்தல் திறன் வளர்க்க ஊடகங்களின் பங்கு
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (A3)வழியே வாசிப்பை பரவலாக்க எடுத்த முயற்சிகள்
முன்னுரை
ஊடகங்களை சிறந்த முறையில் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம் என்ற பொருண்மையின் உதாரணமாகக் கூறும் கட்டுரை இது.
ஊடகங்கள் வழியே தமிழ் வாசிப்பைப் பரவலாக்கிய நேரடியான செயல் திட்டம் குறித்தும் அதன் வெற்றி குறித்தும் பேசப்பட வேண்டிய கட்டுரையும் கூட .
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு
தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே சிறப்பாக செயல்படும் அரசு , அரசு உதவி பெறும் பிரிவில்
தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை இணைத்து 2015 ஆம் வருடம் முதன் முதலாக உருவாக்கப்பட்ட இணைய வழிக் குழுதான் A3 என அழைக்கப்படும் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு, இது தன்னார்வமாக உருவாக்கப்பட்டது. . மாணவர் திறன்களை வெளிக் கொணர ஆசிரியர்களை திறமிக்க பன்முக ஆற்றலுடையவர்களாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் இக்குழு கற்பித்தல் சார்ந்த கருத்துகளைப் பகிர , கணினி வழி பயிற்சி தர , அறிவியல் கண்ணோட்டம் வளர்க்க , கலை குறித்தான கற்றல் செயல்பாடுகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த என பல பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. அவற்றுள் மிக முக்கியமானது , கடந்த நான்கு கல்வியாண்டுகளாக வாசிப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களை வாசிக்கும் பழக்கத்திற்குள் கொண்டு வரவும் ஆசிரியர்களுக்கு உதவத் திட்டமிட்டது. அதன் பயணம் , செயல்பாடுகள் குறித்தான பகிர்வே இக்கட்டுரை .
பொருள்
A3 குழுவின் செயல்பாடுகளை பலரும் அறிவார்கள் , அச்சு ஊடகமான புதிய தலைமுறை கல்வி இதழின் மூத்த ஆசிரியராக இருந்த பொன். தனசேகரன் என்பவர் இக்குழுவின் வழியே க்ரியாவின் அகராதிகளை சில மாணவர்களுக்கு வழங்கும் பொருட்டு பதிப்பகத்தாரை சந்திக்க அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் உமாமகேஸ்வரியை தொடர்பு கொண்டார் .அந்த சந்திப்பில் இந்த அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்யும் பணிகள் குறித்து க்ரியா பதிப்பக உரிமையாளர் ராமகிருஷ்ணன் அவர்களிடம் கூறியதோடு , நீங்கள் சில மாணவர்களுக்குப் பரிசாக இப்புத்தகங்களைத் தந்தால் குறிப்பிட்ட மாணவர் மட்டுமே பயனடைவார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கு வழங்கினால் , அவர்கள் பணிக் காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைவர் , ஆகவே நீங்கள் வழங்கும் புத்தகங்களை A3 குழு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அதற்கு இசைவு தெரிவித்த க்ரியா ராமகிருஷ்ணன் முதலில் 50 A3 பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்கிறார். அப்படி உருவான செயல் திட்டமே இன்று தமிழகம் முழுக்க ஏறத்தாழ 500 பள்ளிகளை சென்றடைந்துள்ளது எனலாம்.
முதல் முயற்சி
மேற்சொன்ன விபரங்கள் வழியாக , முதல் முயற்சியாக , வாசிப்பை மாணவர்களிடம் எடுத்துச் செல்ல ஆர்வமும் விருப்பமும் உள்ள மேல்நிலை உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் முகநூல் பதிவு வழியாகவும் A3 வாட்ஸ் அப் குழு வழியாகவும் விருப்பம் கேட்கப்பட்டது . விருப்பம் தெரிவித்த 50 பேர் கொண்ட கட்புலனச் செவி (வாட்ஸ் அப் ) குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் க்ரியா பதிப்பகத்தார் 3 பேரையும் இணைத்து , 50 பேரின் பள்ளி முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டது. உடனுக்குடன் புத்தகம் கிடைக்கப் பெற்றதும் , மாணவர் பயன்பாட்டை குழுவில் ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டதும் க்ரியா குழுவின் உற்சாகத்தை வலுப்படுத்தியது . ஆர்வமாகிப் போன பதிப்பகம் இச்செயல் திட்டத்தை தொடர்ந்து அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் எடுத்துச் செல்ல உறுதி அளித்தது. அதன்படி பதிப்பகம் நன்கொடையாளர்களை அணுகி புத்தகத்திற்கான தொகையைக் கொடையாகப் பெற்று பள்ளிகளுக்கு அனுப்பும் செலவை க்ரியா ஏற்றது. முதலில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவ நினைத்து தன் வெளியீடான 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 'யையே தேர்வு செய்தது. அதனுடன் மாணவர் படிக்க வேண்டிய சில நூல்களையும் இணைத்து ஒரு பள்ளிக்கு 2700 மதிப்புள்ள புத்தகங்களை அனுப்பியது .
