Thursday, 18 March 2021


ஆன்லைன் கல்வி ஒரு பார்வை 


ஜூலை  மாதம் முடியப் போகிறது. வழக்கமான கல்வியாண்டு என்றால் பள்ளிகள் இயங்கி பாடநூல்கள் வழங்கப்பட்டு கற்றல் - கற்பித்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் பள்ளிகள் திறக்கப் படாமல் போனதால் , அதற்கு மாற்றாக ஆன் லைன் வகுப்புகளை  கையிலெடுத்தன    தனியார் பள்ளிகள் .


கடந்த ஏப்ரல் , மே மாதங்களிலேயே நீட்  (NEET) வகுப்புகளுக்காகவும் , 12 ஆம் வகுப்புகளுக்காகவும் ஆன் லைன் வகுப்புகளை துவக்கி மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் மன அழுத்தத்தை உருவாக்க ஆரம்பித்தன தனியார் பள்ளிகள் . 


தற்போது,  முதல் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை பள்ளி நடைமுறை போலவே காலை முதல் மாலை வரை ஆன் லைன் வகுப்புகள் ஊரெங்கிலும் பிரபலமாகி வருவது ஒரு புறம். 


கல்வி என்பதை ஒரு  கருவி (Device) வழியே தர முடியுமா ? ஆசிரியர் - மாணவர் நேரடிக் கற்பித்தல் இல்லை என்றால் கற்றல் நடைபெறுமா ? இப்படி ஏராளமான கேள்விகள் ஒருபுறம். வீடுகளே குழந்தைகளுக்  பள்ளிக் கூடங்களாகவும்  பெற்றோருக்கு வேலை பார்க்கும் அலுவலகங்களாகவும் மாறிப் போய் மனதளவில் சிக்கல் உருவாகி இயல்பான உறவை சிதைக்கும் வன்முறை மறுபுறம். பெற்றோர்கள் புலம்பலையும் மாணவர் சலிப்புகளையும்  காது கொடுக்க முடியவில்லை. 


பல பள்ளிகளில் ஆன் லைன் வகுப்புகளுக்கான இணைப்புகளைத் தராமல்  குழந்தைகளது கல்விக் கட்டணம் முழுமையாகக் கட்டப்பட்டால் தான் சேர்த்துக் கொள்ளும் நிலை , இதையொட்டிய செய்திகள் , புகார்கள் என ஒரு புறம் பூதாகரமாகப்  பிரச்சனைகள் உருவெடுத்துள்ளன .


இந்த ஆன் லைன் வகுப்புகளால் தொடர்ந்து பல விபரீதங்கள் , தனக்கு ஆன் லைன் வசதியில் கற்றல் சூழல் கிடைக்காததால் கேரளாவில் 14 வயது மாணவி தற்கொலையில் ஆரம்பித்து தமிழகத்திலும் இப்படியான நிகழ்வுகள் நம்மை பயமுறுத்தின. அது மட்டுமா , கோவையில் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் ஃபோனில் ஆன் லைன் வகுப்புகளை கவனிக்காமல் பாலியல் காணொளிகளைக் கண்டு நிஜ வாழ்க்கையில் பரிசோதிக்க அவர்கள் வீட்டின் மாடியில் குடியிருந்த குடும்பத்தில் ஒரு மாணவியை நாசம் செய்த செய்திகள் வரை நம்மை செய்வதறியாது திகைக்க வைக்கின்றன. அடுத்து,ஆன் லைன் வகுப்புக்காக  தனது மகனிடம் ஸ்மார்ட் ஃபோன் தந்து பப்ஜி விளையாட்டின் அப்டேட்டுக்காக தனது வாழ்நாள் சேமிப்பான 16 லட்சம் ரூபாயை இழந்த தந்தையின் துயரம் பற்றி சொல்லவே  வேண்டாம். 


கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் ஆன் லைன் வகுப்புகளைத்  தடை செய்த நீதிமன்ற வழக்குகளும் நாம் கவனிக்க வேண்டியவை .


