பள்ளிகளின் வளர்ச்சியில் தலைமையாசிரியரின் பங்கு
வகுப்பறைகளின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என்றால் பள்ளிகளின் வெற்றிக்கு தலைமையாசிரியர் தான் முக்கியக் காரணமாகிறார் என்றால் மிகையாகாது.
கடந்த வாரம் இந்து தமிழ் திசையின் அன்பா சிரியர் விருது விழா நடந்தது. அதில் பல மாவட்டங்களிலிருந்து தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தன் பள்ளியை தமிழகத்திலேயே அதிக மாணவர் சேர்க்கையுள்ள பள்ளியாக மாற்றியிருக்கும் ஒரு தலைமையாசிரியரைக் காண முடிந்தது. இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தென்னவன். தனது பள்ளிக்காக சமூகத்திடமிருந்து 75 லட்ச ரூபாய் பெற்று செலவழித்து மேம்படுத்துமளவிற்கு சிந்தித்துள்ளார் என்பது சிறப்பு. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் தங்கராஜ் தனது பள்ளியில் சேரும் ஒவ்வொரு குழந்தையும் முதல் இரண்டு வகுப்புகளிலேயே மொழியை வாசிக்கும் திறனில் தேர்ச்சி பெற வைப்பதோடு ஊர் மக்களின் ஆதரவும் பெற்றுள்ளார் . ஒரு காரணம் , ஆசிரியர்களுக்கான கற்பித்தல் சாரா பணிகளுக்கு தன் ஊதியத்தில் இருந்து ஒரு தொகையை மாதா மாதம் செலவழித்து ஒருவரை பள்ளியில் ஊழியராக நியமித்து அப்பணிகளை செய்ய வகுப்பறைகளில் எப்போதும் ஆசிரியர் மாணவருடன் இருக்க வழி செய்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலைமையாசிரியர் வீரமணி விருது பெற தனது பள்ளிக் குழந்தைகள் 4 பேரையும் அழைத்து வந்ததோடு நில்லாமல் , விழாமேடையிலேயே தனது பள்ளியில் மாணவர்க்குத் தேவைப்படும் கூடுதல் வகுப்பறைக்கு மனுவைத் தர நமது கல்வி அமைச்சரும் உடனடியாக அதற்கு துறை வழியாக உதவி செய்ய உறுதி கொடுத்தார்.
இவ்வாறு மாணவர் நலன் விரும்பி சற்று கூடுதல் அக்கறையுடன் செயல்படும் தலைமையாசிரியர் தமிழகம் முழுக்க ஏராளமாக இருந்தாலும் நூற்றுக்கணக்கில் தான் இருக்கின்றனர். ஆனால் ஆயிரக்கணக்கில் இவர்கள் உருவாக வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள்
பள்ளி வளர்ச்சியில் தலைமை ஆசிரியர்களின் பங்கு என்பது நிர்வாகம் மற்றும் கற்றல் கற்பித்தல் இரண்டையும் இரு குதிரைகள் பூட்டிய வண்டியை சீராக ஓட்டிச் செல்வது போல் மிகத் துல்லியமாக செய்ய வேண்டிய பணி. கற்றல் - கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்கள் , மாணவர்கள் , கற்பித்தல் சாராத பணிகளைச் செய்யும் பணியாளர்கள் , பெற்றோர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதுடன் தலைமைப் பண்புகளுடன் விளங்குவதாலேயே தலைமையாசிரியர்கள் ஆகின்றனர்.
தொடக்க , நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாவட்ட ஒன்றியங்களுக்குள் ஆசிரியர் பணியின் அடுத்த நிலையாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைக்கின்றது. கல்வித் தகுதி ஒரு புறம் இருந்தாலும் நிர்வாகம் சார்ந்த பணி அனுபவங்
களையும் கணக்கில் கொண்டு தான் தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுகின்றனர் .
அதே போல , உயர்நிலை , மேல்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியராகப் பொறுப்புக்கு வருபவர்கள் மாநிலம் முழுவதுக்குமான ஒட்டு மொத்த ஆசிரியர் பணி அனுபவ வருடங்களை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு பெறுபவர்களாகவே இருப்பர்.
தீர்வு காண வேண்டிய இடத்தில் இவர்கள்
ஒரு குழந்தை குறிப்பிட்ட பாடத்தில் திறன் வெளிப்படாமல் மெல்லக் கற்கும் சூழல் இருப்பின் அப்பாடத்த்தை கற்பிக்கும் ஆசிரியர் பொறுப்பேற்று தீர்வுகளை நோக்கி நகரலாம். ஆனால் ஒரு பள்ளியில் கட்டமைப்பு சரியில்லை , கழிப்பறை வசதி இல்லை , கற்றல் கற்பித்தலில் பிரச்சனை , ஆசிரியர்கள் மாணவர் உறவு மேம்படவில்லை ,பெற்றோருடனான பள்ளியின் உறவில் சிக்கல் இப்படி பல கோணங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பும் கடமையும் தலைமையாசிரியர்களுக்குத்தான் உண்டு. தன்னுடன் ஆசிரியர்களின் கருத்துகளையும் இணைத்து அனைவருடனும் கலந்துரையாடி தீர்வு காணும் தலைமையாசிரியர்கள் பணி புரியும் பள்ளிகள் மக்கள் விரும்பும் பள்ளிகளாக அசத்திக் கொண்டு தான் இருக்கின்றன.
