குழந்தைகளுடன் உரையாடுவோம் 7
தாய் மொழி வழிக் கல்வியின் அவசியம்
உலகத் தாய் மொழி தினமாகக் கொண்டாடப்படும் பிப்ரவரி 21 ஆம் நாளான இன்று இது குறித்த உரையாடலைத் துவங்குவது பொருத்தமானதாக இருக்கும்.
கல்வி என்றாலே ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சி என்று சுருக்கமாகக் கூறி விடலாம் . அப்படியான ஆளுமை வளர்ச்சியை வெளிக் கொண்டு வருவது தான் பள்ளிக் கல்வியின் நோக்கமாக இருக்கின்றது. இவை செயலாக வேண்டுமானால் ஒரு குழந்தை தனது பள்ளிக் கல்வியை தாய்மொழி வழிக் கல்வியில் பெற வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் .
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மிகப் பெரிய பள்ளியில் 6 ஆம் வகுப்பு சேர்க்கையில் தமிழ் வழியில் 8 குழந்தைகளும் , ஆங்கில வழி 110 குழந்தைகளும் சேர்ந்திருந்தனர் இந்தக் கல்வி ஆண்டில் .
ஆங்கில வழியில் படிக்கும் வினோதினி , பிரியதர்சினி இருவரும் கணக்கு பாடத்தில் பாட ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க ஆசிரியரது அறையில் சந்தித்தனர் . அது பொருட்களின் சமச்சீர் ( Symmetry ) குறித்த பாடப்பகுதி . ஆசிரியர் ஆங்கிலத்தில் விளக்கம் தந்து குழந்தைகளைப் பார்க்கும் போது அவர்களுடைய குழப்பமான முகத்தைக் காண முடிந்தது. தமிழில் சொல்ல முற்படுகிறார் ஆசிரியர் .அவர்கள் மிஸ் , தமிழில் சொன்னா தான் எங்களுக்குப் புரிகிறது என்று சொல்கின்றனர். பிறகு ஆசிரியர் தமிழில் விளக்க குழந்தைகளின் முகத்தில் ஆயிரம் விளக்குப் பிரகாசத்தைக் காண முடிந்தது. அதற்குக் காரணம் தாய்மொழி தான் புரிதலுக்கு ஆதாரமான மொழி என்பதே. 110 குழந்தைகளும் தாய் மொழிவழிக் கல்வியில் கல்வி பெற்றால் அனைவருமே வைரங்களாக ஜொலிக்கும் வாய்ப்புகள் உண்டு. இதை உணர்ந்த பல நாடுகள் தங்கள் பள்ளிகளில் கட்டாயத் தாய் மொழி வழிக் கல்வியைப் பின்பற்றுகின்றனர் .அங்கெல்லாம் கல்வி சிறந்து விளங்குகின்றது.
தாய் மொழிக் கல்வியால் தான் இன்று நான் என் கனவுகளை அடைய முடிந்தது என்கிறார் அரசுப் பள்ளி தமிழ் வழிக்கல்வியில் பயின்று விண்வெளி வீரராகப் பயிற்சி பெற்று வரும் தமிழக மாணவி உதய கீர்த்திகா . தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் அரசு பள்ளியில் தமிழ் வழியில் தனது பள்ளிக் கல்வியைப் பயின்றார் இவர். படிக்கும் காலத்தில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெளி இடங்களுக்கு சென்று பலரையும் சந்தித்து பல விதமான அனுபவங்களையும் பெற்றது குறித்து பகிர்ந்து கொண்ட இவர் அதற்கெல்லாம் எனக்கு உந்துதலாக இருந்தது தாய்மொழிக் கல்வியில் பயின்றது தான் என்கிறார். அறிவியலில் விண்வெளி குறித்த தேடல் இவரை பல புத்தகங்களைத் தேட வைத்து விண்வெளி ஆய்வு குறித்து கட்டுரைகளைப் படைக்க வழிகோலியிருக்கிறது. பள்ளிக் கல்வியில் 10 , 12 ஆம் வகுப்புகளில் உதயகீர்த்திகா விண்வெளி குறித்தான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO)நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். எழுதி அனுப்பிய இரண்டு கட்டுரைகளும் இரு முறைகளுமே முதலிடம் பெற்றிருக்கிறது. அதன் அடுத்த கட்ட நகர்வாக, உக்ரைன் நாட்டில் உள்ள ' கார்க்கிவ் நேஷனல் ஏர் ஃபோர்ஸ் யுனிவர்சிடி' என்ற அந்நாட்டு விமானப்படைப் பல்கலைக்கழகத்தில் "ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங்" என்ற 4ஆண்டுக் கால சிறப்புப் பொறியியற் கல்வி பயின்று, இறுதியாண்டு தேர்வில் 92.5 சதவீதம் மதிப்பெண் பெற்று முதல் தரத்தில் தேர்ச்சியடைந்துள்ளார். தற்போது விண்வெளி ஆய்வு குறித்து உயர் கல்வி பயில போலந்து நாட்டில் உள்ள "அனலாக் அஸ்ட்ரோநட் டிரெயினிங் சென்டர்" என்ற விண்வெளி வீரர்கள்களுக்கான பயிற்சி மையமும், அந்நாட்டு ராணுவ அகாடமியும் உதயகீர்த்திகாவுக்கு, இரண்டு மாதங்கள் 10 விதமான விண்வெளி வீரர் பயிற்சி தந்துள்ளன. தற்போது மீண்டும் விண்வெளிக்குச் செல்லும் முயற்சியில் இறங்கியுள்ள இவர் அதற்காக பைலட் பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான படிப்பில் டெல்லியில் இணைந்துள்ளார் .ஆங்கில வழிக் கல்வியின் மீது மக்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்த காலத்தில் தான் உதய கீர்த்திகாவும் தாய்மொழி வழிக் கல்வியில் கல்வி பயின்று இந்த உயரத்தை அடைந்துள்ளார்.