தொடர்ந்த
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் *Crea* உடனான பயணம் .
முதல் முயற்சியில் வெற்றி கண்ட க்ரியா,
மாணவர் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்ட 450 பள்ளிகளுக்கு , 12 தலைப்புகளில் 1380 புத்தகங்களை ரூ ஐந்து லட்சத்து பன்னிரெண்டாயிரம் (5, 12,000) மதிப்பில் இதுவரை வழங்கியுள்ளது.
தலைப்புகள் - பயன்பாடுகள்
1 .க்ரியா - தற்காலத் தனித் தமிழ் அகராதி
தற்காலத்தில் பயன்படுத்தும் தமிழ் சொற்களுக்கான விளக்கங்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுக்கான படங்கள் ,
இலங்கைத் தமிழ்ச் சொற்கள் , தமிழ் - ஆங்கில விளக்கங்கள் என்று பல விதமான தகவல்கள் இந்தத் தற்காலத் தனித் தமிழ் அகராதியில் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் இளம் வயதிலேயே அகராதிகளைப் பயன்படுத்தவும் தமிழ் மொழியைப் புரிந்து கொள்ளவும் பிழையின்றி பேச , எழுதவும் இந்த அகராதி மாணவர்களிடம் பயனுள்ளதாக உலவி வருகிறது.
2. அறிமுகக் கையேடு - தட்டான்கள்
3.அறிமுகக் கையேடு - பறவைகள்
4.அறிமுகக் கையேடு-வண்ணத்துப்பூச்சிகள்
இந்த மூன்று அறிமுகக் கையேடுகளிலும் வண்ணத்துப்பூச்சிகள், பறவைகள் , தட்டான்கள் படங்களுடன் , அவை குறித்த அடிப்படைத் தகவல்கள் எளிய தமிழில் தரப்பட்டுள்ளன . அதோடு அவற்றின் அறிவியல் பெயர்களும் தரப்பட்டுள்ளன. நாம் காணும் பறவைகள் , தட்டான்கள் ,வண்ணத்துப் பூச்சிகளின் இனத்தை அறிந்து கொள்ளவும் சூழலியல் சார்ந்த உயிர்த் தகவமைப்பு குறித்தும் குழந்தைகள் அறிந்து கொள்ளவும் அறிவியல் மனப்பான்மை வளரவும் இக்கையேடுகள் உதவுகின்றன.
5. பருவ நிலை மாற்றம் - உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் பருவ மாற்றங்களால் அதீத மழை , அதிக குளிர் , அளவு கடந்த வெயில் போன்ற சூழல் உருவாவதைப் பதிவு செய்யும் இப்புத்தகத்தை சிறு வயதிலேயே குழந்தைகள் படிப்பதால் அறிவியல் ரீதியான காரணங்களை அறிந்து , இளவயதிலேயே சுற்றுப்புற மாசுபடுதலை தடுத்தல் இயற்கையைப் பாதுகாத்தல் முதலிய புரிதல் உருவாகுகிறது .
6. குட்டி இளவரசன் - ஏறத்தாழ 300 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட இக் கதைப்புத்தகம் சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்துப் படிக்கும் முக்கியமான புத்தகங்களில் ஒன்று.
7 . காகிதப் பாவைகள் - 33 பாவைகளைக் காகிதம் கொண்டு உருவாக்குவது எப்படி என ,தமிழ் , ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் தரப்பட்டுள்ள நூல். ஒவ்வொரு பாவையும் காகிதத்தில் வெட்டி ஒட்டி வண்ணம் தீட்டி , அவற்றுக்கு உயிரூட்டும் விதமாக ஒவ்வொரு பாவைக்கும் ஒவ்வொரு விதமான அசைத்து கதைகளைக் கூறும் போது குழந்தைகளின் கற்பனைத் திறன் அதிகரிக்கிறது.
