ஒதுக்கீடு தந்து கல்வி வாய்ப்பை சுருக்கியதை அறிவோமா ?
அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு .
தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் , பல் மருத்துவம் , இந்திய மருத்துவம் , ஓமியோபதி ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கைச் சட்டம் - 2020 என்ற சட்டத்தைக் கொண்டு வருவதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் சட்ட வடிவம் பெறும் என்பதை அரசு வெளியிட்டுள்ளது .
இதற்காக நாமும் நன்றி தெரிவிக்கலாம் , ஆம் ஒரு சடங்காக வேண்டுமெனில் .இதனை அனைத்து தரப்பிலும் வெற்றியாக எண்ணி மகிழ்ந்து வரும் சூழல். ஆனால் இதை எண்ணி, நமது தமிழகத்தின் கல்வி நிலையைக் குறித்து நாம் வேதனை தான் கொள்ளவே வழிகள் உள்ளன.
நீட் தேர்வே வேண்டாம் எனக் கூறி எதிர்ப்புக் குரல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் காலச் சூழலில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு என அறிவித்து நம்மை யாசகம் பெற வைத்தது போலாக்கி இருக்கும் சூழலை என்னவென்று சொல்வது ?
நாட்டின் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளே . ஒப்பீட்டு அளவில் நாட்டின் மொத்த பள்ளி செல்லும் குழந்தைகளில்
75% குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் தான் படிப்பர். ஆனால் அவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டிற்கே இத்தனை நெருக்கடிகள். எத்தனை முரண்பாடுகள் நம்மை விழுங்கிக் கொண்டுள்ளன.
கல்வியை இலவசமாக நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய அரசின் தலையாயக் கடமைக்கே தேசிய அளவில் இரும்புக் கோட்டை போல பல தரப்பு சிக்கல்கள் . இது போன்ற நடைமுறை சிக்கலை உருவாக்கி மருத்துவக் கல்வியை ஏழை மாணவர்கள் ஏக்கமாகப் பார்க்கும் விதத்தில் வடிவமைக்க வேண்டிய அவசியம் என்ன ?
சமூகத்தில் ஒரு மாணவன் நினைத்ததைப் படிக்கக் கூடிய கல்விச் சூழலை உருவாக்குதல் தானே குடியரசு நாட்டின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும். ஆனால் நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கல்வியை வியாபாரமாக்கி , குறைந்தது 2 வருடங்களாவது ஒரு மாணவன் உயிரைப் பணயம் வைத்து படித்து நீட் தேர்வின் வழியாகத் தான் மருத்துவராக முதல் அடியைக் கல்லூரிக்குள் எடுத்து வைக்க வேண்டும் என்பதில் குறைந்த பட்ச நியாயம் கூட இல்லை.
கடந்த வருடம் தவறான முறையில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பைத் துவங்கிய மாணவர்களைக் குறித்து என்ன செய்தி என , ஆதார் எண் வைத்து கூட கண்டறிய முடியவில்லை என்று செய்திகள் வெளியாகின்றன.
கடந்த வருடம் அரசுப் பள்ளியில் பயின்று ஆனால் அதன் பிறகு ஒரு வருடம் தனியார் பயிற்சி மையத்தில் பயின்று தான் மாணவர் ஜீவித்குமார் நீட் நுழைவுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர் வரிசையில் முதலிடம் பெற்றுள்ளார்.
பல லட்சம் செலவு செய்து தான் அந்தப் படிப்பைப் படிக்க முடியும் என்று பணக்காரப் படிப்பாக்கி விட்டு எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக்கி விட்டதை எந்த விதத்தில் சமூகத்தின் நீதியாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும் ?
ஒரு பக்கம் அரசியலாக இந்த நீட் தேர்வு பிரம்மாண்டமாக உருவெடுத்து நாட்டு மக்களை உளவியல் சிக்கலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாக்கி வருகிறது. எத்தனையோ குழந்தைகளும் உயிரை மாய்த்து அவற்றிலிருந்து புதிய புதிய அரசியல் போட்டிகள் உருவாகின்றன. ஆனால் இதை மிகச் சாதாரணமாக குழந்தைகளின் விருப்பமாக , கனவாக அவற்றுக்கு வழி வகுக்கும் கல்வி முறையாக உருவாக்க யாருமே செயல்படவில்லை என்பது தான் இந்தக் கல்வி முறையின் சாபமாக இருந்து வருகிறது.
மீண்டும் மீண்டும் நாம் கூறுவது ஒன்றே தான் , கல்வியை வியாபாரமாக மாற்றாதீர்கள் . கல்வியை எல்லோருக்குமானதாக மாற்றுங்கள். தனியார் மயத்தை ஒழித்து அரசு தனது மக்களுக்கான கல்வியை இலவசமாக மாற்ற வேண்டும்.
அரசு பள்ளி மாணவர் , தனியார் பள்ளி மாணவர் என்ற இருவரது பெற்றோர் தரப்பினரிடையே, உள்ள பொருளாதார , தொழில் , கல்வி போன்ற இடைவெளியைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரிடையே சமநிலையை உருவாக்க உள் ஒதுக்கீடு தேவை என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் குறைந்தது 50 சதவீதமாவது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு அவசியம். அப்போது தான் மருத்துவக் கல்வி எல்லா மாணவருக்கும் ஓரளவு எட்டும் என்பதில் ஐயமில்லை.
அதே போல பெற்றோரும் மருத்துவப் படிப்பை மட்டுமே தனது குழந்தைகளின் கனவாக மாற்ற முயலக் கூடாது. இன்று படிப்பது என்பது தான் கல்வி பெறுவதாகப் பார்க்கப் படுகிறது. எந்த வகுப்பு மாணவனாக இருந்தாலும் பாடப் புத்தக அறிவைப் பெற வேண்டும் என்பதே கல்வி முறையாக மாறிப் போனதன் விளைவே நமது இந்த கல்வி முறை அழுத்தத்திற்கான காரணம்.
உயர் கல்வி அனைத்திற்கும் இதே போன்ற நுழைவுத் தேர்வு பற்றி புதிய தேசியக் கல்விக் கொள்கை திட்டமிட்டுள்ளது. என்றால் எல்லா உயர் கல்விக்கும் இதே போன்று தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இனி வரும் காலங்களில் ஒதுக்கீட்டு யாசகம் கேட்டு நிற்க வேண்டுமா ?
எண்ணற்ற கேள்விகளை நமக்குள் உருவாக்கியிருக்கிறது கல்வியின் சூழல். இந்த சூழல்கள் மாறி கல்வி பரவலாக்கப்பட வேண்டும் , ஆனால் தனியார்மயம் ஒழிந்து அரசு வழியே கல்வி பரவலாக்கப்பட வேண்டும் .
மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரியும் விவசாயக் கல்லூரியும் கலை அறிவியல் கல்லூரியும் உருவாகி குழந்தைகள் விருப்பப்படும் கல்வியை ஏற்றத்தாழ்வின்றி கற்றுக் கொள்ள வழிவகை செய்யும் மக்கள் நல அரசுகள் உருவாகட்டும் .
உமா
No comments:
Post a Comment