புதிய தேசியக் கல்விக் கொள்கையின் மறைந்திருக்கும் பாதக அடுக்குகள் .
தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ
திரும்பத் திரும்ப வாசித்துப் பார்த்தால் நமது குழந்தைகளுக்கு ஏற்பில்லாத கூறுகளை மட்டுமே அது உள்ளடக்கியதாக இருப்பதை ஆழமாக உணர முடிகிறது. ஆனால் பிரதமரோ செப்டம்பர் 7 அன்று இது குறித்து ஆற்றிய கருத்தரங்க உரையில் , பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் அனைவரும் இக்கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாகப் பதிவு செய்திருக்கிறார். இலட்சியக் கனவுகளை அடையும் வழியாகவும் இக்கல்விக் கொள்கை இருப்பதாகப் பிரகடனம் செய்திருக்கிறார்.
எல்லோருக்குமான சம வாய்ப்புள்ள கல்வி என்பது கனவாகவே போய்விடும் என்பதாகவே கொள்கையின் ஒவ்வொரு பிரிவும் நமக்கு உணர்த்துவதால் தான் இக்கல்விக் கொள்கையை நாம் எதிர்க்கிறோம். கொரோனா கால சூழலில் நாடெங்கிலும் குழந்தைத் தொழிலாளர்கள் லட்சக் கணக்கில் உருவாகி வருகின்றனர் என்ற வேதனையை சற்றும் சிந்திக்காமல் பிரதமர் தனது உரையில் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அச்சுப் பிசகாமல் நடைமுறைப் படுத்த வேண்டும் எனக் கூறியிருப்பதன் பொருள் என்ன ? மாநில அரசை கவனத்தில் கொள்ளாமல் அந்தந்த மாநில ஆளுநர்களது வழியாக நிறைவேற்றத் தகுந்த பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின்னணி என்னவாக இருக்கும் ?
பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை
3 , 5 , 8 ஆம் வகுப்புகளில் தேர்வு என்பது
எல்லோருடைய எதிர்ப்புகளுக்கும் மையமாக இக்கல்விக் கொள்கை தரும் அழுத்தம் என்றால் மிகையாகாது. கல்வி உரிமைச் சட்டம் சொல்லும் நான் டிடென்ஷன் பாலிசி (Non Detention policy)குறித்து இக்கல்விக் கொள்கையில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா என்பதும் யோசிக்க வேண்டும் . இதன் மற்றொரு பக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் , தமிழகத்தின் பள்ளிக் கல்வி வரலாற்றை இருபது வருடங்கள் பின்னோக்கி நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசுப் பள்ளிகள் ஊர்தோறும் நிறைந்து பரவிக் கிடந்த நிலை இருந்த காலத்தில் கூட ஒரு தலைமுறை குழந்தைகள் கல்வி மறுக்கப்பட்டு வெளித் தள்ளப்பட்ட நிலை இருந்து வந்ததை நாம் மறுக்க முடியாது. 35 மதிப்பெண்கள் ஒரு பாடத்தில் பெறவில்லை என்றாலும் ஒரு மாணவி / மாணவன் அதே வகுப்பில் தேக்கம் பெற்றவராகத் தேர்ச்சி இல்லை (fail) என முத்திரைக் குத்தப்பட்ட நிலை 2000 ஆண்டுகளின் பல ஆண்டுகள் கூட தொடர்ச்சியாக நிகழ்ந்து வந்தது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ( SSA) தொடர் முயற்சிகளால் தொடக்க வகுப்புகளுக்கு
அப்போது கொண்டு வரப்பட்ட கற்றல் அட்டைகள் பயன்படுத்தும் ( CARDS) செயல்வழிக் கற்றல் முறை( ABL-Active based learning) ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதோடு 6-8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ALM Active learning method முறையும் அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரையும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளாக அமைந்தன . மிகச் சில பள்ளிகளில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மாணவரைத் தேக்கம் ( fail) பெற வைத்தனர். அந்த சமயத்தில் 2010 இல் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்த கல்வி உரிமைச் சட்டம் 6 - 14 வயது வரை கட்டாயத் தேர்ச்சி பற்றிக் கூறியது. ஏற்கனவே நாம் கூறியபடி 8 ஆம் வகுப்பு வரை பின்பற்றப்பட்ட கற்பித்தல் முறைகள் இதற்கு வழிகாட்டியாக அமைந்தன. அதைத் தொடர்ந்து நமது மாநிலத்தில் 2010 இலேயே சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்தன. 2012 இல் சிறப்பான ஒரு திருப்பம் முப்பருவப் பாட முறையும் அதோடு இணைந்த தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE - Continuous And Comprehensive Evaluation)
முறையும் அறிமுகப்படுத்துகிறோம். மேலும் இது
(NCF ) தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு 2005 இன் முன்மொழிவின்படியும் கல்வி உரிமைச் சட்டத்தின் படியும் உருவான மதிப்பீட்டு முறை என்பதை நாம் மறக்கக் கூடாது. இதன் விளைவாக கடந்த 8 ஆண்டுகளாகவே தமிழகப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லாமல் போனது என்பது தான் உண்மை. ஏனெனில் எந்த ஒரு குழந்தையும் 8 ஆம் வகுப்பு வரை தேக்கமில்லாமல் தனது கல்வியைத் தொடர வாய்ப்பு உருவானது. அதோடு 9 ஆம் வகுப்பில் கூட கடந்த 10 ஆண்டுகளாகவே மறு தேர்வு முறை நடைமுறையில் இருந்தது. அதாவது 9 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவருக்கு ஜூன் மாதமே, 9 ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத பாடத்தில் மறு தேர்வு வைத்து கல்வியாண்டின் ஆரம்பித்திலேயே பத்தாம் வகுப்பிற்குள் ஈர்த்துக் கொள்வது என்பது தான் நடைமுறை .இப்படியாக தமிழகத்தைப் பொறுத்த வரை பத்தாம் வகுப்பு வரை பெரும்பாலும் மாணவர் இடைநிற்றல் என்பதே இல்லாத சூழல் உருவானது .அதனைத் தொடர்ந்து பெரும்பாலான குழந்தைகள் மேல்நிலைக் கல்வியை முடிப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் தமிழகப் பள்ளிக் கல்வியின் முக்கிய அம்சங்களாக இருந்து வந்தன. இன்றும் அதன் தொடர்ச்சியாகவே உயர் கல்வி பெறும் மாணவர் எண்ணிக்கை சதவீதம் உயர்ந்தது என்பதை கல்வியாளர்களும் பள்ளி ஆசிரியர்களும் நன்கு அறிவர்.
