Thursday, 18 March 2021

மரி என்னும் ...

அந்த  வகுப்பறையில் ஒரு ஆசிரியர் குழந்தைகளிடம்  ஒரு கதையைக் கூறினார். மரி என்னும் ஆட்டுக்குட்டி என்ற பிரபஞ்சன் எழுதிய அந்தக் கதையில் வரும் அற்புத மரி என்ற சிறுமியின் வாழ்க்கையைக் கேட்ட மாணவிகள் பலரும் தங்கள் மனம் திறக்கின்றனர்.13 வயது கூட நிரம்பாத அவர்களுள் சிலரின் மனது மரியைப் போன்ற குழந்தைகளைக் குறித்து பேச ஆரம்பித்தது  .நிராதரவான மரியைப் போன்ற குழந்தைகளைப் பார்த்தது பற்றி மாணவிகளது உரையாடல் ஆரம்பப் புள்ளியாக மாறுகிறது.  டீச்சர் , நான் வரும் வழியில் தெருவுல சில பசங்க தனியா வசிக்கிறாங்க , அவர்களிடம் நான் பேசியிருக்கேன். காசு கூட கொடுத்து இருக்கேன், அவங்க பள்ளிக் கூடம் போவதே இல்லை என்கிறார்  ஒரு மாணவி .ஆம் இப்படியான தெருவோரக் குழந்தைகள் குறித்து தான் இங்கு பேசப் போகிறோம். 


தெருவோரக் குழந்தைகள் 


குழந்தைகள் தான் சமூகத்தின் ஆகச் சிறந்த மனிதர்களாக வளர்ந்து ஒரு நாட்டின் மனித வளமாக மாறுகின்றனர். அத்தகைய குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருப்பவர்களும்  அவர்களை   வளர்க்கும் பொறுப்பு மிகுந்தும் உடையவர்கள் குடும்பங்களில் உள்ள பெற்றோர்களே. ஆனால் இத்தகைய  குடும்ப அமைப்புகள் கிடைக்காமல் நகரங்கள் கிராமங்கள் ஆகியவற்றின் தெருவோரங்களில் தங்களது வசிப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் குழந்தைகள் தான் தெருவோரக் குழந்தைகளாக மாறுகின்றனர். 


காரணங்கள் 


பெற்றோர்கள் இறந்து விட்டதாலும் , தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவர் இறந்து மாற்றாந்தாய் அல்லது தந்தையின் வன்கொடுமைகளால் வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் தெருவிற்கு வந்து விடுகின்றனர்.  உறவினர்களின் ஆதரவும்  இல்லாததாலும் , மன அழுத்தங்களாலும் , பல்வேறு காரணங்களால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமலும் என பல நிலைகளில்  வீட்டை விட்டு வெளியேறி தெருவில் வசிக்கின்றனர் பல லட்சக்கணக்கான குழந்தைகள். இவர்களைப் போன்ற குழந்தைகள் பல நாடுகளிலும் குடும்பங்களை விட்டுப் பிரிந்து தெருவோரங்களில் வசித்து வருகின்றனர்.  இருப்பினும் சிலஆய்வுகளின் முடிவுகள் சொல்வது என்னவோ உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தெருவோரங்களில்  வாழும் குழந்தைகள் இந்தியாவில் தான் என்கின்றன.சமூகக் கேடு செய்யும் மனிதர்கள் குழுக்களாக இணைந்து குழந்தைகளைக் கடத்தி அவர்களது இருப்பிடங்களை இழக்க வைத்து தங்களுக்குப் பணி செய்யவோ வருமானம் ஈட்டித் தரவோ தெருவோரக் குழந்தைகளாக அவர்களை மாற்றிய செய்திகளும் பல ஆயிரம் உண்டு. 