தேனி மாவட்டத்தில் சில்வார் பட்டி என்ற ஊரில் அமைந்துள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் அவர்களை அங்கு 1700 குழந்தைகளும் அப்பா என்று தான் அழைக்கின்றனர் .ஒரே வருடத்தில் பள்ளியின் சேர்க்கையில் 700 மாணவர்களை அதிகரிக்க இவர் எடுத்துக் கொண்ட முயற்சியில் இவரது தலைமைப் பண்புகள் எவ்வளவு ஆழமாக செயலாற்றியுள்ளன என்பது புரியும். பள்ளியின் ஒவ்வொரு இடமும் புத்துணர்வுடன் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன.
சமூக விரோதிகளின் கூடமாக இருந்த பள்ளி வளாகத்தை மக்கள் நேசிக்கும் பள்ளி வளாகமாக மாற்றிக் காட்டி இருக்கிறார் சென்னை அருகே முகப்பேர் பகுதி புளிய மர அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி. தெருவோரக் குழந்தைகள் படிக்கும் பள்ளியான இங்கு அவர்களைக் குளிக்க வைத்து அனைத்து குழந்தைகளுக்கும் சமூக ஆர்வலர் பெற்றோர் உள்ளிட்டோரின் உதவியுடன் காலை உணவு அளித்து வருகிறார் இவர். அருகில் உள்ள குடியிருப்புகளும் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்களுக்கும் மிகப் பிடித்தமான பள்ளியாயிற்று புளிய மரப்பள்ளி .
பள்ளி கட்டமைப்பு , கணினித் திட்டம் உள்ளிட்ட பல தேவைகளுக்கும் , தன் உதவி ஆசிரியர்களை அழைத்துக் கொண்டு வீடு வீடாக கையேந்தி புரவலர் நிதியாகப் பல லட்சங்களை ஒரே மாதத்தில் சேர்த்தி , ஆசிரியர் அனைவருடனும் நல்லுறவு கொண்டு ஊர் மெச்ச பள்ளியை உயர்த்தும் திருப்பூர் மாவட்ட ஊத்துக் குளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி .
எங்கோ ஒரு கிராமத்து பள்ளி என நினைக்காமல் சர்வதேச அளவில் பல வழிகளில் தனது பள்ளியை உயர்த்தி தமிழகத்திலேயே முதல் முறையாக ஜப்பான் நாட்டு 5 எஸ் சான்றைப் பெற வைத்த கரூர் மாவட்ட பரமத்தி தலைமை ஆசிரியர் செல்வக் கண்ணன் .
இப்படியாக , தங்கள் பள்ளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகளை நோக்கிய தேடலில் உள்ள தலைமை ஆசிரியர்கள் தமிழகம் முழுக்க விரவி உள்ளனர்.
தலைமைப் பண்பை மறந்த தலைமைகள்
தனது பள்ளி ஆசிரியர்கள் செய்யும் நற்செயல்களுக்குத் தடை போடுபவர்கள் , ஆசிரியர்கள் கற்பித்தலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தவில்லையெனில் கண்டும் காணாமலும் போகும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியருடனான தங்கள் உறவை சிக்கலுக்கு உட்படுத்தி , தலைமையாசிரியர் என்றாலே அதிகாரத் தனத்தைக் காட்டி அச்சப்பட வைக்கும் தலைமை ஆசிரியர்கள் போன்றோர் பள்ளிகளின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவர்கள்.
ஆசிரியர்களுக்கு சலுகை செய்வதாக எண்ணி , கற்பித்தல் கற்றல் செயல்பாடுகளில் தொய்வு காட்டுபவரை அரவணைக்கும் தலைமை ஆசிரியர்கள், பல தரப்பட்ட வழிகளில் குழந்தைகள் மீது சொற்களால் , செயல்களால் வன்முறை செலுத்தும் ஆசிரியர்களை கண்டிக்காத தலைமை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கும் பள்ளி வளர்ச்சிக்கும் துரோகம் இழைப்பவராவர்.
குழந்தைகளது தேவையை உணர்ந்து பள்ளிக்குள் அவசியமான உதவிகளை செய்ய முயற்சி செய்யாமல் அரசின் மீது பழியை போட்டு தன் கடமைகளை மறக்கும் தலைமைகளும் அந்தப் பொறுப்புக்கு தகுதியற்றவர்களாகி விடுகின்றனர் .
அதே போல நிர்வாக சுமைகளை ஆசிரியர்களுக்கு பகிர்ந்து கொடுத்து வகுப்பறைகளை வெற்றிடமாக மாற்றி குழந்தைகளின் கல்வி மறுக்கப்பட காரணமாகும் தலைமைகளும் ஏற்புடையவர்கள் அல்லர் .