8 .The BBI combinatory Dictionary of English - இந்த அகராதி ஆங்கிலத்தில் எந்தச் சொல் எந்தச் சொற்களுடன் சேரும் என்பதை விளக்குகிறது.
9. மால்குடி மனிதர்கள் - இந்தியாவின் புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே.நாராயணன்
ஆங்கிலத்தில் எழுதிய கதைத் தொகுப்பு , முதல் முறையாக தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது நமது இலக்கியக் கல்விக்கு உதவியாக மாணவர்களுக்குப் பயன்படுகிறது.
10. போலி அடையாளம் - ஆஸ்திரேலியப் பெண் எழுத்தாளர் ஹேலஸ் எட்வர்ட்ஸ் பதின்ம வயதுக் குழந்தைகளுக்காக எழுதப்பட்ட குறுநாவல் ஒரு சுவாரஸ்யமான மர்ம நாவல் .குழந்தைகள் விரும்பிப் படிக்கின்றனர்.
11. முத்துலட்சுமி - ரெட்டி சுய சரிதை - சமூக சீர்திருத்தவாதியாகவும் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட இந்தியாவின் முதல் பெண் மருத்துவரின் வாழ்க்கை வரலாறு மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது.
12. காற்று , மணல் , நட்சத்திரங்கள் - குட்டி இளவரசன் எழுதிய செந்த் - யெக்சுபரி பிரெஞ்சு இலக்கிய உலகின் புகழ் பெற்ற பாராட்டு மிக்கவர். இவர் தனது 23 ஆம் வயதில் தொடங்கி வாழ்வின் இறுதி வரை விமானியாக , போர்க்கால இதழாளராக , புதிய விமானத் தடங்களை கண்டுபிடித்தவராக பல சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். இவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புத்தகமே இது. ஒவ்வொரு வரியும் நம் வாழ்க்கையைத் தொடர்பு படுத்தி பார்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
இப்படியான 12 தலைப்புகளுக்கான புத்தகங்கள் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிக் குழந்தைகளை பல விதங்களில் ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக இதுவரை A3 + க்ரியா புத்தகங்கள் என்ற தலைப்பில் 4 புலனக் குழுக்கள் (வாட்ஸ் அப்) உருவாக்கப் பட்டுள்ளன .ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் புதிய குழு ஒன்று உருவாகி பள்ளியில் க்ரியா நூல் வாசித்தல் குறித்த பகிர்வை குழுக்களில் படங்களாகவும் காணொளியாகவும் பதிவு செய்கின்றனர். இச்செய்திகளை முகநூல் தளத்திலும் பதிவிடும் ஆசிரியர்களும் உண்டு. அதன் பயனாக அவர்களது பள்ளி நூலகங்களுக்கு உலகின் பல மூலைகளிலிருந்தும் புத்தகங்களும் பள்ளிக்கு உதவிகள் கிடைத்த கதைகளும் உண்டு.
தும்பியுடனான A3 இன் பயணம்
இன்றைய காலச் சூழலில் சிறுவர்களுக்கான சிறார் மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் தும்பியின் ரசிகர்களாக ஆயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளது அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு .
ஆம் , உலகளாவிய ஓவியக் கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமிழில் மொழி பெயர்த்து வண்ணக் கதையிதழாக இப்புத்தகம் மாதாமாதம் வெளிவருகிறது. மேலும் மூத்தக் குழந்தைகளுக்கு என தனிப் பகுதியாக குழந்தைகள் சார்ந்த உளவியல் பகுதிகளை பெற்றோரும் ஆசிரியர்களும் அறியும் வண்ணம் சிறந்த கட்டுரைகள் , கதைகள் மற்றும் மொழி ஆக்கங்களைக் கொண்டுள்ளது. அதோடு உலகளாவிய ஓவியக் கதைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் தரப்பட்டிருக்கும் .
இப்படியான ஒரு சிறுவர் மாத இதழை பள்ளிக் குழந்தைகள் வாசித்து உணர A3 குழு முடிவு செய்து , அதன் ஒருங்கிணைப்பாளர் கொடையாளர்களைத் தேடினார்.
