Thursday, 18 March 2021

குழந்தைகள் பாதுகாப்பு

 குழந்தைகள் பாதுகாப்பு 


தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தான பயிற்சிகள் தற்போது அரசுப் பள்ளி

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 


நாம் கற்றல் - கற்பித்தல் குறித்த உரையாடலைத் துவங்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. 


ஒரு குழந்தை தனது வீட்டை விட்டு பள்ளிக்கு  வந்து கற்றலில் ஈடுபடுதல் எவ்வளவு   முக்கியத்துவம் பெறுகின்றதோ அந்த அளவிற்கு  அவர்களது பாதுகாப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கொள்ளப் பட வேண்டும். 


பள்ளிக்கு வரும் குழந்தைகளை அவர்கள் வீட்டிற்குச் செல்லும் வரை மனதளவிலும் உடலளவிலும் பாதுகாப்பு உணர்வுடன் அவர்கள் உணரும் படி  கவனமாகக் காப்பது பள்ளி சார்ந்த அனைவரது கடமையுமாகிறது. 


குழந்தைகள் பாதுகாப்புடன் தானே இருக்கின்றனர் என நாம் எண்ணலாம் . ஆனால் அன்றாடம் நாம் செய்திகளில் கேட்பது பார்ப்பது குழந்தைகளுக்கான பாதுகாப்பு எந்த அளவிற்கு பின்பற்றப் படுகிறது , கவனம் கொள்ளப் படுகிறது என்பதனை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. 


ஆங்காங்கே நடக்கும் சில உண்மை  நிகழ்வுகள்  


எங்கள் பள்ளியில் ஜன்னல் டைமன்ட் வடிவில் டிசைன் செய்யப்பட்ட கட்டிட அமைப்புடன் உள்ளது. ஒரு நாள் திடீரென குழந்தை ஒன்றின் கூச்சல் , ஒடிச் சென்று பார்த்தால்

முதல் வகுப்பு படிக்கும் குழந்தை தனது  தலையை அந்த டைமன்ட் வடிவ துளைக்குள் நுழைத்து விட்டாள். அன்று பார்த்து உயர் கல்வி அலுவலரின் பள்ளிப் பார்வையிடல் வேறு , இந்தக் குழந்தையின் செயல் கண்டு 

பதட்டத்தில் இருந்தோம், ஒரு வழியாக தலையை அமுக்கி , வெளியில் எடுப்பதற்குள் படாத பாடு பட்டு விட்டோம். 


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நடுநிலைப் பள்ளியில் நடந்தது , மதிய உணவு இடைவேளையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில்  ஒருவனைக் காணவில்லை. 4ஆம் வகுப்பு படிக்கும் அவன் வீட்டிற்கு வரவில்லையென பெற்றோர் தேட ஆரம்பித்த நேரம் தான் தெரிந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த போது தலைமை ஆசிரியரைப் பார்த்து பயந்து கட்டிடத்தின் பின்புறம் ஒளிந்து கொள்ளச் சென்ற அந்தக் குழந்தை அங்கிருந்த செப்டிக் டேங்க்கிற்குள் கால் வைத்து உள்ளிழுக்கப்பட்டு இறந்தே போய் விட்ட சோகம். 


சென்னை அருகே நலத்துறை பள்ளி, அது தொடக்க வகுப்புக் குழந்தைகள் பயில்கின்ற பள்ளி . பள்ளிக்கான இரு கட்டிடங்களுக்கு இடையே பொது வழிச் சாலை இருக்கிறது. சிறுநீர் கழிக்கும் இடைவேளை நேரத்தில் தினமும் குழந்தைகள் ஒரு பக்கத்திலிருந்து சாலையைக் கடந்து தான் மற்றொரு பக்கம் செல்ல வேண்டும் . மிகவும் கவனமாகத் தான் ஆசிரியர்கள் குழந்தைகளை கவனிக்கின்றனர் .இருப்பினும் ஒரு நாள் முதல் வகுப்பு குழந்தை இடை வேளை முடிந்து வகுப்புக்கு வந்த பிறகு மீண்டும் கழிப்பறை நோக்கிச் செல்ல , எங்கிருந்தோ வந்த மின்னல் வேக இரு சக்கர வாகனம் குழந்தையை இடித்து தூக்கி அடிக்க குழந்தையின் கால் ஒடிந்து எலும்பு வெளிவந்து துருத்திக் கொண்டு இரத்த வெள்ளம். இரட்டிப்பு மின்னல் வேகத்தில் அந்த ஆசிரியர் குழந்தையை காத்து மருத்துவ மனைக்குச் சென்று 3 நாள் கூடவே இருந்து காப்பாற்றிய கதை நம்மை நெகிழ வைக்கிறது.