இவரது கனவு மெய்ப்பட்டு தற்போது தமிழகத்தின் பெரும்பான்மையான ஊடகங்களாலும் பேசப்படுகிறார். இவற்றிற்கெல்லாம் காரணம் தனது தேடலுக்கான களம் தாய்மொழி வழிக் கல்வியிலிருந்து தான் கிடைத்தது என்கிறார் .
ஒரு குழந்தை பிறந்து பள்ளி வரும் வரை தனது வீட்டில் கேட்பது , பேசுவது , பார்ப்பது என அனைத்தும் தாய்மொழியுடன் தான்தொடர்புடையதாக உள்ளது. பள்ளிக்குள் வந்த பிறகும் ஆசிரியர் , நண்பர்கள் , தான் சார்ந்திருக்கும் சமூகம் என அனைத்து தொடர்புகளும் தாய்மொழியுடன் இணைந்ததாகவே இருக்கின்றது. குழந்தைகளின் சிந்தனை , செயல்பாடு ,அறிவுத் திறன் அனைத்தும் தாய்மொழி வழியாகவே மேம்படுகிறது. ஆகவே தான் குழந்தைகளுக்கு தாய் மொழி வழிக் கல்வி அவசியமாகிறது .
ஐரோப்பிய நாடுகள் முழுமையும், சீனா, ஜப்பான், கொரியா, இந்தோனேசியா, தென் அமெரிக்கா நாடுகள் மற்றும் பல மொழிகள் பேசும் சிறு சிறுத் தீவுகள் கூட தாய் மொழி வழிக் கல்விக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அறிவியல் ஆய்வுகளின் படியும் குழந்தை உளவியல் சார்ந்தும் தாய்மொழிக் கல்வி தான் அடிப்படை வகுப்புகளில் அவசியமானது என்பது புலனாகிறது.
தாய் மொழியில் ஆழமான புலமை பெறுபவர்களால் பன்மொழிப் புலமை பெற்றவராக மாற முடிகிறது. தாய்மொழிக் கல்வியில் ஒரு குழந்தை தெளிவுற கற்றலை மேற்கொள்வதைத் தொடர்ந்து எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் திறம்படக் கற்க முடியும். தன் சமூகம் சார்ந்த பண்பாடு சார்ந்த ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதில் தான் ஒவ்வொருவரின் சிந்தனையும் தெளிவு பெறும். வேறெந்த மொழியில் ஒருவர் திறம் பெற்றவர்களாக இருந்தாலும் அவரது மூளை எந்த ஒரு தகவலையோ செயலையோ முதலில் தாய் மொழியில் தான் சிந்திக்கும் , பிறகு வேறொரு மொழியுடன் இணைப்பை ஏற்படுத்தி தொடரும் என்பது அறிவியல் நிரூபணம் .
பள்ளிப் படிப்பில் நம் தாய்மொழியான தமிழ் மொழியை ஐந்து வித பாடங்களில் ஒரு பாடமாக எண்ணாமல் , நமது அடையாளமாகப் பார்க்க வேண்டும். அதன் பழமையும் பெருமையும் பண்பாட்டுத் தளத்தில் அதற்கே உரிய இடமும் என பல கோணங்களில் அதை அணுகுவதற்கான மனநிலையை பள்ளிக் கல்வியின் வழியே தான் பெற முடியும். அதன் வழியே பெறும் அனுபவம் , திறன்கள் தான் மற்றொரு மொழியையும் கற்றுக் கொள்ள நேசிக்கத் தேவையான சூழலையும் உருவாக்கித் தரும். தாய் மொழிவழிக் கல்வி குறித்து மிகப் பெரிய உரையாடலை மாணவர் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் உருவாக்க வேண்டும்.
தாய்மொழி வழிக் கல்வியால் தான் சுதந்திரமான சிந்தனை உருவாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் . படைப்பாற்றல் வேர் விட ஆரம்பித்து தான் வாழும் சமூகத்தை நேசிக்க ஒவ்வொருவருக்கும் தாய்மொழி வழிக் கல்வியை உறுதியாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்து குழந்தைகளும் உதய கீர்த்திகளாக்களாக உருவாக முடியும். நல்லதொரு சமுதாயம் உருவாகும்.
சு.உமாமகேஸ்வரி
அன்பாசிரியர் (இது நல்லா இருக்கே )
No comments:
Post a Comment