வருட சந்தா ரூ 800 , ஏறக்குறைய 100 பள்ளிகளுக்கு கொடையாளர் வழியாக ரூ 80000 கட்டி அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை ஒவ்வொரு பள்ளிக்கும் பொறுப்பாளராக நியமித்து அதே போல வாட்ஸ் அப் குழு தும்பி பள்ளிகள் என்று ஆரம்பித்த 2019 ஜூன் முதல் பள்ளிகளுக்கு சிறார் மாத இதழின தும்பி அனுப்பப்படுகிறது.
இதன் ஒவ்வொரு மாத இதழையும் வாசிக்கும் முதல் வகுப்பு முதலான குழந்தைகள் உண்டு. மகிழ்ந்து தனது தும்பி உடனான அனுபவங்களை கருத்தாக எழுதித் தரும் குழந்தைகள் தமிழும் முழுவதும் பேருந்து செல்லா மலைப் பாங்கான இடங்களிலும் உள்ளனர். அவர்களது அன்றாட வாழ்வில் மறக்க முடியாத இடத்தை தும்பி சிறார் மாத இதழுக்கு அளித்து வரும் குழந்தைகளை நாம் காண முடியும்.
மேலும் சில இதழ்கள்
இவை தவிர குட்டி ஆகாயம் , பஞ்சு மிட்டாய் போன்ற சிறுவர் இதழ்களையும் A3 குழு ஆசிரியர்களிடம் எடுத்துச் சென்று மாணவர் பயன் பெற்று வருகின்றனர் , ஆனால் அவை இப்போது தான் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. இன்னும் பரவலாக்கும் முயச்சியில் குழு ஒருங்கிணைப்பாளர் ஈடுபட்டுள்ளார்.
ஆசிரியர்கள் கருத்து
இது போன்ற வாசிப்பு அனுபவத்தை குழந்தைகள் மிகவும் விரும்பி கதை சொல்லிகளாகவும் கதை எழுதுபவர்களாகவும் முன்னேறிக் கொண்டுள்ளனர் என மகிழ்கின்றனர் ஆசிரியர் . அதோடு ஆசிரியர்களும் குழந்தைகளோடு இணைந்து வாசிக்க ஆரம்பித்துள்ளனர் . மேலும் பள்ளிக் குழந்தைகள் பள்ளி நூலகங்களை நெருங்க , சரளமாக தமிழ் வாசிக்க , தன்னம்பிக்கையுடன் தங்கள் திறனை வெளிப்படுத்த இம்முயற்சிகள் காரணமாக அமைந்துள்ளதையும் பதிவு செய்து வருகின்றனர்.
முடிவுரை
வாசிக்கும் பழக்கம் ஓர் மனிதனை முழு மனிதனாக மாற்றிவிடும்...
உலகில் வாழ்ந்து மறைந்த மாமனிதர்கள் பலரும் நூல்கள் வழியாகத் தான் வாழ்வின் வெளிச்சத்தை நோக்கி பயணித்தனர்...
ஒருகோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது,
*ஒரு நூலகம் கட்டுவேன்* என்று பதிலளித்தாராம் மகாத்மா...
ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் *வின்ஸ்டன் சர்ச்சில்*...
இவ்வாறு உலகில் வெற்றி பெற்ற ஒருவரும் புத்தக வாசிப்புக்கு முக்கியத்துவம் தந்துள்ளதை நாம் அறிவோம் . ஆகவே தான் பள்ளிக் குழந்தைகளிடம் தாய்மொழி வாசிப்புக்கும் தமிழ் படித்தல் திறனுக்கும் முக்கியத்துவம் கருதி அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு வாசிப்பை பரவலாக்கி வருகிறது. முழுக்க முழுக்க ஊடகங்களின் வழியே தான் இது சாத்தியமாகி வருகிறது. இப்பயணம் தொடரும் .
SCERT க்கு ஒரு கோரிக்கை .
தமிழகப் பள்ளிகளுக்கு வருடா வருடம் நூலக நிதி புத்தகங்களுக்காக ஒதுக்கப்படுவதில் இவை போன்ற தும்பி சிறார் இதழ் , க்ரியா வெளியீடு களை வாங்க தலைமை ஆசிரியர்களுக்குப் பரிந்துரை செய்ய A3 குழு பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
கட்டுரையாளர்
சு.உமாமகேஸ்வரி
(ஒருங்கிணைப்பாளர் – A3 குழு )
No comments:
Post a Comment