அவர்களின் நிலை 


சாதாரணமாகக் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில்  கிடைக்கும் உரிமைகளே  இவர்களுக்கு கிடைப்பதில்லை , அவற்றைப் பெறுவதிலேயே மிகவும் போராட்டம் தான். தங்களது தேவைகளைத் தாங்களே தேடிக் கொள்ள வேண்டிய சூழல் , உணவுக்காகவும் உடைக்காகவும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் . அன்பும் ஆதரவும் கிடைக்காததால் தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டியவர்களாக வளர்கின்றனர். குழந்தைகள் மகிழ்ச்சியாக தங்கள் விளையாட்டுப் பருவத்தை மகிழ்ந்து  குழந்தை மயத்துடன்  வளர்வதில்லை. மாறாக எப்போதும் எச்சரிக்கை உணர்வுடனேயே  வாழ வேண்டிய நிர்ப்பந்தம் . அதே போல சமூகத்தால் பலராலும் சுரண்டப்படுகின்றனர். தாங்கள் பணி புரியும் இடங்களில் அதிக நேர உழைப்பைத் தந்து குறைவான கூலியைப் பெறும் நிலையில் உள்ளனர். புறக்கணிப்பு என்பது இவர்களுக்கு

எல்லா இடங்களிலும் உண்டு. எப்படியாயினும் தெருவோரக் குழந்தைகளின் நிலை என்பது பரிதாபத்திற்கு உரியதாகவே இருக்கின்றது.


ஆய்வுகள் 


மும்பை , டெல்லி , கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் லட்சக்கணக்கான தெருவோரக் குழந்தைகள் குறித்து மனித உரிமைகள் ஆணையம் ஆய்வுகளை 30 வருடங்களுக்கு முன்பிருந்தே செய்து வருகின்றன. விடுதலை பெற்ற இந்தியாவில் 1990 வரையிலும் கூட  இந்தியாவின் அதிகாரப்பூர்வ சொல் அகராதியில் தெருவோரக் குழந்தைகள் என்ற சொல் இடம் பெறவில்லை என்று தகவல்கள் கூறுகின்றனர்  ஆனால் அதற்குப் பிறகு இந்தியாவில் பல நகரங்களில் 

செய்யப்பட்ட ஆய்வுகளே லட்சக் கணக்கிலான தெருவோரக் குழந்தைகள் வசிப்பதை உறுதி செய்கின்றன. அதன்படி ,

பெரும்பாலான தெருவோரக் குழந்தைகளின் சோகக் கதைகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அதன் முடிவுகளாக   வெளிவந்துள்ள தகவல்கள் சொல்பவை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. ஆம் ...காவல் துறையினரால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைப்பதற்கு பதில் பலவாறு அச்சுறுத்தப்படுவதும் துன்பப்படுவதும் அதனால் இறப்பு வரையிலான வேதனைகள் தொடர்கின்றன எனவும் ஆய்வுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்களைக் குறித்து குழந்தைகள் உரிமை ஆணையம் , மனித உரிமைகள்  ஆணையம் , குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் போன்றவை  இவர்கள் குறித்த ஆய்வுகளை செய்து வருகின்றன.


நம்மைச் சுற்றி இவர்கள் 


நாம் வாழும் இடங்களில் அது கிராமப் பகுதி என்றாலும் நகரங்கள் என்றாலும் தெருவோரக் குழந்தைகளைக் காணலாம். நகரங்களில் குடும்பங்களாகவே வாழும் தெருவோரக் குழந்தைகள் உண்டு. வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசிக்கும் குடும்பங்களில் வாழும் குழந்தைகளையும் நாம் பார்க்கலாம் . பெரு நகரங்களில் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்ட நெரிசல் உள்ள மற்ற எல்லா இடங்களிலும் பொருள்களை விற்பனை செய்பவர்களாக வளைய வருவதைப் பார்க்கலாம்.  தனியாக இருக்கும் இவர்களை சமூகக் குற்றங்களில் ஈடுபடுத்தும் பெரிய பெரிய கும்பல்களும் உண்டு. ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல பல்வேறு  மன அழுத்தங்களால் வாழும் இவர்களை இது போன்ற நடவடிக்கைகள் மேலும் பலவீனமாக்கி வாழ்வை சிதைத்து அச்சத்திற்குள்ளேயே வாழ்க்கையை பயணிக்க வைக்கிறது . வாழ்வாதாரமே இல்லாமல்  தேடலை மட்டுமே கருவியாகக்  கொண்டு தங்களை நிலைநிறுத்தி  வாழும் தன்மை கொண்ட இவர்களது நிலையை நம்மைச் சுற்றி வாழும் இவர்களை நாம் அடையாளம் கண்டு மீட்டெடுக்க முன்வர வேண்டும். 