ஹோம் ( Home) என்று கூறப்படும் விடுதியிலிருந்தும் பல குழந்தைகள் பள்ளிக்கு வருவார்கள். அப்படி ஒரு பள்ளியில் ஒரு மாணவன் 4 நாட்களாகப் பள்ளிக்கு வராமல் இருந்துள்ளதை வகுப்பு ஆசிரியர் விடுதிக் காப்பாளர் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது அவன் தினமும் விடுதியிலிருந்து பள்ளிக்கு உரிய நேரத்தில் வாகனத்தில் வந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 5 ஆம் நாள் ஒரு வேன் முழுக்க , அந்தக் காணாமல் போன குழந்தையின் பெற்றோர் உறவினர் கூட்டமாக வந்து தலைமை ஆசிரியரிடம் 60000 அறுபதாயிரம் பணம் கொடுங்க , குழந்தையைத் தேட வேண்டும் என மிரட்டியிருக்கின்றனர். தலைமை ஆசிரியர் சரியாக ஒரு வேலை செய்துள்ளார் , மாணவனின் தம்பி அதே பள்ளியில் முதல் வகுப்பு படிக்கிறான் ,விடுதியிலிருந்து தான் வருகிறான். அவனை அழைத்து  அண்ணன் எங்கே என விசாரிக்கப் போக , நேற்று இரவே வீட்டுக்குச் சென்று விட்டான் என்று உண்மையைக் கூறியுள்ளான். இப்படி பணத்திற்கான ஏமாற்று வேலையும் பெற்றோரால் நடத்தப் படுகிறது. 


நெல்லை அருகே ஒரு பள்ளியில் மேல் வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் தங்களுக்குள் அடி தடி போட்டுக் கொள்ளும் வீடியோ தற்போது பரவலாகி வருகிறது. 


பெண் குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் ஆசிரியர்கள் பற்றிய செய்தி அவ்வப்போது செய்தித்தாட்கள் தாங்கி வருகின்றன. 


சென்னைக்குள் ஒரு தனியார் பள்ளியில் வருடக் கணக்கில் நடந்து வந்த  கொடுமை பெரிய பிரச்சனைகள் எழுந்து முடிவில்லாமல் நிற்கின்றன.  ... பள்ளிக்கு அழைத்து வரும் வாகன ஓட்டுநர் , ஆயா இவர்கள் இணைந்து 3 , 4 வயதுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் முன்னர் , வேறிடத்திற்கு அழைத்துப் போய் கை , கால்களை கட்டிப் போட்டு உடலின் மறைக்கப்பட்ட பாகங்களில் குழந்தைகளுக்கு இம்சை அளித்து அதைக் காணொலியாக மாற்றி விற்கும் அபாய நிகழ்வுகளையும் நாம் கடந்து தான் போகிறோம். 


இந்த வருடம் ஒரு பொதுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவி அறிவியல் ஆய்வகத்தில் வைத்திருந்த ஆசிட் பாட்டில் மீது  தனது உடையால் தெரியாமல் கீழே விழுந்து முகம் காப்பாற்றப்பட்டாலும் பார்வைப் பிரச்சனைக்குரிய ஒன்றாகிவிட்டிருப்பது மிகச் சமீபத்திய செய்தி .


பள்ளி வாகனத்திலிருந்து அழைத்துச் செல்லும் போது பேருந்தின் ஓட்டை வழியே தவறி விழுந்து இறந்த குழந்தை என்று அடிக்கடி செய்தியைப் பார்க்கிறோம். 


பல வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் நடந்த தீ விபத்து, தரமற்ற பாதுகாப்பற்ற கட்டிடத்தால்  93 குழந்தைகளைக்  கருக்கிய நிகழ்வு கல்வி வரலாற்றின் கருப்புப் பக்கம் என்றே பார்க்கலாம் .


இப்படியான நிகழ்வுகள் அன்றாடம் எங்கோ ஒன்று தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளன. 