ஓரளவு வசதி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் கைகளில் அலைபேசி / கணினி வசதி இருப்பதால் பள்ளிகளுடன் மாணவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று இதை நேர்மறையாக எடுத்துக் கொள்வதா (அ) இதன் மோசமான விளைவுகளை வைத்து இணைய வகுப்புகளை ஆபத்து என எதிர்மறையாக அணுகுவதா என்று குழப்பத்தில் பெற்றோர்கள் இருக்கின்றனர். 


அரசுப் பள்ளிகளில் இணைய வழி வகுப்புகள்  சாத்தியமா 


தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் 90% குழந்தைகள் பெரும்பாலும் ஆன்ட்ராய்டு வசதியுள்ள அலைபேசி , கணினி என எந்த வசதியும் இல்லாதவர்கள். அப்படியே வைத்திருந்தாலும் 

இணைய வழிக் கல்விக்கு தினம் அவர்களது பெற்றோர்களால் ரீசார்ஜ் செய்ய பொருளாதார வசதி இருக்கிறதா என்பது கேள்விக்குறி. ஊரடங்கால் அன்றாடம் வேலையே இல்லாமல் வருமானமின்றி இருக்கும் குடும்பங்கள் இந்த வசதிகளை எப்படி ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது எல்லோரும் முன் வைக்கும் வினா. 


அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசும் போது பெரும்பாலும் தங்களை குழந்தைகளிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவதாகக் கூறுகின்றனர். வாட்ஸ் அப் வழியே பாடத் தொடர்புடையவற்றை அனுப்பி கற்றலில் ஈடுபடுத்தும் பணியைச் செய்து வருவதாகவும் கூறும் இவர்கள் , அந்த வசதி வெறும் 20% குழந்தைகளே பெற்றுள்ளனர் என்பதையும் வருத்தத்துடன் பகிர்கின்றனர். 


சத்துணவுக்காக பள்ளிக்கு வரும்  பல லட்சம் குழந்தைகள்  , மலைவாழ் பழங்குடியினப் பள்ளிகளில் படிக்கும் மலைப் பகுதி குழந்தைகள் , ஊரடங்கால் குழந்தைத் தொழிலாளராக மாறியுள்ள குழந்தைகள் என பல தரப்பட்ட குழந்தைகளை உள்ளடக்கிய அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி எப்படி சாத்தியம் என்பது திரும்பத் திரும்ப நம் முன் எழும் சந்தேகங்கள்.


உலக நாடுகளில் பின்லாந்து , கனடா , அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் தற்போதைய சூழலில்  ஆன் லைன் கல்வியை முன்னெடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் ஊரடங்கு சட்டம் போடுவதற்கு முன் திட்டமிட்டு  அதற்கான ஏற்பாடுகளை செய்து ஒரு நாளில் சில மணி நேரங்களில் மட்டும் ஆன் லைன் வழியே குழந்தைகளை கற்றல் - கற்பித்தலில் ஈடுபடுத்தியுள்ளனர். முக்கியக் காரணம் அங்கு ஒரே கல்வி முறை -பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய வழிக் கல்வி வெற்றி பெற்றுள்ளது. 


இந்தியாவில் கேரள மாநிலம் தொலைக்காட்சி முறை வழியே இணையவழிக் கல்வியை முன்னெடுத்துள்ளது. ஆனால் நமக்கு மாநில அரசுப் பள்ளிகள் , தனியார் பள்ளிகள் , மத்திய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் , பன்னாட்டு பாடத்திட்டத்தைப்  பின்பற்றும்  பள்ளிகள்  என  பல பிரிவுகளானப்  பள்ளிகள் அங்கு பயிலும் குழந்தைகள் என வேறுபட்ட சூழலில் ஆன் லைன் கல்வி மிகப் பெரும் பிரச்சனையாக உள்ளது.


இப்படிப்பட்ட சூழலில் தான் அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் துவங்க உள்ளது என்ற அறிவிப்பு. உடனடியாக ஊடகங்களின் பேசு பொருளாக மாறியது. இதை  அடுத்து அறிவிப்பு மாறுகிறது .ஆன்லைன் வகுப்புகள் அல்ல , தொலைக்காட்சி சேனல்கள் வழியாக பாடங்கள் கற்பிக்கப்படும் என்ற செய்தி பரவுகிறது. 