கல்வி மறுக்கப்படுகிறதா 


ஒரு குழந்தையின் அடிப்படை உரிமையான கல்வி பெறும் உரிமை இவர்களுக்குக் கிடைப்பதில்லை. வாழ்வாதாரத்தைத் தேடுவதிலேயே அவர்கள் தங்கள் வாழ்நாளைக் கழிக்க நேரிடுகிறது. அடிப்படைப்  பள்ளிக் கல்வியையே பெற இயலாதவர்களாகி விடுகின்றனர் தெருவோரக் குழந்தைகள். அப்படியிருக்க , அப்படியே அடிப்படைக் கல்வியைப்  பெற வாய்ப்பு கொடுத்தாலும் ,கல்வி வியாபாரம் ஆகி விட்ட இந்த நாட்களில் உயர் கல்வி என்பதெல்லாம் இவர்களுக்கு எட்டாக்கனி. இவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருவதை கண்கூடாகக் காணலாம் .


 உதாரணமாக ,இந்தியாவில் , 1989 இல் மும்பையில் தெருவோரக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 54.5 சதவீதத்தினர் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை என்றும் 66 சதவீதத்தினர் எழுத்தறிவற்றவர்கள் எனவும் கண்டறியப்பட்டது.மீண்டும் 2004 இல் நடத்தப்பட்ட ஆய்விலும் அக்குழந்தைகளின் கல்வியறிவு நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. அந்த ஆய்வறிக்கையின்படி, 60 சதவீதத்தினர் பள்ளிக்குச் செல்லாதவர்கள்; கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் எழுத்தறிவற்றவர்கள். 30 சதவீதம் பேர் தொடக்கக் கல்விப் பள்ளியிலும் 10 சதவீதம் நடுநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர்கள்.


அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (SSA) பல  வருடங்களுக்கு முன்பிருந்தே ( 2002 இலிருந்தே ) இது போன்றவருக்கு கல்வி தரப்படும் வழக்கம் உண்டு..  பள்ளி செல்லாக் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் வசிக்கும் ஊரிலுள்ள அரசுப் பள்ளிகளில் அவர்களை சேர்த்தலே  இது.  இந்த கல்வி வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசால் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது .ஆனாலும் இவர்களுக்கு கல்வி முழுமையாகக் கிடைப்பதில்லை என்பதே உண்மை.


ஆரோக்கியம் மற்றும் உளவியல் 


தெருவோரத்தில்  வசிக்கும்  குழந்தைகள் உடல் ஆரோக்கியத்திலும் நிறைவுடையவர்களாக இருப்பதில்லை . அதே போல சரியான வழிகாட்டிகளோ பாதுகாப்போ இல்லாததால் பலவிதமான உளவியல் சிக்கல்களுக்கும்  ஆளாகி வருகின்றனர். அவர்களது அன்றாட வாழ்க்கை மிக சிக்கலாகவும்   வேதனை

யாகவுமே கழிகிறது. குழந்தைகளுக்கான தனியார் அமைப்புகளோ அரசு அமைப்புகளோ 

பொது மக்களோ இவர்கள் மீது 

கவனம் எடுத்து வந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதே உண்மை. 


என்ன செய்யலாம் 


தெருவோரக் குழந்தைகள் பாதுகாப்பிற்கு 

ஐக்கிய நாட்டு சபையின் குழந்தைகள் உரிமைகள் மாநாடு மற்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் வகுத்துள்ள குழந்தைகளின் உரிமைகள் சட்டங்கள், கொள்கைகள், ஆட்சியமைப்புகள் ஆகியவை முறையாகப் பின்பற்றப்படுதலை உறுதிசெய்யப்பட வேண்டும் .அவர்களுக்கு இல்லங்கள் உருவாக்கி பாதுகாக்க அரசும் குழந்தைகள் அமைப்பும் செயல்பட வேண்டும் . கல்வி முழுமையாக அவர்களுக்கு வழங்குதல் உறுதி செய்யப்பட வேண்டும். பொது மக்களும் இதற்கு உறு துணையாக இருந்தால் தெருவோரக் குழந்தைகள் மற்ற குழந்தைகள் போலவே காப்பாற்றப்படுவர்.


உமா

ஆசிரியர்




 


No comments:

Post a Comment