அரசு / கல்வித்துறை சார்ந்த  முயற்சிகள் 


பள்ளிக் கட்டமைப்பு சார்ந்து , சமையல் அறை , கழிவறை , ஆய்வகம் ,   குடிநீர் , மின் சாதன அமைப்பு, விளையாட்டு மைதானம் , சுற்றுச் சுவர் வாயில் கதவு, பள்ளி வளாகம்  மற்றும்  சுற்றுப்புறங்கள் , மாற்றுத் திறனாளிகளுக்கான ஏதுவான வசதிகளை ஏற்படுத்துதல் குறித்தான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு துறை வழியாக  பள்ளிக்குள் தொடர்ந்து வலியுறுத்தி தான் வருகின்றது.  , தீத்தடுப்பு மேலாண்மை குறித்த நடவடிக்கைகள்  , நில நடுக்க மேலாண்மை குறித்த விழிப்புணர்வு , மாணவ / மாணவிகள் நீர் நிலைகளில் மூழ்கும் அபாயத்தைத் தவிர்க்க வழிகாட்டுதல்கள் , கட்டடப் பணிகள் பள்ளி வளாகத்தில் நடைபெறும் போது மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வழியாக தொடர்ந்து தரப்படுகின்றன. 


அதே போல பள்ளிப் பேருந்து பாதுகாப்பு , பேருந்து ஊழியர்களின் பணித் தன்மை  , காவல் துறை சரிபார்ப்பு சான்றிதழ் பெற்ற ஓட்டுநர்கள் எனவும் ஓட்டுநர் உரிமம்  அனுமதி சான்று என அனைத்தும் வலியுறுத்தப்படுகின்றன.


ஆரோக்கியம் சுகாதாரம் சார்ந்தும் குழந்தைகளை பரிசோதிப்பது , நோய் தடுப்பு மருந்துகள் தருவது , நுண்ணூட்டப் பொருட்கள் மேலாண்மை , மாதவிடாய் சுகாதார மேலாண்மைகள் , கை கழுவுதல் , கழிவறை சுத்தம் , மதிய உணவு பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்புத் திட்டம்  என்ற அளவிலும் பலவாறு திட்டங்கள் , செயல்பாடுகளைச் செய்கின்றன. 


உளவியல் மற்றும் சமூக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு , குழந்தைகளுக்கு  உடல் ரீதியான தண்டனை , மிரட்டுதல் கொடுமைப்படுத்துதல் , தனிமைப்படுத்துதல் , தவறாக பயன்படுத்துதல் (Abuse) , பாலியல் வன்முறை , சார்ந்தும் தடுப்பு முயற்சிகள் தொடர்ந்து தருகின்றனர் துறை அலுவலர்கள். ஆனாலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல்கள் உருவாகி வருகின்றன.


தடுப்பதில் ஆசிரியரின் பங்கும் கடமைகளும் 

சட்ட திட்டங்கள் ஆயிரம் இருப்பினும் எல்லா சிக்கல்களையும் எதிர்கொள்வது  களத்தில் பணிபுரியும் ஆசிரியர்களே. ஆகவே கற்றல் - கற்பித்தலில் கவனமாக இருப்பது போல பள்ளிக்குள் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் தான். அவற்றுக் கான பொறுப்புகளையும் தங்கள் பங்கையும் முழுமையாகத் தர வேண்டி உள்ளது. 



கண்காணித்தல் 

பள்ளி அளவில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகள் பின்பற்றப் படுவதை பள்ளி மேலாண்மைக் குழுவால் (SMC) -(school management committee)

கண்காணிக்கப்பட வேண்டும். அதோடு பெற்றோர் ஆசிரியர் கழகமும் (PTA- Parents Teachers Association) இணைந்து கொள்ளலாம் . பள்ளி நிர்வாகம் வட்டார அளவில் , மாவட்ட அளவில் , மாநில , தேசிய அளவில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கான பாதுகாப்பை 100% உறுதி செய்ய பொதுமக்கள் இணைந்துள்ள இந்த SMC ,PTA ஒத்துழைக்க வேண்டும். 


கல்வித் துறை 14417 என்ற இலவச தொலைபேசி சேவையை பள்ளிக் கல்வியின் வாயிலாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர்கள் பெற்றோர்கள் பயன்பெறும் வகையில் வழங்கியுள்ளது .. 


இவை போல பள்ளிக் குழந்தைகளது மன , உடல் நலன் சார்ந்த பாதுகாப்பை கல்வித்துறையுடன்  இணைந்து பொது மக்களும் உறுதி செய்திட முன்வந்தால் நம் வீட்டுக் குழந்தைகள் எல்லா இடங்களிலும் பாதுகாப்பாக உணர்வார்கள் .


உமா





No comments:

Post a Comment