Wednesday, 17 March 2021

இன்றைய சூழலில் கல்வி - 15

இன்றைய சூழலில் கல்வி - 15


ஜனவரி 19 ஆம் தேவி பள்ளிகள் திறப்பு  


பள்ளிக் கல்விச் சூழலில் 2021 ஆம் ஆண்டு தொடங்கியவுடன் துரிதமாக சில 

வரவேற்கத்தக்க மாற்றங்கள் நடந்து வருகின்றன . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் வசதிக்காக 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு கடந்த வாரத்தில் பெரும் விவாதமாக நிலவி வந்ததை அறிவோம் .


நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த பிப்ரவரி மாதம் பரவ ஆரம்பித்து மார்ச் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளிகள் , கல்லூரிகள் , பல்கலைக் கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டன என்பதும் கடந்த மாதம் வரை திறக்கப்படவில்லை என்பதும் நாம் அறிந்ததே . தற்போது பெரும்பாலான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட போதும் கல்வி நிறுவனங்கள் மட்டும் திறக்கப்படாமல் இருந்து , கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் துவங்கப்பட்டன. இணையம் வழியாகவே வகுப்புகள் நடந்து ,  தேர்வுகள் வைத்து, விடைத்தாள்களை விரைவு அஞ்சலில் அனுப்பக் கூறி  ஒரு புறம் பரபரப்பாக இயங்கி வந்தன . 


முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் 


இந்த நேரத்தில் கடந்த மாதம் பள்ளிகள் திறப்பதற்காகப் பெற்றோர்களிடம் முதல் முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நவம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற்றது , ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பு வேண்டாம் என்று கூறியதாலும் , பல்வேறு  தரப்புகளிலும் எதிர்ப்பு கிளம்பியதாலும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. 


சுவடின் வழியே 

ஆனால் நமது சுவடு இதழ் வழியாக பள்ளிகள் திறப்பதற்கு நாம் தொடர்ந்து கோரிக்கைகள்  வைத்தது குறித்து வாசிப்பாளர்களுக்குத் தெரியும். 


கடந்த சில வாரங்களுக்கு முன்பு 10 , 12 ஆம் வகுப்புகளுக்குப்  பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு குறித்த தகவல்களும் ஊடகங்களில் வெளிவந்தவண்ணம் இருக்க மாணவர் , பெற்றோர் தரப்பில் சற்றே கவலையும் பயமும் உருவானது. ஏனெனில் தனியார் பள்ளிகள் தொடர்ந்து இணைய வழி வகுப்புகளைக் கைக் கொண்டு மாணவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்தி வருகின்றனர் . ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கள யதார்த்தம் வேறாக இருந்து வருகிறது. இது குறித்தும் நாம் சுவடு இதழில்  தொடர்ந்து பேசி வருகிறோம். 


இரண்டாவது கருத்துக் கேட்புக் கூட்டம் 

இந்த சூழ்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப்  பள்ளி திறப்பது குறித்து 

 ஜனவரி 6 , 7 , 8 ஆம் தேதிகளில் பெற்றோர்களிடம் பள்ளிகள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டுமென அரசால் வழிகாட்டப்பட்டன. அவற்றின் அடிப்படையில் பள்ளிகள் நடத்தியக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்களின் கருத்து பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதே . தங்கள் குழந்தைகள் வீட்டில் ஆன் லைன் வகுப்புகளில் முறையாகக் கற்றலில் ஈடுபட வாய்ப்பில்லை என்றும் படிப்பை மறந்து போகும் சூழல் குழந்தைகளிடம் உருவாகியுள்ளது எனவும் பெற்றோர்கள் கவலையுடன் தெரிவித்தனர். அதோடு பொதுத் தேர்வுக்கு அவர்கள் தயாராக வேண்டுமெனில்  பள்ளிகள் தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் எனவும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். 


ஜனவரி 19 இல் பள்ளிகள் திறப்பு 


 மாணவர்களின்  கல்வி நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பைத்  தமிழக முதல்வர் 12 ஆம் தேதி வெளியிட்டுள்ளார்.  பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வகுப்பிற்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறை

களுக்கு உட்பட்டும் பள்ளிகள் செயல்பட அனுமதியளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிவகையாக வைட்டமின், மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க , சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 


அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 600 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் தொடங்க உள்ளன. சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 18 லட்சம் மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரப் போகின்றனர். 


இரு வேறு கருத்துகள் 


இந்த நேரத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று ஒரு பிரிவினரும் பள்ளிகள் திறப்பு தற்போது தேவையில்லை என்று மற்றொரு பிரிவினரும் தொடர்ந்து பேசி வருவதை ஊடகங்களில் காணலாம் . விவாத மேடைகளில் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர் , சுகாதாரத் துறை மருத்துவர் என திறக்க வேண்டாம் என்ற கருத்தை வலுவாகப் பதிவு செய்வதைப் பார்க்க முடிகிறது. இரு தரப்பிலும் அவரவர் தரப்பு நியாயங்களை முன் வைக்கின்றனர். 