ஆனால் புதிய தேசியக் கல்விக் கொள்கை எப்போது 3 , 5 , 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் குறித்து பேசுவதோ அங்கு கல்வி உரிமைச் சட்டத்தின் 8 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் ஒரு குழந்தையை வைத்திருக்கக் கூடாது என்ற கூறு நீர்த்துப் போகிறது. நான் டிடென்ஷன் பாலிசி புறந்தள்ளும் சூழல் இது.
தேசியக் கலைத் திட்ட வடிவமைப்பு - 2005 , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE ) அனைத்திற்கும் அர்த்தமற்ற சூழல் உருவாகிறது.
நாம் மேலே குறிப்பிட்ட கற்பித்தல் முறைகளிலும் , முப்பருவக் கல்வி முறை , மதிப்பீட்டு முறை இவை அனைத்திலும் இடைவெளிகளும் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை . நடைமுறை சிக்கல்களும் உண்டு. அவற்றை சீர் படுத்த வேண்டுமே தவிர இவற்றைப் புறந்தள்ளி விட்டு புதிய தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டுவது எந்தக் கோணத்தில் சரியானது எனத் தெரியவில்லை.
அதே போல பள்ளிக் கல்வியில் 6 - 14 வயது வரை குழந்தைகளது கட்டாயக் கல்வி பற்றி கல்வி உரிமைச் சட்டம் பேசுகிறது , புதிய தேசியக் கல்விக் கொள்கையோ 3 வயது முதல் அனைவரையும் முறையானப் பள்ளிக் கல்வி அமைப்பிற்குள் கொண்டு வருவது குறித்து பேசுகிறது. எனில் , கல்வி உரிமைச் சட்டம் குறித்தான கூறுகளை நீர்த்துப் போக இக்கல்விக் கொள்கை வழிகோலுமா என்பதும் நமக்கான ஐயம். அதை வெளிப்படையாகவும் கல்விக் கொள்கை பேசவில்லை என்பது தான் நிதர்சனம் .
அடுத்து மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு மற்ற எல்லா உயர்கல்விக்கும் உதாரணமாகக் கல்விக் கொள்கையை வைத்துப் பார்க்கலாம். ஏற்கனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப் போராடிக் கொண்டு இருக்கும் நாம் கண் எதிரிலேயே மற்ற எல்லா உயர் கல்விப் படிப்புகளுக்கும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்தைத் தருகிறது இக்கல்விக் கொள்கை . +2 வகுப்பு முடிந்த ஒவ்வொரு குழந்தையும் கல்லூரிக்குள் நுழைய புதியதாக ஒரு நுழைவுத் தேர்வை சந்திக்க வேண்டும் என்பது பள்ளிக் கல்வியான 15 வருடத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. பள்ளிக் கல்வியின் கற்றல் அடைவுகள் குறித்து எவ்வித சிந்தனையுமில்லாமல் தேசியத் தேர்வு வாரியம் (National Testing Agency) நிர்ணயிக்கும் எல்லைகள் எதற்கு ? மருத்துவக் கல்வியை பணக்காரர் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளியது போல எல்லா உயர் கல்வியும் பணம் படைத்தவருக்கு மட்டும் என்ற சூழலை உருவாக்கி கல்வியை எல்லோருக்குமானதாக்கத் தவறும் மிகப் பெரிய தவறை செய்யும் கல்விக் கொள்கையாகத் தான் இது அமைந்துள்ளது -
விக்னேஷ்வரன் , ஆதித்யா , மோதிலால் , ஜோதி ஸ்ரீ துர்கா ஆகிய நால்வரும் நீட் தேர்வின் பயத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் . புதிய தேசியக் கல்விக் கொள்கை அமலுக்கு வர வர எத்தனை ஆயிரக்கணக்கான மாணவர்களை இழக்கப் போகிறோம் என்ற அச்சத்தையும் இச்சூழல் விதைத்துள்ளது. ஆகவே தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் விபரீதங்கள் தோண்டத் தோண்ட கல்வியின் பாதை இருளின் உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதே உண்மை. தமிழகக் கல்வியின் பாதை வெளிச்சத்திற்கு வர வேண்டுமெனில் இக்கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
No comments:
Post a Comment