மற்றொரு முக்கிய பண்பு , ஆசிரியர்களுக்கான ஊதியம் உட்பட மற்ற பணப் பலன்களை பெற்றுத் தருவது மேல்நிலை , உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களின் கடமை. ஆனால் பல பள்ளிகளில் ஆசிரியர்களது நிலுவை பணப் பலன்கள் , கடன் பெற்றுத் தருதல் போன்றவற்றிற்கு அடுத்தடுத்த நிலையிலிருக்கும் அலுவலகப் பணியாளர்களுக்கு பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க ,ஆசிரியர்களால் கையூட்டு தரப்படுவதை ஊக்குவிக்கும் அல்லது அது குறித்து கவனமின்றி கடந்து போகும் பண்புகள் தலைமைப் பண்புகள் அல்ல.
ஆசிரியர்கள் தங்கள் பணிப்பதிவேடு பராமரிப்பு குறித்து தகுந்த அறிவு இல்லாமல் இருப்பர். அதை கவனிக்கவே அலுவலகப் பணியாளர்கள் தலைமையின் கீழ் பணியாற்றுவர். ஆனால் பல வருடங்களாகக் கூட ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டை சரிபார்க்காது அந்தத் தவறை ஆசிரியர் தலைமேல் சுமத்தும் தலைமைகளும் இருக்கின்றனர். இது போன்ற தருணங்களில் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி , வேறு வேறு ஊர்களுக்கு பழைய பள்ளிகளை நாடுவதும் வகுப்பறை கற்பித்தல் பாதிக்கப்படுவதும் கூட நிகழ்கிறது.
ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் பாகுபாடு காட்டும் தலைமைகள் , இதைப் பயன்படுத்தி வேலைகளை ஏமாற்றும் ஆசிரியர்கள் , பாதிக்கப்படும் நல் ஆசிரியர்கள், சாதிப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் தலைமைகள் என பல கதைகள் ஒவ்வொரு பள்ளிக்குள்ளும் உண்டு.
தன் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியருக்கு இன்ன பிற திறன்கள் உண்டு என அறியாத , அறிந்து கொள்ள மறுக்கும் தலைமைகள் நமது அரசுப் பள்ளிகளில் அதிகம் பணியாற்றுவது வேதனையே.
அன்றாடம் பள்ளி வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவரிடையே பேசாத தலைமைகள் , வகுப்பறைகளையே பார்வையிடாத தலைமைகள் , எல்லா கல்விநிதிகளிலும் சுரண்டும் தலைமைகள் , நூலகம் , தொழில்நுட்ப வகுப்பறைகள் உள்பட பல அரசுத் திட்டங்களையும் வெறும் பதிவேடாகப் பராமரிக்கும் தலைமைகள் , பள்ளி வளர்ச்சியில் பெற்றோர்கள், முன்னால் மாணவர்களது நியாயமான தலையீட்டை வரவேற்காத தலைமைகள் என தகுதியற்ற தலைமைகளும் பரவி உள்ளனர்.
என்ன செய்யலாம்
அரசு தரப்பில் கல்வித் துறை வழியே தரமான கல்விக்காக பல முன்னெடுப்புகளை , நிதி ஒதுக்கீடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. அவற்றை எல்லாம் முறையாக பள்ளிகளில் நடைமுறைப் படுத்தும் மனப்பான்மையும் ஆர்வமும் ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் உருவாக வேண்டும் .ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் நம் பள்ளி நம் பெருமை என்பதை உணர வேண்டும். கற்பித்தல் சுதந்திரத்தை பள்ளிக்குள் ஆசிரியர்களுக்கு வழங்கி மாணவருடன் உரையாடி ஆசிரியர்களை குறித்து அறிந்து கொள்வதும் தேவைப்படின் வழிகாட்டுவதும் அவசியம்.
தன் பள்ளியில் ஆசிரியருடன் நல்லுறவு பேணவும் அண்டை பள்ளிகளில் நல்லுறவு பேணவும் , சமூகத்துடன் பள்ளியை இணைக்கவும் ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் தயாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக ஆசிரியர்களுக்கும் , மாணவர்களுக்கும் நடை , உடை , பேச்சு , தலைமைப் பண்புகளில் முன் மாதிரியாகத் திகழ வேண்டும். குழந்தை உளவியலோடு இணைந்த பள்ளி நடைமுறை உளவியல் அறிந்து பணியாற்ற தலைமை ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது அரசு கட்டாயம் பயிற்சி தர வேண்டும்.
பிரச்சனைகளைக் களைய அனைவரது உதவியுடனும் வழிகளைக் கண்டறிய முயற்சிப்பது தான் சிறந்த தலைமைப் பண்பு. எல்லாவற்றிலும் அப்டேட்டாக இருந்து பள்ளிகளின் வளர்ச்சிக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும் தலைமை ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளில் ஒரு போதும் மாணவர் எண்ணிக்கை குறைவதில்லை. மக்களிடம் தோற்றுப் போவதுமில்லை. தலைமை ஆசிரியர் என்பதை பதவியாகப் பார்க்காமல் பொறுப்பாக உணர ஆரம்பித்தால் நல் மாற்றங்கள் சாத்தியம் .
உமா
.
No comments:
Post a Comment