பள்ளிகள் திறக்க வேண்டாம் என்பவர் கூறும் காரணங்கள் 


குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு கொரோனா  பரவல் ஏற்பட்டு விடக் கூடாது , அது சமூகப் பரவலாக மாறிவிடக் கூடாது என்கின்றனர். நமது குழந்தைகள்  பேருந்து போக்குவரத்து மற்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களில் வரும் போதும் நோய்த் தொற்று ஏற்படலாம் என்கின்றனர். மாணவர்களால் ஆசிரியர்களுக்கும்  தொற்று பரவிட வாய்ப்புள்ளது. பள்ளிகளில் சக  நண்பர்களுடன் கூட்டமாகக் கூடி வரும் வளர்ந்த மாணவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமம் , மாணவர்களது வாழிடங்களில் விழிப்புணர்வின்றி பெற்றோர்கள் இருப்பின் நோய்த் தொற்று விரைந்து பரவும் என்கின்றனர். பள்ளிகளில் கழிவறை வசதி குறைபாடுகளால் கூட நோய்த் தொற்று பரவும் என்கின்றனர் .அதோடு மாணவர், ஆசிரியர்  அனைவருக்கும் தடுப்பூசி போட்ட  பிறகு பள்ளிகளைத் திறக்கலாம் என்கின்றனர்.


பள்ளிகள் திறக்க வேண்டும் என்பவர் கூறும் காரணங்கள் 


ஏறக்குறைய 9 மாதங்கள் குழந்தைகள் பள்ளியை விட்டு தனித்து வாழ்ந்துள்ளனர். 10 , 12 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என அறிவித்தால் , குறைந்தபட்ச கற்பித்தல் - கற்றலாவது அவர்களுக்கு அவசியத் தேவை. தனியார் பள்ளி மாணவர்களுக்கோ தொடர் சூம் (Z00M)வகுப்புகளால், ஏதோ ஒரு ஆன்லைன் கல்வியால்  அன்றாடம் ஆசிரியர் மாணவர் சந்திப்பு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. பாடம் சார்ந்து அந்தக் குழந்தைகள் ஓரளவேனும் பயமின்றி தைரியமாக உள்ளனர். ஆனால் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கதைகளை ஏற்கனவே பல தொடர்களில் நாம் விளக்கியுள்ளோம்  .இணைய வசதி இல்லை , பெற்றோருக்கு வேலை இல்லாததால் நெட் பேக் போட முடியவில்லை, டிவைஸ் கூட இல்லை இது ஒரு புறம். திருப்பூர் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளியிலும் மாணவர்கள் தொடர்பிலில்லை , காரணம் பனியன் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குப் போய் பல மாதங்கள் ஆயிற்றாம். திருப்பூரில் பனியன் தொழிற்சாலை என்றால் விருதுநகரில் தீப்பெட்டி தொழிற்சாலை , ஈரோட்டில் நெசவு , மசாலா நிறுவனங்கள் இப்படி மாவட்டத்திற்கு மாவட்டம் நாம் கூறிக் கொண்டே போகலாம் .எத்தனையோ பெண் குழந்தைகள் பருவப் பிரச்சனைகளால் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிப் போன கதைகளை ஒவ்வொரு பள்ளி ஆசிரியரும் வேதனையுடன் பகிர்கின்றனர். வீட்டில் பெண் குழந்தைகளை வைத்திருக்க முடியாமல் திருமணம் செய்து கொடுத்த பெற்றோரின் கதைகள் , இது மட்டுமல்ல கிராமங்களில் ஒரு வித வாழியல் சூழல் , பழங்குடியினக் குழந்தைகள் முற்றிலும் வேறுபட்ட வாழியல் சூழல் . போதை மருந்துக்கு ஆளான குழந்தைகள் என ஒரு புறம். இடைநிற்றல் என்று சொல்ல முடியாமல் EMIS தளத்தில் மாணவர் பெயர் இருந்தும் இடைநிற்றலாகிப் போன கதைகள் என பள்ளி திறக்க ஏராளமான உண்மைக் கதைகளைக் கூறலாம். வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் குழந்தைகளும் , குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிட்ட மாணவர்களும்  மனதளவில் கூட உளவியல் சார்ந்த சிக்கல்களை அனுபவிப்பதை நாம் நேரடியாகக் காண்கிறோம். புள்ளி விபரங்களும் நிரூபிக்கின்றன .

கடந்த 3 மாதங்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக தேசியக் குழந்தைகள் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகள் 1600 என்று தகவல். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் . 


ஏற்கனவே வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர்களைப் பள்ளிக்குள் கொண்டு வருவதே மிகப் பெரிய சவாலாக இருக்கும் . இன்னும் நாட்களைக் கடத்தினால் கை நழுவிப் போனக் குழந்தைகளைக் காப்பாற்ற முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்படுவோம் - சமூக நீதி , குழந்தைப் பாதுகாப்பு என எல்லாவற்றையும் காப்பாற்ற வேண்டுமெனில் பள்ளிகளைத் திறப்பதே உடனடித் தேவை .


சுகாதாரத் துறை மருத்துவர்களின் வழிகாட்டுதலில், தகுந்த பாதுகாப்பு வசதிகளுடன் , சமூக இடைவெளியுடன் பள்ளிகளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க வைத்தல் தான் இன்றைய சூழலில் கல்விக்கான  சரியான தீர்வாக இருக்கும் என்பதில் கடுகளவும் ஐயமில்லை. மாற்று வகுப்பறை , பகுதி நேர வகுப்பு என ஏற்கனவே நம் விவாதத்தில் இடம் பெற்றுள்ள முறைகளையும் இணைத்துக் கொள்ளலாம். 

No comments:

Post a Comment