ஆசிரியர்கள் கருத்து 


அனைவருக்கும் ஆன்லைன் கல்வி சாத்தியமாகாது. ஆனால் தொலைக்காட்சிக் கல்வி   அனைவருக்கும் சாத்தியம்,பள்ளி நேரம் போல் நீண்ட நேர வகுப்புகள் பயன்தராது. அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் இருக்கலாம் என்ற கருத்தும் ஆசிரியர்களிடம் நிலவுகிறது. 


ஆனால் மற்றொரு புறம் மின்சார வசதியற்ற  , தொலைக்காட்சி வசதியற்ற  , இந்த குறிப்பிட்ட ஒளிபரப்புகள் வசதி  இல்லாத குழந்தைகளது வாழிட சூழல் ஒரு புறம் . 


அதே போல் பாடம் கற்றுக் கொள்ள மாணவர்கள் முன்வருவார்களா என்ற உரையாடலில் வந்து விழுந்த பதில்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. 


உணவுக்கே வழி இல்லாத குழந்தைகள் தொலைக்காட்சி வழியாக எதனைக் கற்க முன்வருவார்கள் ? தங்கள் பெற்றோர்களோடு வேலைக்குச் செல்லும் மாணவர்கள் வீட்டில் டிவி பார்த்து பாடம் கற்றுக் கொள்வது இயலாத காரியமே . டிவி வழியே கார்ட்டூன் / திரைப்படங்கள்  பார்ப்பதும் கல்வி கற்பதும் ஒன்றல்ல இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


ஏற்கனவே அரசின்  கல்வித் தொலைக்காட்சிகள்  வழியாக நீட் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தனது வாழ்நாள் லட்சியமாக மருத்துவக் கனவைக் கொண்டிருக்கும் குழந்தைகள் கவனமுடன் அவற்றைப் பார்த்து கற்றலில் ஈடுபடுவது எதிர்பார்க்கலாம். ஆனால் முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடங்களை கவனிக்க வைப்பதற்கான எந்தத் திட்டமிடலும் நம்மிடம் இல்லை. இது பயன் தக்க வகையில் கொண்டு செல்வது நமக்கு மிகப் பெரிய சவால் தான் என்கின்றனர். 


கற்றல் - கற்பித்தல் நிகழ்வு தொலைக்காட்சி வழியே சாத்தியமா 


கற்பித்தலும் கற்றலும் நிகழ உயிரோட்டமான வகுப்பறை மிகவும் அவசியம் என்பதை அனைவரும் அறிவோம் .இங்கு கற்பித்தல் மட்டுமே நிகழும் .


கல்வியைக் கற்கும் போது அது கேள்விக்கு உட்படுத்தப் படும் நிலைக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும் என்கிறார் தோம் சாம்ஸ்கின் என்ற கல்வியாளர். 


அப்படி எனில் மாணவர்கள் பேசாத வகுப்பறைகளே இந்த ஆஃப் லைன் வகுப்புகளான தொலைக்காட்சி வகுப்பறைகள் . கற்றலின் படி நிலைகள் ஏதுமின்றி எந்திரத் தனமாக ஒருவர் பேசி வகுப்பு எடுப்பதை எவ்வளவு நேரம் மாணவர் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை. ரிமோட் கன்ட்ரோலில் சண்டை போடும் வீடுகள் பெருகியுள்ள கொரோனா காலத்தில் மாணவர்கள் குறிப்பிட்ட சேனலில் பாடம் பார்ப்பானா அல்லது பிடிக்கவில்லை என்றால் ரிமோட் டில் மாற்றி சினிமாப் படத்தைப் பார்ப்பானா என்பதெல்லாம் அடுத்த வினாக்கள்.


ஒவ்வொரு பாடத்திற்கும் வேறு வேறு கற்பித்தல் முறைகள் , கற்றல் படிநிலைகள் உண்டு. சந்தேகம் வரும் மாணவனுக்கு சற்று புரிய வைத்து பாடம் நடக்கும் நிஜ வகுப்பறைகள் தான் கற்றலுக்கு வழி வகுக்கும் .இந்த பிம்ப வகுப்பறைகளை  ஏதோ யாருமே பார்க்க வில்லை என்றாலும் படம் ஓடும் தொலைக்காட்சி வகுப்பறைகளாகவேக் கருதலாம். 


புரிதல் , உட்கிரகித்தல் , குழுப் படிப்பு , தேடுதல் , ஆய்வு மனப்பான்மை , மாணவர் -ஆசிரியர் பகிர்வு இவற்றை உள்ளடக்கிய வகுப்பறைகளுக்கு மாற்றாக மேற் சொன்ன வகுப்பறைகளைப் பார்க்கவே முடியாது. 



மத்திய அரசின் வழிகாட்டுதலில் நாடு முழுவதும் ஆன் லைன் வகுப்பறைகள் உருவாகி வருவதன் மற்றொரு பரிமாணமே இந்த தொலைக்காட்சி வகுப்பறைகள் என்கின்றனர் கல்வியாளர்கள்.   எதிர்காலத்தில் ஆசிரியர் பணியிடங்களை துடைத்து வளரும் வர்த்தகக் கல்வியாக மாறிவிடும் அபாயத்தின் ஆரம்பமாகப் பார்க்கின்றனர். 


ஒக்லஹாமா பல்கலைக் கழக உளவியல் வல்லுநர் டக் வாலன்டினா  கூறும் முடிவுகளுடன் கட்டுரையை நிறைவு செய்யலாம் .மாதக் கணக்கில் ஆன்லைன்/ ஆஃப்லைன் வகுப்பறையில் கல்வி கற்கும் குழந்தையின் மனதில் , பின்வரும் மூன்று முடிவுகள்  உருவாகின்றன என்கிறார். 


 வாழ்க்கை என்பது தனக்கும் கருவிகளுக்குமானது. மனிதர்களுக்கும்  எனக்கும் சம்மந்தமில்லை என்ற நிலைப்பாட்டை ஒரு குழந்தை எடுக்கிறது. ஆகவே பெற்றோரிடம் பேச வேண்டுமென்றால்  டெக்ஸ்ட் மெஸேஜ் வழியாகப் பேசலாம் எனத் தோன்றி. வெளியுலக மனிதரிடம் தனது தொடர்பை விரும்பாமல் போகும் மனநிலை உருவாகிறது. இது ஒருவிதமான  மனநிலை, இதனால்   மரணத்தில் கூட அவர்களது வாழ்க்கை முடியும் அபாயம் உள்ளது. 


அடுத்து ஆன்லைன் கல்வியைத் தொடரும் ஒரு குழந்தை, தானா எல்லாம் நடந்து கொண்டுள்ளது.  நம்மால் இதை நிறுத்தவே முடியாது , ஆசிரியரிடம் பேசவோ கேள்வி கேட்கவோ  முடியாது , அதே போல் தான் சமூகமும் போல , தனக்கு நடக்கும் எதிலும் தான் தலையிட முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுகிறது.  குழுவாக இயங்க முடியாமல் சமூகமாக வாழக் கற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இது மிகப்பெரும் ஆபத்து. 


மூன்றாவது முடிவாக மாதக் கணக்கில் ஆன் லைன் கல்வியில் கற்கும் சூழலில் கற்றல் - எதிர்ப்பு (Anti Education) மனநிலைக்கு அக்குழந்தை தள்ளப்படுகிறது . இதனால் எதையுமே கற்றுக் கொள்ளாமல் எல்லாவற்றின் மீதும் குழந்தைக்கு சலிப்பு ஏற்படுகிறது. 


இவற்றை எல்லாம் இன்றைய ஆன்லைன் / ஆஃப்லைன் கல்வி முயற்சியில் மனதில் இருத்த வேண்டி உள்ளது. 


உமா



 






No comments:

Post a Comment